PUBLISHED ON : நவ 14, 2016

மலைமறையடிகள் - 1876 - 1950
'விக்ரகம், பூஜை விக்ரகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, அதற்குப் பூஜை செய்கின்றவர் நேரத்தை மாற்றக்கூடாது.' நூறாண்டுக்கு முன், வடமொழி கலந்து தமிழை இப்படித்தான் எழுதினர். இதிலுள்ள விக்ரகம், பூஜை, பிரதிஷ்டை போன்ற சொற்கள் வடமொழி. இவ்வாறு எழுதியதற்கு எதிராக, தமிழ், பிறமொழி கலப்பில்லாமல், எழுத, பேச இயக்கத்தைத் தொடங்கியவர் மறைமலை அடிகள். அப்போது பெரிதும் வழக்கில் இருந்த நமஸ்காரம், ஜலம், சந்தோஷம் போன்ற வடமொழிச் சொற்கள், இந்த இயக்க முயற்சியால் ஒழிக்கப்பட்டன.
அவரது பணிகள்
* ராஜாஜி முதல்வராக இருந்தபோது, உயர்நிலைப் பள்ளிகளில் இந்திமொழியை கட்டாயமாக்கினார். இதை எதிர்த்து குரல் கொடுத்தார்.
* மாதந்தோறும் ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் நூல்கள் வாங்கிப் படிக்கும் பழக்கம் உள்ளவர்.
* தமிழ், ஆங்கிலம் என, 4,000க்கும் மேற்பட்ட நூல்களை சேமித்து, நூலகம் வைத்திருந்தார்.
* 'ஞானசாகரம்' என்ற இதழைத் தொடங்கி நடத்தியவர்; பின்னர், 'அறிவுக்கடல்' என்று பெயரை தமிழில் மாற்றினார்.
மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாசலம். அதை மறைமலை என்று தமிழாக்கினார்.
நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளியில் படித்தார். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். பேராசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நூலுக்கு, செய்யுள் வடிவிலேயே உரை விளக்கம் எழுதினார். அதற்கு கைமாறாக, கல்லூரியொன்றில் மறைமலைக்கு தமிழாசிரியர் பணி பெற்றுத் தந்தார்.
இயக்கங்கள்
திருவருட்பாவில் உள்ள, 'பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும்…” என்று தொடங்கும் பாடலை மறைமலையின் மகள் நீலாம்பிகை பாடிக் கொண்டிருந்தார். பாட்டில், 'உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்' என்ற அடியில் மட்டும் தேகம் என்னும் வடசொல் வருவதைக் கண்டார். அருமையான தமிழ்ப்பாட்டில் வடசொற்கலப்பால், அதன் மொழித்தூய்மை கெட்டதாக மனம் நொந்தார். அந்த இடத்தில், 'யாக்கை' என்ற தமிழ்ச்சொல் வந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனையின் விளைவுதான், தனித்தமிழ் இயக்கம். கிராம கோவில்களில் உயிர்ப்பலியிடுவதற்கு எதிராக, பலிவிலக்கு இயக்கத்தை, 1925ம் ஆண்டு தொடங்கினார்.
முக்கிய நூல்கள்
முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை
தமிழர் மதம்
உரைமணிக்கோவை
கருத்தோவியம்
துகளறுபோதம்
திருவாசக விரிவுரை
பண்டைகாலத் தமிழரும் ஆரியரும்
இந்தி பொது மொழியா?
மறைமலையடிகள் தலைமையில், 500 தமிழறிஞர்கள் கூடி, தமிழர்களுக்காக, திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கினர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில், 1921ல் கூடிய தமிழறிஞர்கள், கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன் பிறந்தவர் திருவள்ளுவர் என்று கணக்கிட்டனர். இதையடுத்து, திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை உருவாக்கினர். தமிழ் ஆண்டு குறிப்பிடுவதை, 1971ம் ஆண்டு, தமிழக அரசு ஏற்றது. 1972 முதல் அதை நடைமுறைப்படுத்தியது. தமிழக அரசு ஆணைகளில், திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப்படுகிறது.
- மகுடேசுவரன்

