PUBLISHED ON : அக் 14, 2016
அக்டோபர் 14
உலக தர நிர்ணய நாள் - உலகில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், சேவைகளின் தரம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 15
ஆவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் பிறந்த நாள் - இந்தியாவின் முக்கியமான விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், 11ஆவது குடியரசு தலைவர், சிறந்த ஆசிரியர் என இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர்.
ஜலாலுதீன் முகமது அக்பர் பிறந்த நாள் - முகலாய மன்னர்களுள் புகழ் பெற்றவர். 'தீன் இலாஹி' என்கிற சகிப்புத்தன்மை வழி மதத்தை உருவாக்கினார். இந்தியா என்கிற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பாடத்தை தனது ஆட்சியில் சொன்னவர்.
உலக கை கழுவும் தினம் - சரியாகக் கழுவப்படாத கைகள் கிருமிகளின் இருப்பிடம்! கை கழுவுவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை உருவாக்க இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 16
உலக உணவு நாள் - மக்கள் அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும். பசிப்பிணியைத் துரத்த வேண்டும் என்கிற அடிப்படையான மனிதநேயத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 17
உலக வறுமை ஒழிப்பு நாள் - உலகில் ஏற்படும் அதிக மரணங்களுக்கு காரணம் வறுமை! வறுமையை ஒழிக்கப் போராடிய கத்தோலிக்க பாதிரியார் ஜோசப் ரெசின்கி என்பவரது முயற்சியால் இந்த தினம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 18
மார்டினா நவரத்திலோவா பிறந்த நாள் - மூன்று வயதில் டென்னிஸ் மட்டையை பிடிக்கத் தொடங்கிய செகோஸ்லோவேக்கியா வீராங்கனை. 18 தனிநபர், 40 இரட்டையர் 'கிராண்ட் ஸ்லாம்' பட்டங்களூடன் விம்பிள்டன் பட்டங்களை ஒன்பது தடவை வென்றவர்.
அக்டோபர் 19
நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் - எளிய சொற்களால் தேசபக்திப் பாடல்கள் பாடி, சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தியவர். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டவர்.
சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த நாள் - புகழ்பெற்ற வானியல் இயற்பியலாளர். விண்மீன்கள் பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்க தமிழர். நட்சத்திரங்களின் எடையைக் கணிக்க வழிமுறைகளை வகுத்தவர்!
