PUBLISHED ON : டிச 31, 2018

காந்தியைப் பார்ப்பதற்கு இராமசாமி என்ற இளைஞர் வந்திருந்தார். அவருடன் காந்தி சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
பேச்சின் நடுவில் காந்தி எதார்த்தமாக ஒரு கேள்வி கேட்டார். ''நீங்கள் உங்கள் தந்தைக்குக் கடிதம் எழுதும்போது எந்த மொழியில் எழுதுவீர்கள்? அவர் உங்களுக்கு எந்த மொழியில் பதில் எழுதுவார்?''
''நாங்கள் இருவருமே ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதிக் கொள்வோம்''என்றார், இராமசாமி.
இந்தப் பதிலைக் கேட்டு காந்தியடிகள் அதிர்ந்தார். ''ஆங்கிலத்திலா? ஏன் அப்படி? உங்கள் தாய்மொழி தமிழ்தானே? நீங்கள் தமிழில் கடிதம் எழுதிக்கொள்ள மாட்டீர்களா?''
இராமசாமி சிறிது யோசித்தார். பின்னர், ''உயர்ந்த, அறிவியல்சார்ந்த கருத்துகளைத் தமிழில் பகிர்ந்துகொள்ள இயலாது என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் நாங்கள் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறோம்'' என்றார்.
அதன்பிறகு நெடுநேரத்துக்கு இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார் காந்தி. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இருவர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொள்வதை அவரால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.
மற்றவர்கள் இப்படிச் செய்தால்கூடப் பரவாயில்லை. இராமசாமியின் தந்தை, நாடறிந்த தலைவரான இராஜாஜி. நல்ல தமிழறிஞர், எழுத்தாளரான அவரா தன் மகனுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார்? இதைப்பற்றி யோசித்து யோசித்து, காந்திக்குத் தூக்கமே வரவில்லை.
மறுநாள் அதிகாலை மூன்று முப்பது மணிக்கு எழுந்து உட்கார்ந்தார் காந்தி. இராஜாஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:
'அன்புள்ள இராஜகோபாலாச்சாரி, நேற்றிரவு நான் சரியாகத் தூங்கவில்லை. அதற்கு நீங்களும் ஒரு காரணம். நீங்களும் உங்கள் மகனும் ஆங்கிலத்தில்தான் கடிதங்கள் எழுதிக்கொள்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். மனம் உடைந்துபோனேன்.
உங்கள் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். நீங்கள் இப்படிச் செய்யலாமா? தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களே இப்படித் தமிழை நிராகரித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள்?'
காந்தியடிகள் அத்துடன் நிறுத்தவில்லை. மறுநாள் இராமசாமியை அழைத்து, ''உன் தந்தைக்குத் தமிழில் ஒரு கடிதம் எழுது'' என்று கட்டளையிட்டார். அந்தக் கடிதத்துடன் தன்னுடைய குறிப்பொன்றையும் சேர்த்தார்: ''இதோ, உங்கள் மகன் தமிழில் எழுதத் தொடங்கிவிட்டார். இனி நீங்களும் இந்தப் பழக்கத்தைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.''
இந்த நிகழ்வின் மூலம், மக்கள் பேச்சிலும் எழுத்திலும் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்ற காந்தியடிகளின் நம்பிக்கை தெளிவாகிறது.
- என். சொக்கன்

