PUBLISHED ON : அக் 14, 2016
வரலாற்றியலின் தந்தை ஹெரோடோடஸ் (Herodotus). கிரேக்கத்தைச் சேர்ந்தவர். கி.மு.484ஆம் ஆண்டில் பிறந்தவர். பெரிக்ளஸ் என்ற மன்னனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். அவர் பக்கத்து நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்து, அவருடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார். அதுவே வரலாற்று நூல்களுக்கான தொடக்கமாக அமைந்தது.
வரலாற்றியலின் தந்தையாக போற்றப்பட்டாலும், அவர் எழுதிய அனைத்தும் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில் அதில் கற்பனையும் கலந்திருக்கிறது. அப்புறம் எதற்காக அவரைப் போற்றுகிறோம்? அவர்தான் முதன்முதலில் வரலாற்றியலின் பயன்களைப் பட்டியலிட்டார்.
'மனிதனின் செயல்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டும். அவற்றை அடுத்துவரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் எழுதிவைக்க வேண்டும். மனிதனின் செயல்கள் எதுவுமே தற்செயலானவை அல்ல, அதற்கு சில நோக்கங்கள் இருக்கின்றன' ஹெரோடோடஸ் கூறிய இந்தக் கருத்துகள்தான் இன்று நாம் படிக்கிற வரலாற்றுக்கு அடிப்படை.
முதன்முதலாக கற்பனை கலக்காமல் வரலாறு எழுதியவரும் கிரேக்கத்து அறிஞர்தான். அவரது பெயர் தூஸிடைடெஸ்(Thucydides). கி.மு.460ஆம் ஆண்டில் பிறந்தவர். அப்போதைய கிரேக்கத்தில் ஏதென்ஸ்(Athens), ஸ்பார்ட்டா (Sparta) அரசுகளுக்கு இடையே நடந்த 27 ஆண்டு கால போரைப்பற்றி எழுதியவர். அந்த புத்தகம்தான் கற்பனை கலக்காத முதல் வரலாற்றுப் புத்தகம்.
இந்த இரண்டு வரலாற்று ஆசிரியர்களுக்கும் இடையில் இன்னொரு வித்தியாசமும் உண்டு. ஹெரோடோடஸ் கிரேக்கத்தின் பழம்பெருமையை பேசித் திரிந்தவர். தூஸிடைடெஸ், போரின் கொடுமைகளைப் பற்றி பேசி, அது கூடாது என்று வலியுறுத்தியவர். வரலாறு என்பது கடந்தகாலத்தில் என்னென்ன நடந்தன என்று அறிந்துகொள்வது மட்டுமல்ல. வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்கக்கூடாது என்று புரிதலை ஏற்படுத்துவதும் கூட.
- இளவேனில்
