PUBLISHED ON : டிச 02, 2019

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கார் நாற்பது. நாற்பது செய்யுட்களை உடைய நூல். இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கார் என்பது மழையைக் குறிக்கும். மழைக்காலத்தில் வருவேன் என்று கூறிவிட்டுச் சென்ற தலைவன், அவனுக்காக காத்திருக்கும் தலைவி, தலைவியின் தோழி ஆகிய மூவரின் கூற்றாக (கூறுவது போல்) இப்பாடல்கள் அமைந்துள்ளன.
நூலில் அமைந்துள்ள சில மழைக்காட்சிகள்
மேகங்கள் கடலில் புகுந்து நீரைப் பருகி மலைகளின் மேல் ஏறுகின்றன. வானம் முழுதும் கருநிறம் பரவி இருண்டிருக்கிறது. எல்லா திசைகளிலும் மேகங்கள் பரந்து மல்குகின்றன (நீர் திரண்டு).
வசந்த காலத்தில் இன்புறும் குயில்கள், கார் காலத்தில் துன்புறுகின்றன. நிலத்தின்மேல் செக்கச்செவேலென்றுள்ள இந்திர கோபப் பூச்சிகள் ஊர்கின்றன. மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்த எருமைகள், தம் கொம்புகளில் குளங்களில் உள்ள கொடிகளை மாட்டிக் கொண்டு வீரர்களைப்போல கம்பீரமாக நடை போடுகின்றன.
கூந்தலை விரித்தாற்போல மழைத் தாரைகள் (வரிசை வரிசையாக) இறங்குகின்றன. மழைத்துளிகள் பெரிது பெரிதாக நிலம் முழுவதும் வீழ்கின்றன. மழை பெய்ததனால், எங்கும் குளிர் பரவுகிறது. வறியவர் மேனியைப்போல, வாடி நின்ற காடு, செல்வர் மனம் போல் வளம் பெறுகிறது. பருவ எழிலைப் பெற்ற பெண்களைப் போல, காடு அழகு பெறுகிறது. செல்வம் உடையவருடைய பொலிவுபோல், எங்கும் மலர்களை உடையதாக விளங்குகிறது. மரங்களெல்லாம் மலர்ந்து மணக்கின்றன. எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசுகிறது.
வேனிற் பூவாகிய பாதிரிப் பூ மழையில் வாடுகிறது. கொன்றை மலர் மலர்ச்சி பெறுகின்றன. கருவிளை, கண்ணைப்போல பூக்கிறது. செங்காந்தள் பூக்கள், கார்த்திகையன்று ஏற்றிய விளக்கைப்போல தோன்றுகின்றன. அவை அடர்த்தியாகப் பூத்த இடத்தைப் பார்த்தால், நெருப்பைப்போல் தோன்றுகிறது. காந்தளின் கொத்தைப் பார்த்தால், பாம்பின் தலையைப்போல இருக்கிறது. பெண்களின் கூரிய பற்களைப்போல், முல்லை அரும்புகள் அரும்புகின்றன. குருந்த மரங்களில் கொத்துக்கொத்தாக மலர்கள் மலர்கின்றன. சிவந்த அடியையுடைய கடம்ப மரங்களிலும் மலர்கள் மலர்கின்றன.
மீன் கொத்திப் பறவை வாயைத் திறந்தாற்போல, செம்முல்லையும் பூக்கிறது.
கார் நாற்பதில், ஒன்பதாம் பாடலும் கருத்தும்
-'கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து.'
கார் காலத்தில், கண்ணைப்போல பூத்த கருவிளம்பூக்களும், தீயின் அழகையுடைய பூக்களும் பூத்திருக்கின்றன. வரியையுடைய வளையல்கள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர், வருவார் என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
