தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பறந்த பூ, மாயமான கெண்டை மீன்கள்

பறந்த பூ, மாயமான கெண்டை மீன்கள்

பறந்த பூ, மாயமான கெண்டை மீன்கள்


PUBLISHED ON : பிப் 04, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 04, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகிய பூஞ்சோலை. அங்கே ஒரு பெண் நுழைகிறாள். செடிகள், பூக்கள், ஆங்காங்கே பறக்கும் பட்டாம்பூச்சிகள், தாவும் மான்களை வேடிக்கை பார்த்தபடி நடக்கிறாள்.

அங்கே ஒரு நாவற்பழம் கிடந்தது. ஆவலுடன் அதை எடுத்துப் பார்த்தாள் அவள்.

மறுகணம், அந்த நாவற் பழத்துக்குச் சிறகு முளைத்தது. ரீங்காரமிட்டபடி அங்கிருந்து பறந்துசென்றது அது.

அந்தப்பெண் திகைத்தாள், 'இதென்ன, பழம் பறக்கிறதே!' என்று வியந்தாள்.

சிறிது நேரம் கழித்து, அவள் ஒரு குளத்தை வந்தடைந்தாள். தாகமெடுக்க, நீர் அருந்தலாம் என்று குளத்தில் இறங்கினாள். இரு கைகளாலும் நீரை அள்ளியெடுத்துக் குடிக்க முயன்றாள்.

மறுகணம், அவள் வாய்விட்டு அலறினாள். காரணம், அவளுடைய கையிலிருந்த நீரில் இரு கெண்டை மீன்கள் துடித்தபடி இருந்தன. சட்டென்று நீரைக் குளத்திலேயே விட்டுவிட்டாள்.

ஆனால், இப்போது நீரில் அந்தக் கெண்டை மீன்களைக் காணவில்லை. அவள் திகைத்து நின்றாள்.

பழம் எங்கேயாவது பறக்குமா? கையிலிருந்த கெண்டை மீன்கள் காணாமல் போகுமா? இதென்ன அறிவியல் புனைகதையா?

கதையில்லை, இந்த இரு நிகழ்வுகளும் 'விவேக சிந்தாமணி' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல்களை எழுதிய புலவருடைய பெயர் தெரியவில்லை. ஆனால், இப்பாடல்களிலுள்ள புலவரின் அபார கற்பனை வளம் நம்மை மயக்குகிறது.

அது சரி, பழம் பறந்த மர்மம் என்ன? கெண்டை மீன்கள் எங்கே சென்றன?

சிறிது நேரத்துக்கு முன் அதே பூஞ்சோலைக்குள் ஒரு வண்டு நுழைந்தது. பல பூக்களில் தேன் அருந்தியது. அதனால் மயங்கிக் கீழே விழுந்தது. அந்த வண்டைத்தான் இந்தப் பெண் நாவற்பழமென்று நினைத்து கையில் எடுத்துவிட்டாள்.

இவளுடைய கையோ தாமரையைப்போன்றது. முகமோ நிலவைப் போன்றது. ஆகவே, அந்த வண்டு பயந்துவிட்டது. 'நாம் தாமரையில் கிடக்கிறோம், இரவு வந்துவிட்டது. நிலவு தோன்றியதும் தாமரை மூடிக் கொண்டுவிடும். நாம் உள்ளே சிக்கிக் கொண்டு விடுவோம்' என்று நினைத்து விட்டது. ஆகவே, வண்டு மயக்கத்திலிருந்து விடுபட்டுப் பறந்துவிட்டது.

பின்னர் இவள் நீரைக் கையில் ஏந்தியபோது, அதில் இவளுடைய கண்களின் பிம்பம் தெரிந்தது. கெண்டை மீன் போன்ற தன்னுடைய அழகிய கண்களைத்தான் உண்மையான மீன்கள் என்று நினைத்துப் பயந்துவிட்டாள் இவள்.

சோலையில் வண்டுகள் தேனருந்தி மயங்குவதும், பெண்களுடைய கண்கள் மீனைப்போல் அழகாக நீண்டு காணப்படுவதும் இயல்பான செயல்கள்தான். ஆனால், ஒரு கவிஞருடைய பார்வையில் அவற்றுக்கு காவிய அழகு சேர்ந்துவிடுகிறது. அந்த இயல்பான நிகழ்வுகளை புனைவுச்சூழலில் இணைத்து, அழகான பாடல்களாக மாற்றிவிடுகிறார்கள்!

- என். சொக்கன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us