PUBLISHED ON : அக் 14, 2016
சரியான வேலையைச் செய்வது - வேலையைச் சரியாகச் செய்வது என்று இரண்டு விஷயங்கள் உண்டு.
எது சரியான வேலை?
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு எந்த வேலை முக்கியமோ அது சரியாக நடக்கும் விதத்தில் செயல்படுவது - சரியான வேலை. உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம். பிராக்டிகல் தேர்வுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அப்போது, தொலைக்காட்சியில், உங்களுக்குப் பிடித்த ஒரு சினிமாவின் காட்சி ஓடுகிறது. அதை பார்க்கவே உங்கள் மனம் விரும்புகிறது. டி.வி. பக்கம் நீங்கள் திரும்பினால், பிராக்டிகல் தயாரிப்பு கெட்டுப்போகும். டி.வி. பார்க்க வேண்டாம் என்று முடிவெடுப்பதே சரியான வேலை, அல்லவா?
இன்னொருபுறம், நீங்கள் அடிப்படையில் எப்படிப்பட்டவர் என்று யோசித்துப் பாருங்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவராக இருக்கலாம். இப்போது பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு அடிபட்டுவிடுகிறது. உடனடியாகப் போய், வேண்டிய உதவியைச் செய்துவிட்டு, பிறகு வந்து பிராக்டிகல் தயாரிப்பைத் தொடர்கிறீர்கள். இதுதான் வேலையைச் சரியாகச் செய்தல்! இல்லை என்றால், 'அந்தக் குழந்தைக்கு உதவப் போயிருக்கலாமோ' என்கிற எண்ணமே உங்கள் வேலைக்குத் தொந்தரவாக அமைந்துவிடக் கூடும்.
இந்த கருத்தில்தான் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலத் தாளில் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். 'The one minute apology' என்பது தலைப்பு.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருக்கிறது. Confederates என்று அழைக்கப்பட்ட மாகாணங்கள் வாஷிங்டன் நகரை முற்றுகை இட்டிருந்த நேரம்.
கர்னல் ஸ்காட் என்பவரும் படையை நடத்தும் பொறுப்பில் இருந்தார். அவர் மனைவி இறந்துவிட்டதாக அவருக்குத் தகவல் வந்தது. ஸ்காட் ஊருக்குப் போயாக வேண்டிய நிலை.
விடுப்புக்கு விண்ணப்பித்தார். கிடைக்கவில்லை. ஸ்டான்டன் என்கிற உயரதிகாரியிடம் கேட்டார். யுத்த கெடுபிடியைக் காரணம் காட்டி அவரும் மறுத்துவிட்டார். இப்படியே ஒவ்வொரு அதிகாரியாக விடுப்பு கேட்டும் கிடைக்காததால், நேரடியாக அதிபர் ஆபிரகாம் லிங்கனையே சந்திக்க முடிவு செய்தார் ஸ்காட்.
ஸ்காட்டின் பிரச்னையைக் கேட்ட ஆபிரகாம் லிங்கன் கடும் கோபத்தில் வெடித்தார்: “நான் நாட்டைக் காப்பாற்றும் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி முடிவுகள் எடுப்பதா? உங்களுக்கு லீவு கொடுப்பதைப் பற்றி முடிவு எடுப்பதா?” என்று கடுமையாகப் பேசி அனுப்பிவிட்டார்.
மறுநாள் காலை, ஸ்காட்டின் அறைக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவைத் திறந்தார் ஸ்காட். அங்கே ஆபிரகாம் லிங்கன் நின்றிருந்தார். ஸ்காட்டின் கைகளைப் பற்றிக்கொண்டார் லிங்கன். “நேற்று நான் மோசமாக நடந்துகொண்டுவிட்டேன். தன்னையே நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கும் ஒரு போர் வீரனிடம் நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார். விடுப்புக்கு ஏற்பாடு செய்து ஸ்காட்டை ஊருக்கு அனுப்பிவைத்தார்.
இப்போது - ஒரு வேலையைச் சரியாகச் செய்வது, சரியான வேலையைச் செய்வது என்கிற இரு விஷயங்களும் உங்களுக்குப் புரிகிறதா?
