PUBLISHED ON : டிச 02, 2019
நொச்சி இலையின் மருத்துவக் குணம்பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், நொச்சியைப் பற்றி சங்க இலக்கியம் எவ்வாறு கொண்டாடுகிறது, போற்றுகிறது என்பதைப் பற்றி அவ்வளவாக யாரும் அறியாதது. அப்படி அறியாதவர்களுக்காக இங்கே:
'மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ'
என்பது நற்றிணைப் பாடல் (115) வரிகள். இதில் 'மயிலின் காலடி போன்று அதன் இலை இருக்கிறது' என்கிறது.
'மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த' (138)
என்ற குறுந்தொகையும் மயிலின் கால்கொண்டே இலையைப் பார்க்கிறது.
இதன் மலர்கள் நீல மணிகளைக் கோத்ததுபோல் பூக்குமாம். அதை குயவர்கள் தலையில் சூடி மகிழ்வார்களாம். நொச்சிப் பூவின் நடுவில் குட்டியாய் ஒரு கறுமை இருக்கிறது. அது எப்படி இருக்கிறதாம்?
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின்' (நற்றிணை)
மணலில் (எக்கர்) விளையாடும் நண்டின் கண்களைப்போல் இருக்கிறதாம்.
நொச்சியின் நீலப் பூக்கள் மணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கட்டித் தொங்கவிட்டதைப்போல் இருக்கும் என்பதை, 'மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி' (271) என்று போற்றுகிறது புறநானூறு.
இனி, வேலியோரங்களில் எங்கேனும் நொச்சியைப் பார்த்தால், இந்த உவமைகளில் ஏதேனும் ஒன்று உங்கள் நினைவுக்கு வரும்தானே!
