PUBLISHED ON : ஜூன் 26, 2017

மத்திய பிரதேசத்துல, விதிஷாங்கிற சிறிய ஊர்ல, போலீஸ் கான்ஸ்டபிளா வேலை பார்த்தவரோட மகன் கைலாஷ். எளிமையான குடும்பம் என்றாலும், படிக்க வைக்க வசதி இருந்தது. மகாத்மா காந்தியை மிகவும் பிடிக்கும். மகாத்மாவோட 100வது பிறந்தநாளுக்காக, ஊர் தலைவர்கள் சாதி ஒழிப்பது எப்படின்னு கூட்டத்துல பேசினாங்க. ஊர் தலைவர்கள் பேசினதுல உற்சாகமானார் கைலாஷ்.
நமக்குப் பிடிச்சவங்களுக்கு பிறந்தநாள்னா, அவங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு விஷயத்தை செய்வோம். கைலாஷுக்கு 15 வயது. ஊர் தலைவர், காந்தியின் பிறந்தநாளுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சபோது, 'சாதி பாகுபாடு மிகுந்த ஊர் மக்களை ஒண்ணா இணைக்கலாம்'னு முடிவெடுத்தார் கைலாஷ்.
தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து, விருந்துக்கு ஏற்பாடு செஞ்சாரு. ஊர் பெரிய மனிதர்களை அந்த விருந்துக்கு அழைச்சாரு. மக்கள் மகாத்மா காந்தி பூங்காவில் சமைக்க ஆரம்பிச்சாங்க. நேரம் போகப்போக, கைலாஷ் உற்சாகமாக ஏற்பாடுகளைச் செய்தார்.
சாப்பாட்டு நேரமும் வந்தது. ஆனால் கைலாஷிடம் வருவதாக வாக்களித்த ஒரு தலைவர்கூட வரல. ஏழை மக்கள் செஞ்ச உணவுக்கு அவங்க கொடுத்த மரியாதை அவ்வளவுதான். நேரடியா அவங்க வீடுகளுக்கு போய் அழைச்சாரு. வராம தவிர்க்க, ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொன்னாங்க.
மனம் நொந்து போய், மகாத்மா காந்தி பூங்காவுக்கு திரும்பிப் போனார். இரவு மணி 10. ஊர் தலைவர்கள் யாரும் வரவில்லை என்ற எந்தவித உணர்ச்சியையும் வெளியே காட்டாம இருக்க முயற்சி செஞ்சாரு. ஆனால், சாப்பாட்டை வாயில வச்சதும் அழத் தொடங்கிட்டாரு. அவர ஒரு பெண் சமாதானம் செஞ்சாங்க. தாழ்த்தப்பட்ட சாதிக்காரங்க சமைச்ச உணவை, மேல் சாதிக்காரங்க சாப்பிடுவாங்க அப்டிங்கறதுல அந்தப் பெண்ணுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததே இல்ல. கைலாஷ் வந்து சாப்பிட்டதே பெரிய விஷயம்னு அந்தப் பெண் சொன்னாங்க.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தன் பெயரில் இருந்த சர்மா அப்டிங்கற சாதி அடையாளத்தை நீக்கிட்டு, 'சத்யார்த்தி'னு சேர்த்துக்கிட்டாரு. சத்யார்த்தி அப்டின்னா 'உண்மையைத் தேடுபவன்'னு பொருள்.
“வாழ்க்கையில மனுஷனுக்கு கோபமே வரக்கூடாதுன்னு சொல்லி வளர்க்கப்படறோம். ஆனா கோபம்தான் ஒருவருடைய எண்ணங்களைச் சீர் செய்யும். கோபம் சமூகநெறியையும், சமூக மாற்றத்தையும் கொடுக்கும்” என நம்புகிறார் கைலாஷ்.
அவருடைய வாழ்க்கையில ஏற்பட்ட பெரிய மாற்றங்களுக்குப் பின்னாடி கோபம் இருந்தது. கோபத்தில் உணர்ச்சி வசப்படாமல், அதை சமூக மாற்றத்திற்காக, இப்ப வரைக்கும் பயன்படுத்தி வர்றாரு கைலாஷ் சத்யார்த்தி.
கடந்த 30 வருஷத்துக்கும் மேல குழந்தைகளோட நலனுக்காக வேலை செஞ்சு வர்றாரு. குழந்தைகளை சுதந்திரமா பள்ளிக்கு அனுப்புவது, சுதந்திரமா கனவு காணவைப்பதுதான், அவருடைய கனவு. கைலாஷுக்கு 2014-ல், அமைதிக்கான நோபல் பரிசு குடுத்து கௌரவிச்சாங்க.
“குழந்தைகளுக்கு உரிமை, நம்பிக்கை, பாதுகாப்பு கிடைக்க கல்வி ரொம்ப அவசியம்” என்று அமைதிக்கான நோபல் பரிசு பெறும்போது, கைலாஷ் வலியுறுத்தியிருக்கார்.