PUBLISHED ON : அக் 14, 2016
“நாளையில இருந்து டான்ஸ் கிளாஸ் இருக்கும்மா. 'தேவையான கவரிங் நகை எல்லாம் வாங்கணும், தொகை கொண்டு வாங்க'ன்னு டான்ஸ் மிஸ் சொன்னாங்கம்மா...” என்றாள் கிருத்திகா.
கிருத்திகாவின் அம்மா சாந்திக்கு சிரிப்பு வந்துவிட்டது. “என்ன, 'தொகை' கொண்டு போகணுமா?” என்றார்.
கிருத்திகாவும் புன்னகை செய்தபடியே, “எங்க மிஸ் 'அமௌன்ட்'னுதான் சொன்னாங்க. நான்தான் தமிழ் பயிற்சியா இருக்கட்டுமேன்னு தொகைன்னு சொன்னேன்...”
“சரி, உங்க ஸ்கூல்ல இருந்து ஹோம்வொர்க் பத்தின எஸ்.எம்.எஸ்ஸும் வந்திருக்கு. தொகை நிலைத் தொடர்கள் பத்தி, நீ படிச்சுட்டுப் போகணுமாம்... அதையும் ஞாபகப்படுத்திட்டே...” என்றார் சாந்தி.
“தமிழ் இலக்கணத்துல ஏம்மா அமௌன்ட் பத்தி வருது?”
“நல்ல வேளை, நானும் தமிழ் படிச்சதுனால இந்த சந்தேகத்தை என் கிட்டே கேட்டே. இல்லேன்னா தமிழ் ஆசிரியர்கிட்டே கேட்டு, அவமானப்பட்டிருப்பே...”
“இது நமக்குள்ளே இருக்கட்டும். நீங்க தமிழ் இலக்கணத்துல, 'அமௌன்ட்' எப்பிடி வந்துச்சுன்னு சொல்லுங்கம்மா...”
“சொல்றேன். அதுக்கு முன்னால, தொகைன்னா அமௌன்ட்னு நினைக்கிறதை விடு. இந்த இடத்துல, 'இருக்க வேண்டிய ஒண்ணு கண்ணுக்குத் தெரியாம மறைஞ்சு இருக்கு' அப்டீன்னா, அதுக்கு 'தொகை'ன்னு பேர்” என்றார் சாந்தி.
கிருத்திகாவின் கண்கள் விரிந்தன. “இருக்க வேண்டிய ஒண்ணு மறைஞ்சு நிக்குமா? வார்த்தகள்ல கூட ஹைடு அண்ட் ஸீக் உண்டா?” என்றாள்.
சாந்தி சிரித்துக்கொண்டே, “நகைகள் வாங்கணும்னு சொல்லும்போது நீ என்ன பண்ணிட்டிருந்தே?” என்றார்.
“பால் குடிச்சுட்டிருந்தேன்.”
“அதை இன்னும் தெளிவாச் சொல்லு.”
“பாக்கெட்ல இருந்த பாலைப் பிரிச்சுக் கொட்டி, நீங்க காய்ச்சி, சர்க்கரை போட்டுக் குடுத்த பால் குடிச்சுட்டிருந்தேன்.”
“ஐயோ, ஐயோ... தெளிவாச் சொல்லுன்னா அதில்லை. 'பாலைக் குடித்தேன்' அப்டீன்னுதானே சொல்லணும்? ஆனா, நீ 'பால் குடித்தேன்' அப்டீன்னு சொன்னே இல்லியா? அதுல, 'ஐ'ங்கிறது இருக்கு, ஆனா மறைஞ்சு இருக்கு, இல்லியா? அதுதான் தொகை.”
“சூப்பர்ம்மா.”
“இந்த வாக்கியத்துல 'ஐ'ங்கிறதுக்கு வேற்றுமை உருபுன்னு பேர். அதாவது, பெயர்ச் சொல்லுக்கு (இங்கே 'பால்') வினைச் சொல்லோடு ('குடித்தல்') உள்ள பொருள் தொடர்பை உண்டாக்குவது 'வேற்றுமை உருபு'. இங்கே அது மறைஞ்சு இருக்கறதால, இதை 'வேற்றுமைத் தொகை'ன்னு சொல்வாங்க. அதாவது, வேற்றுமை உருபுகள் மறைஞ்சு இருந்தா - வேற்றுமைத் தொகை.”
“அப்போ, வேற்றுமைத் தொகைகள் நிறைய இருக்காம்மா?”
“ஆமா. எத்தனை வேற்றுமை உருபுகள் இருக்கோ அத்தனை வேற்றுமைத் தொகை இருக்கும்.”
“வேற்றுமை உருபுகள் எத்தனை?”
“மொத்தம் எட்டு வேற்றுமை இருக்கு. அதில, முதல் வேற்றுமைக்கும் எட்டாவது வேற்றுமைக்கும் உருபு இல்லை. மத்ததெல்லாம், 'ஐ, ஆல், கு, இன், அது, கண்' இப்பிடி இருக்கு. இதைப் பார்” என்றபடி, பேசிக்கொண்டே தான் எழுதிய ஒரு துண்டுச் சீட்டை கிருத்திகாவிடம் கொடுத்தார் சாந்தி.
அந்தச் சீட்டில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:
இரண்டாம் வேற்றுமை உருபு: ஐ
மூன்றாம்: ஆல்
நான்காம்: கு
ஐந்தாம்: இன்
ஆறாம்: அது
ஏழாம்: கண்
படித்துப் பார்த்ததும், கிருத்திகாவுக்கு நிரம்ப சந்தோஷம். “அம்மா, அப்பிடியே எல்லாத்துக்கும் உதாரணம் சொல்லிட்டீங்கன்னா, ஹோம் வொர்க் முடிஞ்ச மாதிரிம்மா…” என்று கெஞ்சலாக இல்லை, கொஞ்சலாகச் சொன்னாள்.
“இதோ” என்ற சாந்தி இன்னொரு துண்டுச் சீட்டைக் கொடுத்தார்.
அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது:
பால் குடித்தேன் - பால் + ஐ + குடித்தேன்
தலை வணங்கினேன் - தலை + ஆல் + வணங்கினேன்
என் வீடு இது - என் + கு + வீடு இது (எனக்கு வீடு இது)
சாந்தி மகள் கிருத்திகா - சாந்தி + இன் + மகள் கிருத்திகா
தோழி வீடு - தோழி + அது + வீடு
கூண்டுக் கிளி - கூண்டு + கண் + கிளி
படித்துப் பார்த்த கிருத்திகா, “சூப்பர்மா,” என்று சாந்தியின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
