PUBLISHED ON : அக் 14, 2016
சுற்றுலாத் தலம் என்றதும் பலரது நினைவுக்கு முதலில் வருவது மலைப்பிரதேசங்கள்தான்! தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளின் வரிசையில் பார்க்க வேண்டிய இடம் ஏற்காடு. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கும் சேர்வராயன் மலையில் அமைந்திருக்கும் ஏற்காடு, சேலத்தில் இருந்து 36 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இதன் வெப்பநிலை குளிர் காலத்தில் 13 டிகிரியும், கோடையில் 30 டிகிரியும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 5,326 அடி (1,623மீ.) உயரத்தில் உள்ளதால் குளிர்ச்சியாக இருக்கிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி அமைத்த காலத்தில், மலைப்பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தங்களது ஓய்விடங்களாகவும், காபி, தேயிலை, ஏலக்காய் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கும் எஸ்டேட்டுகளாகவும் மாற்றினார்கள். அப்படி ஆங்கிலேயர்களால் அடையாளம் காணப்பட்ட இடம்தான் ஏற்காடு. இன்றைக்கு 'ஏழைகளின் ஊட்டி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள், எமரால்டு லேக், கிள்ளியூர் அருவி, பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களைத் தவறாமல் பார்ப்பார்கள். தனியாருக்கு சொந்தமான இடத்தில் 'கரடி குகை' (Bear cave ) என்ற பெயரில், ஒரு குகை இருக்கிறது. தரைமட்டத்தில் இருந்து 7 அடி ஆழத்தில் இருக்கும் இந்தக் குகைக்குள் செல்ல வேண்டுமானால், நியாண்டர்தால் மனிதர்கள் மாதிரி குனிந்துதான் போக வேண்டும். இந்தக் குகை நீண்ட தொலைவு செல்லும் என்று உள்ளூர்க்காரர்கள் சொல்கிறார்கள்; என்றாலும் இருட்டில் அடைபட்டிருக்கும் வவ்வால்களை சமாளித்து, அதிகபட்சம் 100 மீட்டருக்கு மேல் போக முடியாது.
