தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பிரின்டர் கட்டும் வீடு; ஐ.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்!

பிரின்டர் கட்டும் வீடு; ஐ.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்!

பிரின்டர் கட்டும் வீடு; ஐ.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்!


PUBLISHED ON : நவ 12, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 12, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாளில் எழுத்துகளை அச்சிடும் பிரின்டரைத்தான் பலரும் பார்த்திருப்போம். வீடு கட்டும் பிரின்டரை பார்த்திருக்கிறோமா?

மிகக் குறைந்த செலவில், விரைவான காலத்தில், வீடுகட்டித் தரும் பிரின்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள். உலகெங்கும் முப்பரிமாண பிரின்டர் தொழில்நுட்பம், பரவலாக கவனத்தை ஈர்த்து வருகிறது. நாம் விரும்பிய வடிவங்களை, முறுக்குப் பிழிவது போன்று வார்த்துக்கொடுப்பதுதான், இப்பிரின்டர்களின் வேலை.

பிளாஸ்டிக் வார்ப்பு, உலோக வார்ப்பு, கான்கிரீட் வார்ப்பு என்று பல வகை தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன. முப்பரிமாண பிரின்டர் அடிப்படையிலான கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் முன்னணியில் உள்ளன. அதில், இந்தியாவும் இணைந்துகொண்டுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர், ஐ.ஐ.டி. மாணவர்கள்... Tvasta Manufacturing Solutions என்று பெயரிடப்பட்டுள்ள இக்குழுவில், ஆதித்யா, பரிவர்த்தன் ரெட்டி, வித்யாசங்கர் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

“உலகெங்கும் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், வீடுகளின் தேவையும் கணிசமாகக் கூடியுள்ளது. எனினும், திறமையான கட்டுமான ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. இப்பிரச்னைக்கான தீர்வாகத்தான், முப்பரிமாண பிரின்டர் தொழில்நுட்பத்தைப் பார்க்கிறோம்.

ஒரு கட்டடத்தை ஆரம்பிக்கும்போது, அதை முடிக்க ஒரு நேரம் திட்டமிடுவோம். ஆனால், பெரும்பாலும் அவ்வாறு குறித்த நேரத்துக்குள் முடிவதில்லை. இதுவே, கட்டுமானச் செலவுகள் கூடுவதற்கு முக்கிய காரணம்.

முப்பரிமாண பிரின்டர் வழியிலான தொழில்நுட்பத்தில், இப்பிரச்னையைப் பெருமளவு குறைக்க முடியும். 90 சதவீதம், திட்டமிடும் நேரத்துக்குள்ளாகவே முடிக்கலாம்.

விரும்பிய வடிவத்தையும், அளவையும் உள்ளீடாக பிரின்டருக்குள் கொடுத்துவிட்டால் போதும். துல்லியத்தன்மையுடன் வார்த்துக்கொடுக்கும். நாம் அவற்றைப் பயன்படுத்தி கட்டுமானத்தை எழுப்ப வேண்டியதுதான் மிச்சம்.

வழக்கமான கட்டுமானத்தைவிட, செலவு, 5லிருந்து 6 மடங்கு வரை குறையும். அதேபோல், நேரமும் கணிசமாகக் குறையும். அதாவது, தற்போதுள்ள தொழில்நுட்பத்தில், கான்கிரீட் கலவை செட் ஆக, 1 மாதம் ஆகும். எங்கள், தொழில் நுட்பத்தின்படி, அதற்கு வெறும் மூன்றே மணி நேரம் போதும்.

இதனால், 350 சதுர அடி பரப்பளவிலான வீட்டை, 1 வாரத்துக்குள் கட்டி முடிக்க முடியும். வீடும் வழக்கத்தை விட உறுதியாக இருக்கும்.

அமெரிக்காவில் எந்தவொரு தொழில்நுட்பம் வந்தாலும், நம் நாட்டுக்கு அது வந்தடைய, அல்லது புழக்கத்துக்கு வர பல ஆண்டுகள் ஆகும். இந்த தொழில்நுட்பத்தில் நாமும் முன்னணியில் இருக்கிறோம்.

இந்தியாவிலேயே, முதன்முறையாக முப்பரிமாணத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 10x10 என்ற அளவில் கட்டட மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்த முப்பரிமாண பிரின்டர் தொழில்நுட்பத்தை உருவாக்க, மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. ஐ.ஐ.டி. சிவில் இஞ்சினீயரிங் துறை எங்களுக்கு உறுதுணையாக இருந்தது.

தேசிய கட்டுமானக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், எங்களுக்கு முழு ஆதரவு வழங்கி வருகின்றனர். மேலும், நலிவடைந்த மக்களுக்கான சமுதாயக் கூடம், கழிப்பறைகள் போன்ற கட்டுமானத் திட்டங்களிலும் எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

பொதுவாக, புதிய தொழில்நுட்பங்கள் சந்தைக்கு வரும்போது, மக்களால் அது உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படாது. அதற்கு காலஅவகாசம் தேவை. முப்பரிமாணப் பிரின்டர் கட்டுமானத் தொழில்நுட்பம் கட்டுமானத் துறைக்கு வரப்பிரசாதம். அது, நிச்சயம் மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us