PUBLISHED ON : ஜூலை 24, 2017

'நாம் வாழும் பூமியில் சொர்க்கம் ஒன்று இருக்கிறது என்பது உண்மையானால் அது ஜம்மு காஷ்மீரில் தான்”
- உருது கவிதை
ஜம்மு-காஷ்மீர், என்ற பெயரைக் கேட்டால், எப்போதும் ஒருவித பதற்றத்துடனே இருக்கும் மாநிலம்; ராணுவம், போர், கலவரம் இவைதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் அந்தப் பிரதேசம் பூலோக சொர்க்கம்தான். இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, காஷ்மீர் ஐந்து போர்களை எதிர்கொண்டுள்ளது.
1962-ல் சீனாவுடனான போர். பிறகு, 1947, 1965, 1971, 1999-ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் போர். 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போர், இந்திய ராணுவத்துக்கும், அரசியலுக்கும் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கார்கில் போர் நடந்த சமயத்தில் பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீஃபும், இந்தியாவில் அடல் பிகாரி வாஜ்பாயும் பிரதமர்களாக பதவி வகித்தனர். இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்க இருவரும் விரும்பினர். வாஜ்பாய் லாகூர் சென்று, நாடுகளுக்கு இடையே பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆனால், பாகிஸ்தான் பிரதமரின் உத்தரவின்றி, அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி முஷாரப், போரைத் தொடங்கினார். கார்கில் மலை உச்சியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்திருந்தது. அது, உலகின் மிக உயரமான போர்முனைகளுள் ஒன்று. இந்திய ராணுவ வீரர்கள், பள்ளத்திலிருந்து மேல்நோக்கிச் சென்று அதை மீட்பது மிகவும் சிரமம்.
கார்கிலை மீட்க இந்திய ராணுவம் 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் களமிறங்கியது. 1999 மே மாதம் போர் தொடங்கியது. மலை உச்சியை எளிதில் அணுக முடியாத நிலையில், இந்திய ராணுவம் அதை எப்படி சாதிக்கும் என, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தன.
போரில் அசாத்திய துணிச்சலையும், அற்புதமான வியூகத்தையும் வெளிப்படுத்தியது இந்திய ராணுவம். 32 ஆயிரம் அடி உயரத்திலிருந்து இந்திய விமானப்படை உக்கிரமான தாக்குதலைத் தொடுத்தது. விமானப்படையின் உதவியுடன் ராணுவம் ஜூலை 14ம் தேதி, பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்து, கார்கில் உச்சியில் இந்திய தேசியக் கொடியைப் பறக்க விட்டது.
பன்னாட்டு ஊடகங்களிலும் கார்கில் போர் கவனம் பெற்றது. ஜூலை 14-ம் தேதி ஆபரேஷன் விஜய் வெற்றி பெற்றது என பிரதமர் அறிவித்தார். 1999 ஜூலை 26ம் தேதி, கார்கில் போர் முடிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் 500-க்கும் அதிகமானோர் கார்கில் போரில் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்ற திரஸ் பகுதியில் நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் அனுசரிக்கப்படுகிறது.
எப்போதெல்லாம் காஷ்மீரில் போர் மூளுமோ, அப்போதெல்லாம் தமிழகத்திலிருந்து 'காஷ்மீர் எங்கள் பூஞ்சோலை; கைவைத்தால் வரும் சாவோலை' என்ற வீர முழக்கம் ஒலிக்கும்.