PUBLISHED ON : ஜன 01, 2018

உடலுக்குத் தேவையான அதிக சத்துகளைத் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. ஆரஞ்சு மரம் 10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.
'ருடாசியே' (Rutaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஆரஞ்சுப் பழம் என்பது 'சிட்ரஸ் x சினேன்சிஸ்' (Citrus × sinensis) பேரினத்தைச் சேர்ந்த பழம். 'சிட்ரஸ் மேக்சிமா' (Citrus Maxima) என்ற தாவரமும், 'சிட்ஸ் ரெட்டிகுலாட்டா' (Citrus Reticulata) என்றத் தாவரமும் கலந்து உருவான கலப்பின ரகமே ஆரஞ்சு மரம். தமிழில் இன்னரந்தம், தோடம்பழம் எனப்படுகிறது.
அதிக சீதோஷ்ணத்துடன் கூடிய சமவெளிப் பகுதிகளிலும், நீர்ப்பாசன வசதிகளுடன் கூடிய செம்மண் கலந்த பகுதிகளிலும் நன்கு வளரும். மண்ணின் கார, அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 சதவீதம் வரை இருக்க வேண்டும். குருத்து ஒட்டு முறையில் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடவு செய்யும் காலம். 5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடைக்கு வந்து விடும். ஆரஞ்சில் 600 வகைகள் உண்டு. 50 ஆண்டுகள் வரை வாழும். வாழ்நாளில் 60,000 மலர்கள் வரை பூக்கும்.
இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆரஞ்சுப் பழம் அதிக அளவில் விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது. ஆரஞ்சுப் பழத்தில் உடலுக்கு நலன் தரும் சிட்ரிக் அமிலம் நிறைந்த வைட்டமின் சி அதிக அளவு உள்ளது. ஆரஞ்சு அதிக அளவில் பழச்சாறாகப் (Juice) பயன்படுத்தப்படுகிறது. ஜாம், ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள் தயாரிப்பிலும் உதவுகிறது. ஆரஞ்சுப் பூ வாசனைத் திரவியம் தயாரிக்கவும், தோல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதற்கு, 'கடவுளின் பழம்', 'தங்க ஆப்பிள்' என்ற செல்லப் பெயர்களும் உண்டு. ஆரஞ்சு விளைச்சலில் பிரேசில், அமெரிக்கா, சீனா, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. இந்தியாவுக்கு இதில் நான்காம் இடம்.
- கி.சாந்தா
