PUBLISHED ON : ஏப் 04, 2016
நவீன ஓவியக் கலையின் முன்னோடியான பாப்லோ பிக்காசோ (Pablo Piccaso) ஸ்பெயின் நாட்டில் உள்ள மலாகாவில் (Malaga) பிறந்தார். இவர் 'கியூபிஸம்' (Cubism) என்ற ஓவியக் கலைப் பாணியை அறிமுகம் செய்தவர். ஓவியம் மட்டுமின்றி, சிற்பம், செராமிக் வரைகலை போன்றவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். அமைதிச் சின்னமான புறா, ஆலிவ் இலைகள் வடிவம் போன்றவற்றைப் பல ஓவியங்களில் சித்திரித்து அவற்றைப் பிரபலப்படுத்தினார். கூம்பு, முக்கோணம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களைக் கொண்டு புதிய வகையிலான ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். இந்த வகையான ஓவியங்களை 'கியூபிஸ ஓவியங்கள்' என்று அழைத்தார்கள்.
பிக்காசோ தனது வாழ்நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். 'ஒரு பெண்ணின் தலை', 'மூன்று இசைக் கலைஞர்கள்' ஆகியவை இவரது புகழ் பெற்ற ஓவியங்கள். மனித உருவ ஓவியங்களில், கியூபிஸ பாணியிலான ஓவியங்களை பிக்காசோ வரைந்தது பெரும் ஓவிய சாதனையாக மதிக்கப்படுகிறது. பிக்காசோ 1955ல் வரைந்த The Woman of Algiers என்ற ஓவியம், நியூயார்க்கில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் 179 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை ஆகியுள்ளது.
