தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ஒலித்துப் பழகலாம்!

ஒலித்துப் பழகலாம்!

ஒலித்துப் பழகலாம்!


PUBLISHED ON : நவ 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உமா மிஸ்ஸுக்கு குழந்தைகளோடு விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவரது விருப்பத்துக்கு ஏற்றார் போலவே, அந்த மாதம் முழுவதும் மழலையர் வகுப்புக்கு உமா மிஸ்ஸை மாற்றியிருந்தார்கள். மழலையர் வகுப்பில் இருந்த ஆசிரியர் வீட்டில் மரணம் நடந்துவிட்டதால், உமா மிஸ்ஸை அங்கே மாற்று ஆசிரியராகப் போட்டிருந்தார்கள்.

மிஸ்ஸின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தைப் பருவம் முடிந்து, சிறுவர் பருவத்துக்கு நகர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் அவர்களைக் குழந்தைகள் என்றுதான் சொல்லவேண்டும்.

அவ்வப்போது, மிஸ்ஸின் வகுப்பறைக்குப் போய் பார்ப்பேன். மிஸ் விளையாடிக்கொண்டும், பாடிக்கொண்டும், கதை சொல்லிக்கொண்டும் இருப்பார். மிஸ்ஸின் சுடிதாரைப் பிடித்துக்கொண்டு, இரண்டு மூன்று குழந்தைகள் எப்போதும் பின்னாலேயே வரும்.

அன்று வகுப்பறைக்குப் போனபோது, எல்லா குழந்தைகளையும் அமரவைத்து, என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். பொறுமையாகக் கேட்கத் தொடங்கினேன். ஆங்கில எழுத்துகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். வழக்கமான முறையில் அது இல்லை. ஒவ்வொரு எழுத்தின் பல்வேறு ஒலிப்புமுறையைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு ஆங்கில எழுத்தைச் சொல்லும்போதும், அதற்கு ஒரு சின்ன பாடல். பாடலைப் பாடும்போதே, அந்த எழுத்தின் பல்வேறு ஒலிப்பு முறைகள் தெரிந்தன. ஒருமுறை, இருமுறை, மும்முறை… என்று ஒவ்வொரு ஒலியையும் சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஆங்கில முதலெழுத்து 'A'க்கு மூன்று ஒலிப்புமுறை.

அதை விதவிதமாகப் பயன்படுத்தும் சொற்கள். அந்தச் சொற்களை இயல்பாக அறிமுகம் செய்தல். கேட்டுக்கொண்டே இருந்தேன். அன்றைய வகுப்பில் ஆங்கிலத்தின் முதல் மூன்று எழுத்துகளை மட்டும் அறிமுகம் செய்தார். அதை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து, குழந்தைகளைப் பழக்கினார்.

விளையாட்டுபோல குழந்தைகளும் ஒலிகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒருமித்த குரலில் அவர்கள் ஒலிகளைச் சொன்னபோது, அவ்வளவு அழகாக இருந்தது. இப்படியே அவர் ஆங்கிலத்தின் அத்தனை எழுத்துகளையும் அறிமுகம் செய்ய நிச்சயம் ஒரு மாதத்துக்கு மேல்கூட ஆகும் என்று தோன்றியது. ஆனால், ஏன் இப்படிப்பட்ட அறிமுகம்?

நான் எப்படி எழுத்துகளை அறிந்துகொண்டேன்? யோசித்தபோது, எனக்கு ஞாபகமே வரவில்லை. எப்படியோ எழுத்துகள் என்னுள் வந்துவிட்டன.

மதியம் மிஸ்ஸோடு உணவு அருந்தும்போது, இதைப் பற்றிய பேச்சு வந்தது.

“இதுக்குப் பின்னாடி, ஒரு பெரிய கதையும் ஆய்வும் இருக்கு கதிர். பொதுவாக மாணவர்கள் எப்படி வாசிக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் செஞ்சுருக்காங்க. பல மாணவர்களுக்கு வாசிக்கவே தெரியலை. அதாவது, எழுத்துக்கும் அதன் ஒலிப்பு முறைக்கும் என்ன தொடர்புன்னே தெரியலை. ஒரே எழுத்து வேறுவேறு இடங்களில் வேறுவேறு விதமான ஒலிப்புகளோட இருக்கும்.

புதுசா ஒரு சொல்லைப் பார்த்தவுடனே, மாணவர்கள் குழம்பிப் போறாங்க. எப்படி அதை உச்சரிக்கணும்னு தெரியலை. அவங்களுக்குத் தெரிஞ்ச உச்சரிப்போட சொல்லும்போது, கூடவே ஒரு சந்தேகம். நாம சரியாத்தான் உச்சரிக்கிறோமான்னு குழப்பம். இதனால என்ன ஆகுதுன்னா, மாணவர்கள் வாய்விட்டு வாசிப்பதே இல்லை. தயங்கறாங்க. பயம் வந்துடுது. வாசிப்பதையே நிறுத்திவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுடுது.

அமெரிக்காவுல நடத்தப்பட்ட ஆய்வுகள்ல, மாணவர்கள் மத்தியில வாசிப்புத் திறன் குறைவாக இருப்பதைக் கண்டுபிடிச்சு இருக்காங்க. இதற்கான காரணத்தைத் தேடியபோதுதான், ஒரு விஷயம் புரிஞ்சுது. எந்த எழுத்தை எப்படி ஒலிக்கணும், உச்சரிக்கணும்னு அவங்களுக்குத் தெரியலைன்னு தெரிஞ்சுக்கிட்டாங்க.

இதுநாள் வரை, வாசிப்பு எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டது? முழு சொற்களாகத்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. சின்ன வயசுல கதை கேட்டு, கதை சொல்லி, சொற்களை அறிமுகப்படுத்தினோம். மாணவர்கள் அந்தச் சொற்களை, அப்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட உச்சரிப்போட மனசுல வாங்கிக்கிட்டாங்க. பின்னாடி, வகுப்புகள்ல வந்து உட்காரும்போது, அந்தச் சொற்களை அப்படியே பார்த்தாங்க. முழுச் சொற்களாக கத்துக்கிட்டாங்க.

அதுதான் சிறந்த வாசிப்பு முறைன்னு இன்னிக்கும் பலர் வாதம் செய்யறாங்க. ஆனால், முதல்ல, ஒவ்வொரு எழுத்தையும் அதனுடைய பல்வேறு ஒலிப்புகளை அறிமுகப்படுத்தி, வாய்விட்டுச் சொல்வதற்குப் பயிற்சி கொடுத்து, பின்னர் சொற்களை அறிமுகப்படுத்தணுங்கற முடிவுக்கு வந்திருக்காங்க. இதுக்குப் பேருதான் போனிக்ஸ் முறை.

ஒவ்வொரு எழுத்தா சொல்லித்தந்தா, மாணவர்களுக்கு எரிச்சல் ஏற்படும்னு ஒருசிலர் சொல்றாங்க. அதற்கு நீண்டகாலம் ஆகும், அதனால், மாணவர்களுக்கு ஆர்வம் போயிடும்னு சொல்றவங்களும் இருக்காங்க. ஆனால், இதையெல்லாம் மீறி, போனிக்ஸ் முறையில் எழுத்துகளைக் கத்துக்கிட்டவங்களோட, வாசிப்புத் திறன் பன்மடங்கு கூடியிருப்பது உறுதியாகி இருக்கு.”

“அப்படின்னா, ஆங்கிலத்தை அதனோட ஒரிஜினலான ஒலிப்புமுறையோடு கத்துக்கறதுக்கு, போனிக்ஸ் முறை பயன்படுமா மிஸ்?”

“கரெக்ட். அதேபோல, ஒரே சொல்லுக்கு, பல்வேறு இடங்களில் பல்வேறு பொருள் இருக்கும். 'வெல்' அப்படின்னு ஒரு சொல்லை எடுத்துக்கோ. அதை 'நல்லது'ன்னும் சொல்லலாம். 'கிணறு'ன்னும் சொல்லலாம். இடத்துக்கு ஏற்ப பொருளும் மாறுபடும். இந்த வித்தியாசத்தையும் மாணவர்கள் கத்துக்க முடியும். ஒலிப்பு ஒண்ணுதான். அதற்கான அர்த்தங்கள் வேறு என்ற புரிதலும் மாணவர்களுக்கு ஏற்படும்.”

“ஆங்கில ஒலிப்புகளைக் கத்துக்கறது ரொம்ப கஷ்டமா மிஸ்?”

“நிச்சயம் இல்லை. சின்னக் குழந்தைகளுக்கு ஆரம்பத்துலேயே சொல்லிக் கொடுத்துட்டா, சுலபமா புரிஞ்சுடும், பழகிடும். உங்களை மாதிரி கொஞ்சம் வளர்ந்த மாணவர்கள், தாராளமா யூடியூப் பார்த்துக் கத்துக்கலாம். ஏராளமான வீடியோக்கள் இருக்கு. பொறுமையாக, ஒவ்வொரு எழுத்தையும் ஒலிச்சுப் பழகலாம். இரண்டு எழுத்துச் சொற்கள், மூன்று எழுத்து, நான்கு எழுத்துச் சொற்கள் என்று… தொடர்ச்சியாகப் பயிற்சி எடுத்துக்கலாம். இதன் மூலமாக, அடுத்த முறை புதுசா ஒரு சொல்லைப் பார்த்தவுடன் பயம் ஏற்படாது. குழப்பம் ஏற்படாது. சரியான ஒலிப்போடு அதைச் சொல்ல முடியும். வாசிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும். முயற்சி செஞ்சு பாரு கதிர்.” என்றார் உமா மிஸ்.

இன்று இரவே, உமா மிஸ் சொன்னதை முயற்சி செய்து பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us