PUBLISHED ON : நவ 14, 2016

தொலைக்காட்சியில், ஹிஸ்ட்ரி சேனலில், 'வேர்ல்ட் ஃபிரம் அபவ்' பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சி இது. பல ஊர்களை, நாடுகளை, வானத்திலிருந்து ஒரு பறவையின் பார்வையில் பார்க்கும் வாய்ப்பு இது. கண்ணுக்கு அழகாக இருப்பது மட்டுமல்ல; காட்டுகிற பகுதியின் வரலாற்று சிறப்புகளையும் சொல்வார்கள்.
ஒவ்வொரு முறை இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போதும், பாலு தவறாமல் சொல்வான். “நான் பெரியவனானதும் நிச்சயம் உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்கப் போகிறேன்.”
“தாராளமாக சுற்று. முதலில் ஒரு நல்ல வேலைக்குப் போக உன்னைத் தயார் செய்துகொள். அடுத்து, சம்பாதிப்பதில் சேமிக்கத் தொடங்கு. பிறகு ஒவ்வொரு வருடமும், சில வாரங்கள் ஏதாவது ஒரு ஊருக்குப் போவது என்று திட்டம் வைத்துக் கொள். முதலில் இந்தியாவில் இருக்கும் ஊர்களைப் போய்ப் பார். அப்புறம் மீதி நாடுகளுக்குப் போகலாம்” என்றார் ஞாநி மாமா.
“வேலையே உலகம் சுற்றுகிற மாதிரி அமைந்தால் நன்றாக இருக்கும்” என்றான் பாலு. “அதற்கு நீ விமானத்திலோ, கப்பலிலோ வேலைக்கு சேரவேண்டும்” என்றது வாலு. “அப்போது எல்லா ஊரிலும், விமான நிலையத்தையும் துறைமுகத்தையும்தான் அதிகம் பார்க்கமுடியும். ஊரை சுற்றிப் பார்ப்பது குறைவாகத்தான் இருக்கும்” என்றார் மாமா.
“உலகத்தை நாம் ஒரு சுற்று சுற்றிவிட்டு வர எவ்வளவு நாள் ஆகும்?” என்று கேட்டான் பாலு.
“பூமத்திய ரேகைப்படி, உலகத்தின் சுற்றளவு சுமார் 24 ஆயிரம் மைல். இன்றைக்கு ஒரு விமானம், எங்கேயும் நிற்காமல் இதை சுற்றினால், 47 மணி நேரத்தில் சுற்றிவிடலாம். ஒரு ராணுவ விமானம், 1980ல் 42 மணி நேரம் 23 நிமிடங்களில் சுற்றி ரிகார்ட் ஏற்படுத்தியிருக்கிறது.” என்றார் மாமா.
“நடந்தே உலகத்தை சுற்ற முடியுமா?” என்று கேட்டான் பாலு. “முடியும். அதற்குள் உனக்கு வயசாகிவிடும். அப்படி சுற்றினவரைப் பற்றி, என் வாலுபீடியாவில் எழுதியிருக்கிறேன். படி” என்றது வாலு.
“இப்போதுதான் அதிவேக விமானம் எல்லாம் இருக்கிறது. இதெல்லாம் வருவதற்கு முன்னால், உலகத்தைச் சுற்ற எவ்வளவு நேரம் எடுத்திருப்பார்கள்? அந்த காலத்திலேயே நாடு விட்டு நாடு வந்து, கண்டம் தாவி கப்பலில் வந்து வணிகமெல்லாம் செய்திருக்கிறார்களே?” என்று கேட்டேன்.
“கொலம்பஸ், டார்வின், மெகல்லன், வாஸ்கோடகாமா என்று, பல நாடுகளைச் சுற்றிய எல்லாரும், வருடக்கணக்கில் கப்பல் பயணம் செய்தவர்கள். முதன்முதலில், 80 நாட்களில் உலகத்தை சுற்றி வரலாம் என்ற கற்பனையை, நாவலாக எழுதியவர், பிரெஞ்ச் எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன். இவர், 1873ல் இதை எழுதியபோது, இந்தியாவில் ரயில் வந்துவிட்டது. அமெரிக்காவிலும் ரயில் வந்துவிட்டது. சூயஸ் கால்வாய் வெட்டியதால், கப்பல்கள் குறுக்குப் பாதையில் செல்ல வசதி ஏற்பட்டது. இதையெல்லாம் வைத்துத்தான், வெர்ன் தன் கதையை எழுதினார்.” என்றார் மாமா.
“அது கதைதானே. யாராவது நிஜமாக, 80 நாட்களில் உலகத்தை சுற்றியிருக்கிறார்களா ?” என்று கேட்டான் பாலு.
“எட்டு நாள் குறைவாக, 72 நாட்களில் சுற்றிய சாதனையை ஒரு பெண் செய்திருக்கிறார்.” என்று மாமா சொன்னதும், எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. “யார், யார், யார் அந்தப் பெண்?”,என்று படபடப்பாகக் கேட்டேன். “அந்தப் பெண்ணைப் பற்றி முழுக்க தெரிந்தால், உனக்கு இன்னும் குதூகலமாக இருக்கும்” என்றார் மாமா.
நிஜம்தான். அப்படி ஒரு பெண், 1889ல் இருந்தார் என்பதே, பெரிய சாகசம்தான்; சாதனைதான். அவர் பெயர் நெல்லி ப்ளி. அது புனைப்பெயர்தான். அசல் பெயர் எலிசபெத் கொக்ரான். நெல்லி அயர்லாந்திலிருந்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்கிற்கு வந்து குடியேறிய, ஒரு சாதாரண மில் தொழிலாளியின் மகள். பள்ளிக்கூடப் படிப்பைக்கூட முடிக்கவில்லை. நெல்லிக்கு 16 வயதானபோது, பிட்ஸ்பர்க் டெஸ்பாட்ச் பத்திரிகையில், “பொம்பளை பிள்ளைகளால ஒரு பிரயோஜனமும் இல்லை” என்ற கட்டுரையைப் படித்து, கொதித்துப்போய், பதில் கட்டுரை ஒன்றை தனியான அனாதைப் பெண்' என்ற புனைப்பெயரில் எழுதி அனுப்பினார். அந்தக் கட்டுரை வெளியானது மட்டுமல்ல; எழுதியவர் உடனே தொடர்பு கொள்ளவும் என்று பத்திரிகை ஆசிரியர் விளம்பரமே வெளியிட்டார். தொடர்ந்து இன்னும் பல கட்டுரைகளை நெல்லி எழுதினார். நெல்லிக்கு முழுநேர நிருபர் வேலையே கொடுத்தார்கள்.
ஆலைகளுக்கு வேலை செய்யச் செல்லும் பெண்களின் நிலைமை பற்றியெல்லாம், நெல்லி எழுதினார். பிறகு மெக்சிகோவுக்குப் போய், நிருபராக வேலை பார்த்தார். அங்கே அரசு செய்யும் ஒடுக்குமுறை பற்றி எழுதியதும், அவரைக் கைது செய்யத் தேடினார்கள். தப்பித்து அமெரிக்கா வந்தார்.
இப்போது, துப்பறியும் ஜர்னலிசம் என்று சொல்கிறார்களே, அதை நூறு வருடம் முன்னாலேயே நெல்லி செய்திருக்கிறார். புலிட்சரின் நியூயார்க் வேர்ல்ட் பத்திரிகையில் வேலை பார்க்கும்போது, நகரின் பெண் மனநோயாளிகளின் மருத்துவமனையில் நடக்கும் கொடுமைகளைக் கேள்விப்பட்டு, தானும் ஒரு மனநோயாளியாக நடித்து, டாக்டர்களையே நம்பவைத்து, அட்மிட் ஆகிவிட்டார். பத்து நாள் நோயாளியாக அங்கே இருந்து, பார்த்து அனுபவித்த கொடுமைகளையெல்லாம் வந்து எழுதினார். இதையடுத்து, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, மன நோயாளிகள் நலனுக்காக 8.5 லட்சம் டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி அதிரடி நிருபராக இருந்த நெல்லி, ஜூல்ஸ் வெர்ன் எழுதிய கற்பனையை நாம் செய்து பார்த்தால் என்ன என்று, தன் பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார். அவர் ஒப்புக் கொண்டதும், 1889 நவம்பர் 14 அன்று நெல்லி கையில் ஒரே ஒரு சூட்கேசுடன் உலகத்தைச் சுற்றப் புறப்பட்டுவிட்டார். அப்போது அவருக்கு வயது 25 தான். கப்பல், ரயிலை மட்டுமே பயன்படுத்தி, 72 நாட்களில் சுற்றி முடித்துவிட்டார். வழியில் ஃபிரான்ஸ் நாட்டில் எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னையும் நேரில் சந்தித்திருக்கிறார்.
“இதோடு நெல்லியின் வாழ்க்கை சாகசங்கள் முடியவில்லை” என்றார் மாமா. 31வது வயதில் நிருபர் வேலையை விட்டுவிட்டு, தன்னை விட 42 வயது அதிகமுள்ள ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, பாத்திர ஆலை நிர்வாகியாக மாறிவிட்டார். அடுத்த ஒன்பது வருடங்களில் கணவர் இறந்ததும், தானே ஆலையை நடத்தினார். பால் வைக்கும் குவளை. குப்பத் தொட்டி, பீப்பாய் ஆகியவற்றை வித்தியாசமாக வடிவமைத்து, காப்புரிமை வாங்கியிருக்கிறார். இத்தனையும் சாதித்த நெல்லி வாழ்ந்தது, 57- வருடங்கள்தான்.
முதல்முறையாக, நானும் பாலு மாதிரி சொன்னேன். “நான் நிச்சயம் உலகம் சுற்றும் பத்திரிகையாளியாகப் போகிறேன்.”
“நீ ஏற்கெனவே பத்திரிகையாளிதானே. உன் டயரியை வெளியிடுகிறார்களே !” என்று சிரித்தார் மாமா.
வாலுபீடியா 1: நடந்தே உலகம் சுற்றியவர்
கனடா நாட்டின் மாண்ட்ரியேல் நகரைச் சேர்ந்த, ஜீன் பெலிவோவுக்கு, 45வது வயதில் உலகத்தை நடந்தே சுற்றிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. -2000ம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ம் தேதி அன்று புறப்பட்டார். 11 வருடங்கள் நடந்து, உலகைச் சுற்றி விட்டு, 2011ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி மாண்ட்ரியேலுக்கு திரும்பினார். மொத்தம் நடந்த தூரம்: 75,554 கிலோமீட்டர்கள். சென்ற நாடுகள்: 64. மொத்தமாக 1,600 குடும்பங்களுடன் தங்கியிருக்கிறார். நடப்பதற்கு தேவைப்பட்ட ஷூக்கள்: 54. தன் நடைப்பயணத்தின்போது, ஜீன், அகிம்சையின் சிறப்பையும், குழந்தைகளிடம் வன்முறை கூடாது என்பதையும் பிரசாரம் செய்தார். வழியில் அவர் நேரில் சந்தித்த தலைவர்: நெல்சன் மண்டேலா.
வாலுபீடியா 2: மிக அதிகமான நாடுகளுக்கு சென்ற ஒரே இந்தியப் பத்திரிகையாளர், தமிழ் எழுத்தாளர் (காலஞ்சென்ற) மணியன். சுமார் 110 நாடுகளுக்கு சென்று வந்து, பயணக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

