
ஹெப்பாட்டிடிஸ் தடுப்பூசி போட மாமாவுடன் மருத்துவமனைக்கு சென்றேன். தடுப்பூசி எனக்கு இல்லை. மாமாவுக்கு. ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளுக்குத்தான் தடுப்பூசி போடுவார்கள் என்று நினைத்திருந்தேன். பெரியவர்களுக்கும் தேவைப்படும் என்று ஞாநி மாமா சொன்னார். சிறுநீரகத்துக்குப் பதிலாக செயற்கையாக ரத்த சுத்திகரிப்பு செய்யும் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு இந்தத் தடுப்பூசி அவசியமானதாம்.
ஹெப்பாட்டிடிஸ் என்றால் 'ஈரல் அழற்சி' என்று சொன்ன வாலு, நிறைய தகவல்களை அள்ளிப் போட்டது. கல்லீரல் தனிச் சிறப்புடைய ஓர் உறுப்பு. அது மொத்தமாக 500 வேலைகளைச் செய்கிறதாம்! உடலில் விஷச் சத்துகளை நீக்குவது, புரதத்தை உடைத்து கலக்கச் செய்வது, ஜீரணத்துக்குத் தேவையான சுரப்புகளைத் தயாரிப்பது என்று ஏகப்பட்ட வேலை.75 சதவிகிதம் ஈரல் பழுதானாலும், மீதி இருக்கும் 25 சதவிகிதம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் உடையது.
ஹெப்பாட்டிடிஸ் ஏ, பி, சி, டி, ஈ என்று பல வகை இருக்கிறது. உணவின் மூலமும் கழிவுகளின் மூலமும், சில வகை தொற்றிக் கொள்ளுமாம். சில ரத்தத்தின் மூலம் பரவுமாம்.
''ஈரல் அழற்சி ஏற்பட்டால் என்ன ஆகும்?” என்று பாலு கேட்டான். “மஞ்சள் காமாலை ஏற்பட்டு, சரியாக சிகிச்சை பெறாவிட்டால் உயிர் இழக்கும் ஆபத்து கூட உண்டு” என்றார் மாமா. “இதனால்தான் குழந்தைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடுகிறார்கள்.”
“அதெல்லாம் தேவை இல்லை என்று சிலர் சொல்லுகிறார்களே?” என்று கேட்டேன். “அது தவறான கருத்து. குழந்தைகள் விஷயத்தில் எந்த விஞ்ஞானியும் தவறான வழிகளைச் சொல்லமாட்டார்கள்.” என்றான் பாலு. “ நிஜம்தான். ஆனால் ஒரு காலத்தில் எல்லா குழந்தைகளையும் சமமாக பார்க்கவில்லை. அனாதைக் குழந்தைகள், மனவளர்ச்சியற்ற குழந்தைகள் எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை என்று நினைத்த சில விஞ்ஞானிகள் இருந்தார்கள். ஹெப்பாட்டிடிஸ் பற்றி 1953ல் கிரெக்மன் என்ற விஞ்ஞானி மலம் வழியாக அது தொற்றுமா என்று ஆராய்ந்தார். அதற்கு ஹெப்பாட்டிடிஸ் வைரஸ் உள்ள குழந்தையின் மலத்தை எடுத்துக் கரைத்து பாலில் கலக்கி அந்தப் பாலை மூளை வளர்ச்சியற்ற, அனாதைக் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்து சோதனை செய்துள்ளார். இன்று வரை இது பற்றி விஞ்ஞானிகளிடையே கடும் விவாதம் இருக்கிறது.” என்றார் மாமா.
“ஹெப்பாட்டிடிஸ் ஒரு வைரஸ். இயற்கையில் இருப்பது. ஆனால் நிறைய பேரைக் கொல்லுவதற்கென்றே மனிதனே எத்தனை விதமான ஆயுதங்களைக் கண்டுபிடித்திருக்கிறான். அதற்கென்ன செய்யலாம்?” என்று கேட்டார்.
“அணுகுண்டா?” என்றேன். “எதிரிகளிடமும் அது இருப்பதால், அதையாவது யாரும் போட பயப்படும் நிலை இருக்கிறது. கொடூரமான கண்ணி வெடி அப்படி இல்லையே.” என்றார் மாமா. கம்போடியாவில் தான் நேரில் பார்த்ததை வர்ணித்தார். உலகப் புகழ் பெற்ற அங்கோர் வாட் கோவில்கள் அங்கே இருக்கின்றன. சிவன், விஷ்ணு கோவில்களாக கட்டப்பட்டு பின்னர் பௌத்த ஆலயங்களாக மாற்றப்பட்டு இடிந்து சிதிலமாகிக் கிடக்கும் கலைச் செல்வங்கள் அவை. அதற்குப் போய் வரும் வழியில், சியாம் ரீப் நகரில் கடைத்தெருவில் பல இடங்களில் ஊனமுற்ற இசைக் கலைஞர்கள் பாட்டு பாடி பிச்சை எடுப்பதை மாமா பார்த்திருக்கிறார். அவர்கள் எல்லாரும் கண்ணி வெடியில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள்.
சுமார் 30 வருடம் கம்போடியாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உதவியுடன் யுத்தம் நடந்தது. சண்டையிடும் எதிரெதிர் அணிகள் இன்னொரு அணி தம்மை நெருங்கவிடாமல் நிலத்தில் லட்சக்கணக்கான கண்ணி வெடிகளை புதைத்திருக்கின்றன. தெரியாமல் காலை வைத்தால் வெடித்துப் சிதறவேண்டியதுதான். காட்டில் சுள்ளி பொறுக்கவும், வெடித்த குண்டுகளிலிருந்து உலோகத்தைப் பிரித்து எடுத்து காயலான் கடைக்கு விற்பதற்குத் திரட்டவும் சென்ற ஏழைகள் பலர், கண்ணி வெடிகளில் சிக்கினார்கள். இப்படி 40 ஆயிரம் அப்பாவி பொது மக்கள் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். அதில் சுமார் 13 ஆயிரம் பேர் சிறுவர்கள். இரண்டாயிரம் கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிந்து கண்ணி வெடிகளை அகற்றத் தொடங்கியும் இன்னும் 60 லட்சம் கண்ணி வெடிகள் உள்ளன. இவற்றை அகற்ற இன்னும் 20 வருடம் ஆகுமாம். ஒரு கண்ணி வெடியை புதைக்க ஆகும் செலவு மூன்றே டாலர்தான். கண்டுபிடித்து பத்திரமாக அகற்ற 1,200 டாலர் செலவாகிறது.
யுத்தம் நடந்த இலங்கையிலும் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் 640 கிராமங்கள் கண்ணி வெடிகளால் வீணாகக் கிடக்கின்றன. யுத்த காலத்தில் 20 ஆயிரம் சிங்கள சிப்பாய்களும் 12 ஆயிரம் விடுதலைப் புலிகளும் கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கம்போடியாவில் அக்கி ரா என்ற ஆறு வயது அனாதைச் சிறுவன் குழந்தை சிப்பாயாக ஆக்கப்பட்டவன். எதிரெதிர் அணிகளில் சிப்பாயாக இருந்தபோது தானே ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்தவர். 90களில் யுத்தம் முடிந்தபின்னர் அவர் கண்ணி வெடிக்கு எதிராக பிரசாரம் செய்து சுமார் 50 ஆயிரம் வெடிகளை அகற்றியிருக்கிறார். ஆயுதங்களால் மானுடத்துக்கு ஏற்படும் அழிவை விளக்க ஓர் அருங்காட்சியகமே நடத்துகிறார்.
“ஹெப்பாட்டிடைஸ் மாதிரி எத்தனையோ வைரஸ்களைக் கண்டுபிடித்து அதற்கு தடுப்பெல்லாம் உருவாக்குகிற மனிதன், தன் மூளையில் ஆயுதம் கண்ணி வெடி, யுத்தம், அழிவு என்றெல்லாம் சிந்திக்காமல் தடுக்க எதுவும் வேக்சின் இல்லையா?” என்றேன். மாமா சிரித்தார். “இரண்டு வேக்சின்கள் இருக்கின்றன.” என்றார். ஆவலாக “என்ன?” என்றேன்.
“ஒன்று அன்பு. இன்னொன்று அறம். இவை இரண்டு மட்டும்தான் மனிதனை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.” எல்லாரும் ஒப்புக் கொண்டோம். “இந்த இரண்டை மட்டுமே சிந்திப்பது போல மூளையை மாற்றியமைக்க நான் ஒரு வேக்சின் கண்டுபிடிப்பேன்.” என்றான் பாலு வழக்கம் போல.
வாலுபீடியா 1: கண்ணி வெடிகளை இனி பயன்படுத்துவதில்லை என்று உலகில் 167 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஒப்புக் கொள்ளாத நாடுகள்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, இஸ்ரேல், ஐக்கிய அரபு நாடு, பாகிஸ்தான், இந்தியா!.
வாலுபீடியா 2: ஹெப்பாட்டிடிஸ் விழிப்பு உணர்வு தினம் ஜூலை 28. பிரிட்டிஷ் இளவரசி டயானா செய்த பிரசாரத்தையடுத்து, கண்ணி வெடிகளுக்கு பிரிட்டன் தடை விதித்த நாள் ஜூலை 31. (1998)