
பூக்களின் ரகசியம் புற ஊதா நிறத்தில்
பூப்பூவாய் பூத்துக்குலுங்கும் இளவேனில் காலம். சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, இளம் மஞ்சள், வெளிர் நீலம் என, பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை கண்டு மனம் பூரிக்காதவர் யார்?
நமக்கு மஞ்சளாகத் தென்படும் அதே பூ, பூச்சிக்கு அதே நிறத்தில் தென்படுவதில்லை. மின்காந்த அலைகளில் 400 - 700 நானோமீட்டர் அலைநீளம் உடைய, காணுறு ஒளியை மட்டுமே நமது கண்கள் இயல்பில் உணர முடியும். ஆனால், தேனீக்களால் 300--600 நானோமீட்டர் அலைநீளம் உடைய மின்காந்த அலைகளையும் காண முடியும். நம்மால் இயல்பில் காணவியலாத புறஊதாக் கதிர்களை, பூச்சிகளால் காண முடியும்.
தேனீக்களைவிட ஒருபடி மேலே செல்லும் பட்டாம்பூச்சியின் கண்களால், புறஊதா முதற்கொண்டு சிவப்பு நிறம் வரை கூடுதல் பகுதியை நிறமாலையில் காண முடியும். அவற்றின் நிறப்பார்வைத் திறன் மேலும் செழுமை கொண்டது. சில விட்டில் பூச்சி வகைகளும், பட்டாம்பூச்சி போல சிறப்பான நிறப் பார்வைத் திறன் கொண்டவை.
மஞ்சள் கலந்த பச்சை மற்றும் இளம் பச்சை நிறம் தவிர, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் நீல நிறங்களையும் வண்டுகளால் இனம்பிரித்துக் காண முடியும். பெரும்பாலான ஈச்சை வகை பூச்சிகளுக்கும் நிறப்பார்வை உண்டு.
மனித விழி லென்சின் மீது உள்ள ஒரு படலமே, புறஊதாக் கதிர்கள் கண்ணுக்கு உள்ளே செல்வதைத் தடுத்து நிறுத்துகிறது. சிலருக்கு கண் வியாதி காரணமாக, விழிவில்லையை அகற்றிவிட வேண்டிவரும். இவ்வாறான அபேகிக் (aphakic) எனும் பூவெடுத்த கண் நிலையுள்ளவர்களின் கண்கள், ஓரளவு தேனீயின் கண்களை போல புறஊதா கதிர்களை காண முடியும்.
அவ்வாறு கண் பழுது உள்ளவர்கள், நமது கண்களுக்கு புலப்படும் நிறத்தைவிட மாறான நிறத்தை மட்டுமல்ல, பூக்களில் புதிய சில பாங்குகளையும் காண்பர்.
வண்ணவண்ண விளக்குகள் வைத்து கடைகள் நம்மை கவர்ந்து இழுப்பதைப்போல, பூச்சிகளைக் கவர்ந்திழுக்க பூக்களில் புறஊதா கதிர்களில் புலப்படும் சில சிறப்பு வடிவங்கள் உள்ளன. இவை பூச்சிகளுக்கு மட்டுமே புலப்படும்.
சில பூச்சிகளுக்கு இரண்டே இரண்டு நிறமி உணர்விகள்தான் உள்ளன. பட்டாம்பூச்சி போன்ற சில பூச்சிகளுக்கு மூன்று உணர்விகள் உள்ளன. எனினும், பெரும்பாலான பூச்சிகளால், 700 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட சிவப்பு நிற ஒளியை உணர முடியாது.
எனவே, பச்சை நிற இலைகள், பூச்சியின் கண்களுக்கு அடர்ந்த நிறத்தில் தென்படும். அதேசமயத்தில், பூச்சிகள் அனைத்தும் புறஊதா நிறத்தை உணரும் தன்மை கொண்டவை. எனவே, நமக்கு பசுமையாக தென்படும் பகுதி கருமையாக புலபடுவதால், கருமையான பின்புறத்தில் பூக்கள் பளீர் என பூச்சிகளின் கண்களுக்கு புலப்படும்.
பூவின் இதழில், புறஊதா நிறத்தை சிறப்பாக பிரதிபலிக்கக் கூடிய வேதிப்பொருள்கள் உள்ளன. இவை, நமது கண்களுக்குத் தென்படாத பல வடிவங்களை, குறிகளை பூச்சிக்குக் காட்டும். சூரியகாந்தி பூ குடும்பத்தைச் சார்ந்த பூக்களில் 'ப்லேவனால் (flavonol) எனும் நிறமி வேதிப் பொருள் உள்ளது. இந்த நிறமி, புறஊதா நிறக்கதிர்களை உறிஞ்சும்; மஞ்சள் நிற ஒளியைப் பிரதிபலிக்கும். எனவே, மனிதருக்கு மஞ்சளாகத் தென்படும் இந்த பூவின் பெரும்பகுதி, பூச்சிகளுக்கு கருமையாக தென்படும்.
பூச்சிகளின் இதே பண்பை பயன்படுத்தி, பூச்சிகளை உண்ணும் சிலந்திகள் சில, தமது சிலந்தி வலையிலும் புறஊதா நிற வடிவங்களை வரைந்து வைக்கின்றன. சிலந்தி வலையை பூ என நினைத்து, ஏமாந்து செல்லும் பூச்சி, சிலந்திக்கு இரையாகும்.