PUBLISHED ON : நவ 14, 2016
நாம் அன்றாடம் புழங்குகிற (பேசுகிற, எழுதுகிற) சொற்கள் பல பிழையற்றவை; நற்றமிழ் என நினைக்கிறோம். ஆனால், அவற்றுள் பல, பிழை உள்ள சொற்கள். எடுத்துக்காட்டாக ஒன்று பார்ப்போம்
'மலரை எடுத்து முகர்ந்து பார்த்தான்' என்று பேசுகிறோம். முகர்ந்து எனும் சொல்லும் பிழையே. 'மோந்து பார்த்தான்' என்பதே சரி. மோந்து எனில் இழிவழக்கு என, எண்ணுகிறோம். முகத்தல் என ஒரு சொல் உண்டு. நீர்ப்பொருளை அளவிட முகத்தல் அளவை என்போம். நுகர்தல் என ஒரு சொல் உண்டு. இதற்கு அனுபவித்தல் என்று பொருள். நுகர்வோர் எனும் சொல், வழக்கத்தில் உள்ளது. முகர்ந்து என ஒரு சொல் தமிழில் இல்லை. மலரை மோந்து பார்த்தான் எனச் சொல்ல வேண்டும்.
சான்றாக, 'மோப்பக்குழையும் அனிச்சம்'. (திருக்குறள்) மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சமலர். 'மோப்ப நாய் வந்து துப்பு துலக்க முயற்சி' இப்படிச் செய்தி படிக்கிறோம்.மோப்பம் பிடித்து விட்டான் என, பேச்சு வழக்கிலும் உள்ளது. ஆக, மோத்தல், மோப்பம் இழிசொற்கள் அல்ல; நற்றமிழ்ச் சொற்கள்.
அடுத்தசொல், அருகாமை. எங்கள் வீடு அருகாமையில் உள்ளது. பள்ளி வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ளது. அருகில் எனில் பக்கத்தில் (சமீபத்தில்) என்று பொருள். அருகாமை எனில், அருகில் இல்லாமை என்று பொருள்தரும். அருகு+ஆ+மை .(அருகு-பக்கம்), ஆ- எதிர்மை இடைநிலை. மை விகுதி. அருகாமை என்றால் அருகில் இல்லாமை என்று பொருள்.
'நான் உனக்கு முன்னூறு ரூபா தரவேண்டும்' என எழுதுகிறோம்.இதற்கு என்ன பொருள்? நான், உனக்கு முன் நூறு ரூபா தரவேண்டும் என மாற்றிச் சொல்லலாம். எழுத்தில், முந்நூறு ரூபா என்று எழுத வேண்டும். மூன்று என்ற எண்ணில் 'ன்' (றன்னகரம்) தானேயுள்ளது? முந்நூறில் ஏன் தந்நகரம் இடவேண்டும்? அது, புணர்ச்சி விதிகளின்படி ஆனது . மூன்று+நூறு=முந்நூறு. எப்படி? மூன்று எனும் நிலைமொழியின் இறுதி (று),அதையடுத்த 'ன்' இரண்டும் கெட்டு (நீங்கி) மூ எனும் நெடில் 'மு' எனக்குறுகி நின்று வருஞ்சொல் நூறுவுடன் சேர்கிறது. நூறு என்பதிலுள்ள தந்நகர (ந்) ஒற்றினைப் பெற்று,
மு+நூறு=முந்நூறு என ஆயிற்று. சான்று: 'பாரியின் பறம்புமுந்நூ(று) ஊருடைத்து'. (புறநானூறு) எனவே, முகர்ந்து, அருகாமை, முன்னூறு ஆகிய சொற்கள் பிழையுடையவை. மோந்து, அருகில், முந்நூறு என்பவையே சரியானவை.

