PUBLISHED ON : அக் 14, 2016
நாடுகள் பெரும்பாலும் இனம், மொழி, மதம், கலாச்சாரங்களை அடிப்படையாக வைத்தே தோன்றி இருக்கின்றன. அப்படி தோன்றிய நாடுகளில் ஒன்று வங்க தேசம் (Bangladesh - பங்களாதேஷ்). இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தான், அப்போது கிழக்கு, மேற்கு என இரு நிலப்பகுதிகளாக இருந்தன. புவியியல் அடிப்படையில் இரு பகுதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், வெவ்வேறு இடங்களில் இருந்தன.
1948ல் டாக்காவுக்கு வருகை தந்த அந்த நாட்டின் அதிபர் முகமது அலி ஜின்னா, உருதுமொழி தேசிய மொழியாக இருக்கும் என்று அறிவித்தார். ஆனால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பெரும்பாலும் வங்க மொழி பேசக்கூடியவர்களாக இருந்தனர்.
இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களை கொதிப்படையச் செய்தது. தங்கள் தாய் மொழி மறுக்கப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆட்சி அதிகாரம் முழுக்க மேற்கு பாகிஸ்தானில் மட்டுமே இருந்தது.
நாட்டின் எந்த வளர்ச்சி திட்டங்களும் கிழக்கு பாகிஸ்தானிய மக்களை சென்றடையவில்லை. இதனால் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை அந்தப் பகுதி மக்கள் உணர ஆரம்பித்தார்கள்.
1952ல் வங்காள மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதிலிருந்து உரிமைப் போராட்டம் துவங்கியது. பாகிஸ்தானுக்கு 1971ல் தேர்தல் நடைபெற்றது. ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி, பெரும்வெற்றி பெற்றது. பாகிஸ்தானை ஆளும் உரிமையை, மக்கள் அந்தக் கட்சிக்கே வழங்கினர்.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் அதை மறுத்து விட்டது. முஜிபுர் கிழக்கு பாகிஸ்தான் சுதந்திர நாடாக வேண்டும் என்று அறிவித்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு ஓடிவந்தனர்.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அகதிகளாக இந்தியாவிற்கு வரும் மக்களை எப்படி தடுப்பது என்று யோசித்தார். கிழக்கு பாகிஸ்தானிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார்.
டாக்காவிற்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார். இறுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, டாக்காவை தலைநகராகக் கொண்டு 'வங்கதேசம்' என்ற நாடு உருவானது. வங்க தேசத்தின் சுதந்திர தினம் மார்ச் 26, 1971.
