PUBLISHED ON : ஜூன் 25, 2018

மைக்கேல் பெல்ப்ஸ், 30.6.1985, மேரிலேண்ட், அமெரிக்கா.
100 மீட்டர் தூரமுள்ள நீச்சல் போட்டியில் சுறாவுடன் நீந்த அவர் தயாராக இருந்தார். 'சுறாக்களின் உலகம்' என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கக் கடலில் அந்தப் போட்டி நடந்தது. மின்னல் வேகத்தில் நீந்திய சுறா 36.1 நொடிகளில் இலக்கைக் கடக்க, அவரோ 38 நொடிகள் எடுத்துகொண்டார். 'சுறாக்களை வேட்டையாடக் கூடாது' என்பது பற்றிய விழிப்புணர்வுக்காக சுறாவுடன் நீந்தியவர் பெல்ப்ஸ். ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை!
பெல்ப்ஸ் 11 வயதாக இருக்கும்போதே, அவரது பயிற்சியாளர் பாப் பவ்மென், அவர் உலக சாம்பியனாக வருவார் என்பதைக் கணித்துவிட்டார். இதைப்பற்றி அவரது பெற்றோரிடம் பேசி முறையான பயிற்சிகள் கொடுத்தார்.
முதன்முதலாக, 2000இல் சிட்னி சம்மர் ஒலிம்பிக் போட்டியில் பெல்ப்ஸ் பங்கேற்றபோது, அவருக்கு வயது 15. இதில் பதக்கம் வெல்லவில்லை என்றபோதும், இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட இளம் வயது அமெரிக்கர் என்ற சாதனையும் படைத்தார். அதற்குப் பிறகு, பெல்ப்ஸ் தொட்டதெல்லாம் பொன். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று, 'ஒரே ஒலிம்பிக்கில் அதிகத் தங்கப்பதக்கம் பெற்றவர்' என்ற வரலாறு படைத்தார்.
போட்டியிடும் மனப்பான்மை, சிறப்பான உடல் தகுதி இரண்டும்தான் பெல்ப்ஸின் பலம். நீச்சல் விளையாட்டின் நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்றவாறு சிறப்பாகச் செயற்பட்டு தங்கவேட்டை ஆடுவார்.
2012 ஒலிம்பிக் போட்டியின்போது அவர் தனது ஓய்வை அறிவித்தார். அப்போது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 2016, ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்க வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, அதிலும் பங்கேற்று பதக்கங்களை அள்ளினார்.
'நீச்சல் போட்டிகளில் என்ன சாதிக்க வேண்டுமென நினைத்திருந்தேனோ அவை அனைத்தையும் செய்து விட்டேன். இந்தச் சாதனையுடன் விடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது' என ரியோ ஒலிம்பிக் உடன் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
ஒலிம்பிக் பதக்கங்கள்
ஏதென்ஸ் 2004 - தங்கம்: 6; வெண்கலம்: 2
பீஜிங் 2008 - தங்கம்: 8
லண்டன் 2012 - தங்கம்: 4; வெள்ளி: 2
ரியோ 2016 - தங்கம்: 5; வெள்ளி: 1
