PUBLISHED ON : பிப் 05, 2018

வளரும் குழந்தைகளில் சிலருக்கு காது மடற்பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். இக்குறைபாட்டை மைக்ரோடியா (Microtia) என்கின்றனர். சரியாக வளராத சதை, செவியின் பாதையை அடைத்துக் கொண்டிருப்பதால், இவர்களுக்குப் பிறர் பேசுவதைக் கேட்பதில் சிரமம் இருக்கும். அதனால் செயற்கையாக ஒரு காதுமடல் செய்து பொருத்திவிட்டால், இவர்களால் மற்றவர்களின் குரலைக் கேட்க முடியும். செயற்கைக் காதுமடல் உருவாக்கத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்துவந்தன. அதில், மனிதர்களின் பிற உடற்பகுதிகளிலும் எலியின் உடம்பிலும் செயற்கையாக இம்மடல்களை வளர்த்து, பின்னர் தனியே பிரித்து, காதுகளில் பொருத்திவந்தனர். தற்போது இக்குறைபாடு உடையவர்களின் உடம்பிலிருக்கும் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கி, சீன மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குறைபாடுடையவர்களுக்குத் தனியாகப் பொருத்தவேண்டிய அவசியமின்றி, இக்குருத்தெலும்பு காதுகள் இயல்பான காதுகள் போன்றே வளர்ந்துவிடும். இது, உலகின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.