PUBLISHED ON : நவ 12, 2018

இயற்கையின் பெருங்கொடை காடுகள். காடுகள் மழை சரிவரப் பெய்யவும், உயிர்ச் சங்கிலி சரியாக இயங்கவும் மிகவும் துணைபுரிகின்றன. ஆனால், காடுகளையும் மனித இனம் விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வனாந்திரங்களின் பரப்பை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றில் கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறது மனிதகுலம்.
மனித குலத்தால் தற்போதுவரை பாதிக்கப்படாத காடுகளில் 94 சதவீத காடுகள் இருபது நாடுகளில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக எழுபது சதவீத காடுகள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கின்றன.
அதனால் மீதமிருக்கும் வனப்பகுதியை அழியாமல் பாதுகாக்க மேற்சொன்ன ஐந்து நாடுகளால் மட்டுமே முடியும் என்று 'நேச்சர்' என்கிற அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல; பெருமளவு காடுகளை தன் வசம் வைத்திருக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகள், இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், மீதமிருக்கும் காடுகளைப் பாதுகாப்பது மிகவும் சிக்கலாகிவிடும் என்றும் அந்த இதழ் கவலை தெரிவித்திருக்கிறது. இதில் மிகவும் வேதனையான செய்தி என்னவென்றால், 1993 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான பதினேழு ஆண்டுகளில் உலகம் முழுக்க 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் அளவிலான காடுகளின் நிலப்பரப்பு மனிதர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. நம் இந்திய நாட்டின் மொத்தப் பரப்பளவைவிட கபளீகரம் செய்யப்பட்ட காடுகளின் நிலப்பரப்பு அதிகம் என்கிற தகவல் சூழலியலாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மனிதர்கள் குடியேறுதல், தொழிற்சாலைகள் அமைத்தல், விவசாயம், சுரங்கங்கள் உருவாக்குதல் போன்றவற்றைக் காரணமாக வைத்தே மேற்குறிப்பிட்ட காடுகளில் கபளீகரங்கள் நடந்திருக்கின்றன.
நடந்தவற்றை மாற்ற முடியாது என்றாலும், இனியாவது உலக நாடுகள் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- சு. கவிதா
