PUBLISHED ON : பிப் 20, 2017

பிடரிக்கோடன் (Tuatara - டுவாடரா)உயிரியல் பெயர்:'ஸ்பெனோடான் பங்ட்டாடஸ்'(Sphenodon Punctatus)ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்கினம். பார்ப்பதற்கு ஓணான் போல தோற்றம் அளிக்கும். பாம்பு, பல்லிகள் மரபினத்தைச் சேர்ந்த இது, செதில் தோல் (Squamata - ஸ்குவாமாடா) உயிரினம். முதுகுப் பகுதியில் முடி போன்ற உயர்ந்த பகுதி இருக்கும். மேல் தாடையில் உள்ள இரு வரிசைப் பற்கள், கீழ்த் தாடையில் உள்ள ஒரு வரிசைப் பல் மீது பதிந்து இருக்கும். வேறு எந்த உயிரினத்திற்கும் இதுபோன்ற பல் அமைப்பு கிடையாது. பகல், இரவு மாற்றத்திற்கு ஏற்ப, உடல் இயக்கங்களை அமைத்துக் கொள்ளும். புறக் காதுகள் கிடையாது. எலும்புக்கூட்டில் உள்ள தனித்த அமைப்பின் மூலம், ஒலிகளை கேட்டு உணரும். முன் நெற்றிப் பகுதியில், மூடிய கண் போன்ற அரிய அமைப்பு உடையது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். நியூசிலாந்து நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இது அழியும் தருவாயில் உள்ள உயிரினம். நியூசிலாந்தின், கரோரி (Karori) கானுயிர் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு, இவை பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.- கிருஷ்ணன்

