PUBLISHED ON : ஜூன் 26, 2017

விவரம் தெரிவதற்கு முன்பே, நேபாளத்தின் தெருக்களில் நிராதரவாக விடப்பட்ட ஒரு சிறுவன், கவனித்தக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர், எழுத்தாளர் என்ற நிலையை எட்டியுள்ளார். அன்றாட வாழ்வைக் கழிக்க எதையும் செய்யத் துணிந்த, முரட்டுத்தனம் கொண்ட அந்த சிறுவன், மிகச் சிறந்த வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறான். தற்போது 26 வயதாகும் பாசு ராய் என்ற அந்த இளைஞன் எழுதிய, 'ஃபிரம் த ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் காத்மாண்டு' (From the Streets of Kathmandu) என்ற புத்தகம், அதிகம் விற்பனையாகும் புத்தகங்களுள் ஒன்றாகி இருக்கிறது. அப்புத்தகத்தில் தன் கடந்த கால வாழ்வை எவ்வித ஒளிவு மறைவும் இன்றி எழுதியிருக்கிறார்.
அவர் கூறியவற்றிலிருந்து....
சிறு வயது நினைவுகள்...
ரொம்பக் கொடுமையான வாழ்க்கை. அப்பா பக்கவாத நோயால் இறந்துட்டார். என்னைக் காப்பாத்த முடியாத என் தாய், என்னைத் தெருவில் விட்டுவிட்டார். அப்போது எனக்கு 4 வயதுதான். யார் யாரோ என்னை அடிப்பாங்க. மிகக் கடுமையாக நொறுக்கப்பட்டிருக்கேன். பிறகு ஒரு நாள், என்னை யாரோ தூக்கிட்டுப்போனாங்க. அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியல.
ஏன்னா, என்னத் தூக்கிட்டுப் போனவங்க, எனக்கு பிச்சை எடுக்க கத்துக் கொடுத்தாங்க, திருடச் சொல்லிக் கொடுத்தாங்க. அதை செய்யலன்னா, அடி கிடைக்கும், சாப்பாடு கிடைக்காது. எப்படியாவது சாப்பாடு கிடைச்சா போதும்னுதான் எனக்குத் தோணும். சின்னச் சின்ன தெருக்களை கொண்ட நேபாளத்தின் காத்மாண்டு பகுதியில, நிறைய பசங்களோட நானும் தெருத்தெருவா சுத்தினேன். வீடுகள், குடும்பம் இப்படில்லாம் அந்த தெருவுல இருக்காது. எப்ப பார்த்தாலும், அடிதடி மோதல்தான். இதுலருந்து எப்படி தப்பிக்க முடியும்னே தெரியலை. ஆனால், விடிவுகாலம் பொறக்காதான்னு காத்துக்கிட்டு இருந்தேன்.
கொத்தடிமை வாழ்க்கை
மத்த பிள்ளைங்க பள்ளிக்கூடம் போகும்போது, நான் மட்டும் ஏன் இதெல்லாம் பண்றேன்னு தோணும். எங்ககூட எப்பவும் யாராவது அடியாள் மாதிரி ஒருத்தர் இருப்பாரு. நாங்க எங்க போறோம், என்ன பண்றோம்னு நோட்டம் விட்டுக்கிட்டே இருப்பாரு. படிக்க ஆசை இருந்தாலும், அவங்களோட மிரட்டலுக்குப் பயந்து வேலை செய்வோம். எப்படியாச்சும் இன்னிக்கு சாப்பிடணும், அதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணலாம்ன்னுதான் யோசிப்போம். அப்படித்தான் எங்கள பழக்கினாங்க. எந்தவிதமான துணையோ உதவியோ இல்லாம, தெருக்கள்ல வாழ்ற குழந்தைகளோட வாழ்க்கை ரொம்ப வேதனையானது.
மாறிய வாழ்க்கை
நேபாளத்துல சைல்ட் வொர்க்கர்ஸ்-ங்கிற (Child workers) தொண்டு நிறுவனம்தான், என் தலையெழுத்தை மாத்திச்சு. என்னை அந்த அமைப்பினர் மீட்டு, பராமரிச்சாங்க. முரட்டுத்தனமான சிறுவர் கூட்டத்துல இருந்ததாலே நானும் மூர்க்கத்தனமாதான் நடந்துப்பேன். என்னை ஒரு நல்ல மனுஷனா மாத்த ரொம்பவும் பாடுபட்டாங்க. கொஞ்ச காலத்துக்கப்புறம் இந்தியாவுல நடந்த தெற்காசிய குழந்தைத் தொழிலாளர்கள் பேரணியில கலந்துக்க வாய்ப்புக் கிடைச்சது. இந்தியாவுடனான என்னோட உறவு தொடங்கியது. டில்லி திறந்தநிலை பல்கலைக்கழகத்துல சேர்ந்து படிச்சேன; படிப்படியா என் வாழ்க்கை மாறிடுச்சு. மேடை நாடக நடிகன் ஆகணும்ங்கிறது என்னோட ஆசை.
புத்தகம்
எப்பவும் தனியாவே இருப்பேன். எனக்குத் தோன்றுகிற விஷயங்களை எழுதுவேன். அதைப் புத்தகமா போடச் சொல்லி கைலாஷ் சத்யார்த்தி ஒருமுறை சொன்னாரு. அதுக்கு அப்புறம்தான் புத்தகமா இதை வெளியிட முயற்சி பண்ணினேன். என்னோட கதை வெற்றிக் கதையான்னு தெரியாது, ஆனா தோல்விக் கதை இல்லைன்னு மட்டும் தெரியும்.
பாசு இப்போது, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வலி நிறைந்த அவரது வாழ்க்கையே, அவரது முன்னேற்றத்துக்கும் தூண்டுகோலாகியுள்ளது.