
குளவிகளில் 'இக்னியுமான்' (Ichneumon) என்ற ஒருவகைக் குளவி உள்ளது. இது, தன் குஞ்சுக்கு அது பிறப்பதற்கு முன்பே, தேவையான உணவை கூட்டுக்குள் கொண்டு வைத்து விடும்.
இந்தக் குளவி முட்டையிடுவதற்கு முன்பே, தன் குஞ்சுக்கு இரையாகக் கூடிய வண்டு, சிலந்தி, கம்பளிப்புழு போன்றவைகளைத் தனது கொடுக்குகளால் கொட்டி மயக்கமடையச் செய்யும். ஆனால், அவற்றைச் சாகடிப்பது இல்லை. மயங்கிய நிலையில் அந்த பூச்சி, புழுக்களை கொண்டு வந்து, ஒரு குழி தோண்டி அதற்குள் போட்டுவிடும். பின் அந்தக் குழியில், தன் முட்டைகளை இடும்.
குளவியால் கொட்டப்பட்ட அந்த இரை, சில நாட்களுக்கு மயங்கிய நிலையிலேயே கிடக்கும். அதற்குள் குளவியின் முட்டைகள் பொரிந்து, குஞ்சு வெளிவரும். அங்கே தன் தாய் சேர்த்து வைத்துவிட்டுப் போன, மயங்கிய நிலையில் உள்ள வண்டுகள், சிலந்திப் பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை அந்தக் குஞ்சுகள் தின்னும். போதிய வளர்ச்சியைப் பெற்ற பின், அவை வெளியே சென்று இரைதேடிட ஆரம்பிக்கின்றன.