sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

மாலுவின் சபதம்!

/

மாலுவின் சபதம்!

மாலுவின் சபதம்!

மாலுவின் சபதம்!


PUBLISHED ON : பிப் 20, 2017

Google News

PUBLISHED ON : பிப் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லஞ்சம், ஊழல் அப்படின்னா என்ன?

இந்த சந்தேகம் எனக்கும் பாலுவுக்கும் எப்பவும் இருக்கு. ஞாநி மாமா கிட்ட கேட்டோம். “கடைக்குப் போய் பால், முட்டை எல்லாம் வாங்கிட்டு வான்னு அம்மா அனுப்பறாங்க. வாங்கிட்டு வரணும்னா எனக்கு சாக்லெட் வேணும்னு கேட்கறே இல்ல, அதுதான் லஞ்சம்.” என்றார் மாமா.

எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. சாக்லெட் கேட்பது லஞ்சமா? “இது சின்ன விஷயமா தோணுவதால, இதெல்லாம் லஞ்சமான்னு கேட்கறீங்க. வீட்டுக்காகக் கடைக்குப் போய் பொருள் வாங்கிட்டு வந்து கொடுக்கறது உன்னோட கடமை. அதைச் செய்ய சாக்லெட் கேட்டா அது லஞ்சம்தான். உங்க வீட்டுல மாடி அறை கட்டறதுக்கு ப்ளான் அப்ரூவலுக்கு கொடுத்தீங்க இல்ல? அதை அப்ரூவ் பண்ணித் தர்றது அந்த ஊழியரோட கடமை. அதுக்கு அவர் பணம் கேட்டா, அது லஞ்சம்.” என்று விளக்கினார் மாமா.

“அப்ப எது ஊழல்?” என்றான் பாலு. “பால், முட்டை, சாக்லெட்டெல்லாம் வாங்க மொத்தம் 65 ரூபாய் செலவாச்சு. மொத்தம் 75 ரூபாய் செலவாச்சுன்னு வீட்டுல கணக்கு சொல்லி, பத்து ரூபாயை நீ ரகசியமா எடுத்துக்கிட்டா, அது ஊழல்.” என்றார் மாமா.

“சீ…என் வீட்டுலயே நான் பொய் சொல்லித் திருடினா ரொம்பத் தப்பு.” என்றான் பாலு. “அதே மாதிரி என் நாட்டுலயே நான் திருடக் கூடாதுன்னு பதவியில இருக்கறவங்களும் நினைக்கணும் இல்லியா? சில பேர் அப்படி நினைக்கறது இல்லங்கறதுனால்தான் ஊழல் எல்லாம் நடக்குது.” என்றார் மாமா.

“அப்பறம் சொத்துக் குவிப்புன்னா என்ன?” என்று கேட்டான் பாலு. “உங்கப்பாவுக்கு மாசாமாசம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வருது. உன் படிப்புச் செலவு, வீட்டுச் செலவு எல்லா செலவுமா 55 ஆயிரம் ரூபாய் ஆகுதுன்னு வெச்சுக்குவோம். மீதி எவ்வளவு? அஞ்சாயிரம். ஆனா உங்கப்பா பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கினா, அது வருமானத்துக்கு மீறின சொத்துக் குவிப்பா ஆகும். அதுக்கு எங்கிருந்து பணம் வந்துச்சுன்னு சொல்லியாகணும் இல்லியா?” என்றார் மாமா.

“சரி. கடன் வாங்கி காரோ வீடோ வாங்கியிருந்தா?” என்று கேட்டேன்.

“கடன் வாங்கலாம். கடன் கொடுக்கற வங்கி, நம்மால மாதாமாதம் எவ்வளவு திருப்பிச் செலுத்த முடியும்னு கணக்கிட்டுத்தானே கடன் கொடுக்கும்? நம்ம சக்திக்கு மீறின கடனை யாரும் தரமாட்டாங்க இல்லியா?”

“கணக்கு கட்டின வருமானத்துக்கு மேலே சொத்து இருந்தா, அந்த சொத்தெல்லாம் அப்ப எந்த பணத்துலருந்து வாங்கியிருப்பாங்க?” என்று கேட்டான் பாலு.

“ஊழல் பணம்தான். பெரிய பதவிகள்ல இருந்து ஊழல் செய்யறவங்க ரெண்டு விதமா செய்வாங்க. உதாரணமா ஒரு மேம்பாலம் கட்டறதை எடுத்துக்கலாம். அதுக்கு பத்து கோடி செலவாகும்னு கணக்கு போடுவாங்க. கட்டிக் குடுக்கற வேலையை ஒரு தனியார் காண்ட்ராக்டருக்கு கொடுக்கறாங்க. அவர்கிட்டருந்து ஒரு ரெண்டு கோடியை லஞ்சமா வாங்கிடுவாங்க. இப்ப அவர் எட்டு கோடியில பாலத்தைக் கட்டி முடிக்கணும். அவர் வேலை செய்ததுக்கு சம்பளம் மாதிரி லாபமா ஒரு ரெண்டு கோடி எடுத்துகிட்டார்னு வெச்சுகிட்டா, பாலம் கட்ட ஆன அசல் செலவு ஆறு கோடிதான். ஆனா அரசாங்கப் பணம் பத்து கோடி செலவாயிருக்கு.” என்றார் மாமா.

“இன்னொரு விதமான ஊழல் என்ன?”என்று கேட்டேன்.

“அரசாங்கம் போடக்கூடிய உத்தரவுகள், என்னோட கம்பெனியை பாதிக்கும்னு வெச்சுக்கலாம். புது உத்தரவால, எனக்கு செலவு அதிகமாகலாம். அப்ப, அந்த உத்தரவு வராம இருக்க, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நான் லஞ்சம் கொடுக்கறது, இன்னொரு விதமான ஊழல். புது உத்தரவு வந்தா எனக்கு மூணு லட்சம் ரூபாய் அதிக செலவாகும். ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமா கொடுத்தா, எனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் மிச்சம். இப்பிடித்தான் கணக்கு போடுவாங்க.”

“போஸ்ட்டிங்குக்கு பணம் வாங்கறது இன்னொரு ஊழல்” என்றது வாலு.

அது என்ன என்றேன். அரசு ஊழியர்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மாற்றுவது, புதிதாக வேலைக்கு ஆசிரியர், போலீஸ், கிராம நிர்வாக அதிகாரி போன்றவர்களை நியமிப்பது, இதற்கெல்லாம் ஒரு வேலைக்கு இவ்வளவு தொகை லஞ்சம் என்று வாங்குகிறார்களாம். இப்படி லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்பவர்கள், அடுத்து லஞ்சம் வாங்கும் ஊழல் பேர்வழிகளாகத் தாங்களும் மாறிவிடுகிறார்கள்.

லஞ்சமாக, ஊழலாக புரள்கிற பணத்தையெல்லாம், கணக்கு செய்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் இதில்தான் இருக்கும் போலிருக்கிறது.

எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அதையும் மாமாவிடம் கேட்டேன். “இப்போது தீர்ப்பு வந்திருக்கும் வழக்கில், 1991லிருந்து 1996 வரையில் நடந்த தவறுகள் தானே பட்டியல் இடப்பட்டிருக்கிறது. அப்படியானால், நம் நாட்டில் 1991க்கு முன்னால் எந்த ஊழலும் நடக்கவில்லையா? 1996க்குப் பிறகு 2017 வரை, எந்தத் தப்பும் யாரும் செய்யவில்லையா? அதற்கெல்லாம் எப்போது நடவடிக்கை எடுப்பார்கள்?”

மாமா சிரித்தார். லஞ்சமும் ஊழலும் பல்லாண்டுகளாக இருக்கின்றன. இந்த ஒரு வழக்குதான், ஒரு முதலமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போய், முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் போடப்படாத வழக்குகள்தான் ஏராளம் என்றார்.

“அதையெல்லாம் யார் போடுவது?” என்றான் பாலு.

“நீங்கள்தான் பெரியவர்களாகி எல்லா முக்கிய பதவிகளுக்கும் வரும்போது, இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். இப்போதே இரண்டு துறையினர் நேர்மையோடு இருந்தால், எல்லாம் மாறிவிடும். ஒன்று காவல் துறை; இன்னொன்று ஆசிரியர்கள். அடுத்த தலைமுறையை ஒழுக்கமானவர்களாக ஆக்கக்கூடியவர்கள் ஆசிரியர்கள். இந்த தலைமுறையையே ஒழுக்கமாக வைத்திருக்கக் கூடியவர்கள் காவல் துறையினர். ஆனால், இப்போது இருக்கும் பெரியவர்கள் எதையும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.” என்றார் மாமா. “ஏன்?” என்றேன்.

“ஓட்டுக்கு 500 முதல் 2000 ரூபாய் வரை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுபவர்கள், இப்போது இருக்கிறார்கள். அந்த மாதிரி ஓட்டு போட்டால், எப்படி நல்லவர்கள் ஆட்சிக்கு வரமுடியும்?”என்று கேட்டார் மாமா.

“அதாவது மக்களே லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிறீர்கள். இல்லையா?” என்றேன். “போன தேர்தலின்போது, எங்கள் வீட்டு தபால் பெட்டியில் நோட்டீசோடு பணத்தைப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.” என்றான் பாலு. “பணத்தை என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார் மாமா.

“அப்பா அந்தப் பணத்தை எடுத்துப்போய் ஒரு முதியோர் காப்பகத்துக்குக் கொடுத்துவிட்டார். பணம் கொடுத்த கட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று சொன்னார்.” என்றான் பாலு.

அந்த மாதிரி எல்லா மக்களும் செய்தால்தான், மாற்றம் வரும் என்றார் மாமா. “உங்கள் பகுதியில் ஒரு கட்சி கூட்டம் நடத்தினால், ஆயிரம் லைட் போடுகிறது. ஆயிரம் விளம்பரப் பலகை வைக்கிறது. உடனே அது செல்வாக்கான கட்சி என்று நாமே பேசுகிறோம். அதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வரும் என்று நாம் யோசிப்பதில்லை. நம் தெருவில் தார் போடும்போது, அந்தத் திட்டத்துக்கு எவ்வளவு செலவு, யார் காணட்ராக்டர் என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை. தெரிந்து கொள்வதும் இல்லை. இதெல்லாம் மாறவேண்டும். எல்லாமே ரகசியம் இல்லாமல் பகிரங்கமாக செய்யப்பட்டால், பாதி ஊழல் குறையும். நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் எதுவும் செய்யமுடியாது. அப்படி இல்லாமல், அவர்கள் தவறு செய்தால், பாதியிலேயே திரும்பப் பெறும் உரிமை நமக்கு வேண்டும். அதற்குச் சட்டம் போட வேண்டும்.” என்றார் மாமா.

பல ஐரோப்பிய நாடுகளில், இதற்கெல்லாம் தீர்வு கண்டிருக்கிறார்களாம். நாமும் அது போல செய்யவேண்டும். பைட் பைப்பர் கதையில் அந்தச் மாயாஜாலக் காரன் குழல் ஊதியதும் எலிகளெல்லாம் பின்னாலேயே போய் ஆற்றில் விழுந்த மாதிரி, நான் ஒரு மாயக் குழல் ஊதினதும், எல்லா ஊழல் அரசியல்வாதிகளும் பின்னாலேயே வந்து ஜெயிலுக்குள் போய்விடவேண்டும் என்ற என் கற்பனையை மாமாவிடம் சொன்னேன். “அந்த மாயக்குழல் ஒன்றுதான். அது நேர்மை. அதை ஒருத்தர் ஊதினால் போதாது. எல்லா மக்களும் ஊதவேண்டும்.”என்றார்.

மேசையில் இருந்த காந்தியின் சத்திய சோதனை புத்தகத்தின் மீது, மூன்று முறை கையால் அடித்தேன். “என்ன ஆச்சு மாலு?” என்றார் மாமா.

“சபதம்!” என்றேன். உடனே பாலுவும் வாலுவும் கூட மூன்று முறை கையால் அடித்தார்கள்.

வாலுபீடியா 1: உலக அளவில், ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில், இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது. மிக மிகக் குறைவான ஊழல் இருக்கும் நாடுகளில், முதல் இடத்தில் டென்மார்க் உள்ளது.

வாலுபீடியா 2: ஜப்பானில் ஊழல், லஞ்ச வழக்குகளில் சிக்கும் பல தொழிலதிபர்கள், அமைச்சர்கள் தாங்கள் அம்பலமானதும், உடனே தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவமானகரமான செயலில் ஈடுபட்டு பிடிபட்டால், வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறப்பது என்பது ஜப்பானிய பழம் மரபாகும்.






      Dinamalar
      Follow us