தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!

வெங்கியை கேளுங்க!


PUBLISHED ON : அக் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

1. நிலவில் மனிதர்கள் வாழ முடியாது எனில் ஏன் இத்தனை ஆராய்ச்சிகள்?

ந.இனியா, 6ஆம் வகுப்பு, வேல்ஸ் வித்யாஷ்ரம், பல்லாவரம், சென்னை.


நிலவில் காற்று இல்லை. எனவே, அங்கே பூமியில் வசிப்பதுபோல வாழ முடியாது. எனினும், எதிர்காலத்தில் மிகப்பெரிய கண்ணாடிக் குமிழ்களுக்குள் செயற்கையாக வாழ்விடங்களை உருவாக்கி, நிலவில் வசிக்கும் நிலைமை ஏற்படலாம். ஆயினும், நிலவில் செய்யப்படும் ஆய்வுகள் எல்லாம், அங்கே சென்று வாழ்வதற்காக மட்டுமல்ல. நிலவு எப்படித் தோன்றியது, அதன் இயக்கங்கள் என்ன என்பன போன்ற பல அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கு விடைதேடி வருகின்றனர். இதற்காகவே, அங்கு ஏராளமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2. ஈர்ப்பு விசையால் வளிமண்டலம் ஈர்க்கப்படும்போது, மேகங்கள் ஏன் பூமியை நோக்கி வருவதில்லை?

டி.பவன் கார்த்திக், 9ஆம் வகுப்பு, ஆர்.வி.மெட்ரிக் பள்ளி, மேலூர்.


கடல் நீரின் மீது இரும்புக் குண்டை எறிந்தால், அது நீரின் உள்ளே மூழ்கி கீழே சென்றுவிடும். அதேபோல், ஒரு ரப்பர் பந்தை எறிந்தால் அது ஏன் மிதக்கிறது, ஈர்ப்பு விசையால் ஏன் கீழே செல்லவில்லை? காற்றடைத்த ரப்பர் பந்தின் திணிவு (அடர்த்தி) நீரைவிடக் குறைவு. நீரைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் எல்லாம் நீரில் மிதக்கும்.

வளிமண்டலம் என்பதும் கடல் நீர் போல ஒரு பாய்மம். காற்றைவிட அடர்த்தி குறைவான பொருட்கள் அதில் மிதக்கும். எனவேதான், வெப்பமான புகை மேலே எழுகிறது. வெப்பம் மிகுந்த நீராவியைச் செறிவாகக் கொண்டுள்ள மேகத்தின் அடர்த்தி, காற்றின் அடர்த்தியைவிடக் குறைவு. எனவே, மேகங்கள் வளிமண்டலத்தில் மிதக்கின்றன.



3. எறும்பின் வாயைவிடச் சிறிய வாய் உள்ள உயிரினம் இருக்கிறதா?

க.சுவாதி, 8ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.


ஃபேரிபிளை (Fairyfly) எனும் ஒரு வகை பூச்சி மிகமிகச் சிறியது. சாதாரண எறும்பைவிட சுமார் 400 மடங்கு சிறியது இந்தப் பூச்சி. மனிதத் தலைமுடியின் தடிமனைப் போல இரண்டு மூன்று மடங்கு பெரியது, அவ்வளவே. மற்ற எல்லா பூச்சிகளையும்போல ஆறு கால்கள், இறக்கை முதலியவற்றைக் கொண்டுள்ளன. இதன் வாய், எறும்பின் வாயைவிட மிகமிகச் சிறியதாக இருக்கும் என்பதைத் தனியாகக் கூறத் தேவையில்லை அல்லவா!

4. நம் அண்டத்தில் எத்தனை பரிமாணங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது?

கோ. க. விஜய், 10ஆம் வகுப்பு, லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்.


நமது இயல்பான பார்வைக்கு, ஆகாய வெளி என்பது மூன்று பரிமாணங்களைக் கொண்டது. முன்னே பின்னே; மேலே கீழே, இடது வலது என, கணிதவியலில் குறிப்பிடப்படும் x,y, z என மூன்று பரிமாணங்களைத் தவிர, காலம் எனும் பரிமாணமும் பிணைந்துள்ளது என்கிறது ஐன்ஸ்டீனது தத்துவம். இதையும் சேர்த்து குறைந்தபட்சம் நமது அண்ட கால-வெளி நான்கு பரிமாணங்களைக் கொண்டது.

கோட்பாடு காலவெளி (String theory) போன்ற நவீன இயற்பியல் தத்துவங்கள் ஆகாய வெளி பதினோரு பரிமாணங்களைக் கொண்டிருக்கும் என்கிறது.

மற்ற பரிமாணங்கள் எல்லாம் அடிப்படைத் துகள்களைவிட மிகமிக நுணுக்கமாக இருப்பதால், நம்மால் அறிய முடிவதில்லை எனவும், எறும்புக்கு மட்டும் நுண் ஓட்டை கண்ணுக்குத் தெரிவதுபோல, அடிப்படைத் துகள்களுக்கு மட்டும் இந்தப் பரிமாணங்கள் காட்சி தந்து, அவை அதில் இயங்குகின்றன எனவும் கருதுகின்றனர்.

ஐன்ஸ்டீன் தத்துவத்துக்குப் பரிசோதனை மற்றும் உற்றுநோக்கல் சான்றுகள் உண்டு. ஸ்ட்ரிங் தியரி போன்றவற்றுக்கு இதுவரை முழுமையான சான்றுகள் இல்லை என்பதால், அவை யூகம் என்ற அடிப்படையில் அறிவியல் ஏற்கிறது. இன்னமும் முழுமையாக விடைதெரியாத கேள்வி இது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us