PUBLISHED ON : டிச 02, 2019

மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத்தொடங்கிய காலத்தில், கை விரல்களால் சற்றுக் குழிவாக விளக்குகள் செய்து பயன்படுத்தத் தொடங்கினான். அவைதான் அகல் விளக்குகள். தமிழகத்தில் பையம்பள்ளி, மோதூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கையால் செய்யப்பட்ட சுடப்படாத அகல்விளக்குகள் கிடைத்துள்ளன.
கொடுமணல், கரூர், கீழடி, மாங்குடி, அரிக்கமேடு போன்ற ஊர்களில் நடைபெற்ற ஆய்வில், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட அகல் விளக்குகள் கிடைத்தன. அகல்களின் மேல்புறத்தில் 'கூல அந்தைய் சம்பன் அகல்', 'வாருணி இய் அகல்', 'குதிகுயிர அன் அகல்' போன்ற பண்டைய தமிழ் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. இவை தீயில் வைத்து சூளையில் சுடப்பட்டவை.
பழையாறையில் நடைபெற்ற அகழாய்வில், ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அகல் விளக்குகள் கிடைத்தன. இங்கே விளக்கு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ஒரு முகம் (ஒரு திரி) உடையதாய் இருந்த விளக்குகள் பின்னர் நான்கு, ஆறு, எட்டுத் திரிகள் போடும் அளவுக்கு பெரியதாகச் செய்யப்பட்டன. இத்தகைய விளக்குகள் கோவை போலுவாம்பட்டி, பேரூர், தாராசுரம், திருவாமாத்தூர், பழையாறை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் கிடைத்துள்ளன.
நாகப்பட்டினம் காயாரோகணமுடையார் கோவிலில் கிடைத்த கல்வெட்டில், 'தேவதான அகல்புறம்' என்ற குறிப்பு உள்ளது. இது, கோவிலில் விளக்கு எரிப்பதற்காக, அளிக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கும்.
நிலம், கால்நடைகளைக் கவனித்துக்கொண்டு, அதன் வருவாயில் கோவிலில் விளக்கு ஏற்றுபவர்களை 'திருவிளக்குக் குடிகள்' என, கல்வெட்டுகள் கூறுகின்றன. கார்த்திகை மாதத்தில் கார்த்திகைத் திருவிழா நடைபெறவும், விளக்கு ஏற்ற நிலம் தானமாக அளிக்கப்பட்ட செய்தியை, செங்கற்பட்டு ஆதனூர் வேதநாராயணப்பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது.
அக்காலத்தில், இலுப்பை எண்ணெயில்தான் விளக்குகள் எரிக்கப்பட்டன. இதற்காக, கோவிலுக்கு அருகில், இலுப்பை மரங்கள் அடங்கிய தோப்பை அமைத்தனர்.
விளக்கேற்றுவது என்பதை வெறும் வழிபாடாக மட்டும் பார்க்காமல், தொழில், வேலைவாய்ப்பு, நில மேம்பாடு, கலை வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்ற கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும்.
- கி. ஸ்ரீதரன்
