PUBLISHED ON : டிச 31, 2018

வரலாற்றைத் தேடுவோம்!
பள்ளியில் படிக்கும் வரலாறு பொதுவானது. உலகம், இந்தியா, கற்காலம் என அது பல்வேறு பகுதிகளைத் தொட்டுச் செல்லும். இவற்றைக் கற்பதோடு நம் ஊர் நாம் வாழுமிடத்தின் வரலாற்றை அறிவதும் முக்கியம்.
எங்கோ, எப்போதோ, யாருக்கோ நடந்தது பற்றி நமக்கென்ன? என்ற விட்டேத்தியான எண்ணம் வரலாறு குறித்து பலருக்கும் உண்டு. இது தவறு. இங்கிலாந்து மன்னர்கள், யுகோஸ்லாவிய போர்கள், அண்டார்ட்டிகாவின் பனிமலைகள் குறித்து அறிவது போலவே, வந்தவாசி, வடுகப்பட்டி என்று நம்மைச் சுற்றியுள்ள ஊர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
மாணவர்கள், தங்கள் வாழ்விடம் சார்ந்து நிறைய வாசிப்பதும், அவற்றை நேரில் கண்டு புரிந்துகொள்வதும் அவசியம். தமிழில் காமிக்ஸ் உள்ளிட்ட வடிவங்களில் வரலாற்று நூல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. 2019 ஆம் ஆண்டில் புதிய வரலாற்று அறிமுக முயற்சிகள் நடக்க வேண்டும்.
பவித்ரா ஸ்ரீநிவாசன், வரலாற்று ஆர்வலர்
இ-லேர்னிங் துறைக்கு சிறந்த ஆண்டு!
2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்த முக்கிய முன்னேற்றமாக, அரசு பாடப்புத்தகங்களில் QR Code அறிமுகமானதைக் கூறலாம். அரசு, டிஜிட்டல் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததற்கான அடையாளமாக இதனைப் பார்க்கிறேன்.
2019 ஆம் ஆண்டில், உள்ளூர் மொழிகளில் கல்வி வீடியோக்களின் தேவை அதிகரித்துள்ளது. நிறைய ஸ்டார்ட் அப்-கள் இ-லேர்னிங் துறைக்குள் வந்தவண்ணம் உள்ளனர். தமிழகப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அதிகரிப்பதும் அவசியமாகும். அரசே, தற்போது வீடியோ பாடங்களுக்கான உள்ளடக்கங்களைத் தயாரித்து வருகிறது.
வீடியோ பாடங்களில் VR, AR போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். அத்துடன், கல்விக்கென்றே தனியாக ஒரு சேனல் வர வேண்டும்.
-பிரேமானந்த் சேதுராஜன், LMES நிறுவனர்
தமிழ் வளரும்!
புதிய தமிழ் கலைச்சொற்கள் பயன்பாடும், இணையதள எழுச்சியும் தமிழ் மொழியைப் பரவலாக்கி மேம்படுத்தியுள்ளன. உலக நடப்புகள், அரசியல், அறிவியல் தகவல்களை இன்று தமிழிலேயே வாசிக்கமுடியும். தொழில்நுட்ப அறிவுக்கான தமிழ் புத்தகங்களுக்கும், காணொளிகளுக்கும் தேவையும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்களின் அறிவுத்தேவையை ஒட்டி, அதை வணிக ரீதியாக பயன்படுத்திக் கொள்ள இளைஞர்கள் முன்வந்தால் தமிழ்மொழி செழுமை பெற்று வளரும்.
-முனைவர் சு.சதாசிவம், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி
போட்டித் தேர்வுகளில் ஜொலிப்பார்கள்!
தமிழக அரசின் புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்துக்கு நிகரானதாக இருக்கிறது. எனவே, எங்கள் பள்ளியில் தனியார் பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்குவதை நிறுத்திவிட்டோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேசமயம், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இது சவாலாக இருக்கிறது. புதிய பாடத் திட்டத்தில், முந்தைய முறையைப்போல், கற்றல் கற்பித்தல் என்பது மனப்பாடம் சார்ந்ததாக இல்லாமல், புரிதல் சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப ஆசிரியர்கள் தங்களைப் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு, புத்தகங்களைத் தாண்டி, மிக விரிவாகப் பாடங்களை நடத்திப் புரியவைக்க வேண்டும். இதற்காக நிறைய வொர்க் ஷீட்ஸ் தயாரிக்க வேண்டும்.
2, 7, 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், புதிய பாடத் திட்டங்கள் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறக்கூடிய தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
முனைவர்.விஜயன்
தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்
சீயோன் பள்ளி குழுமத் தலைவர்
கூடுதல் ஆசிரியர்கள் தேவை!
2019 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அறிவியல் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கூடுதலாக்க வேண்டும். பரவலாக பல பள்ளிக்கூடங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை ஒற்றை ஆசிரியர் கற்றுத்தரும் நிலைமை உள்ளது. விரிவாக அமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்களைக் கவனத்துடன் எடுக்க, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனி ஆசிரியர்கள் தேவை. பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்புகளில், பாடங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா அவசியம். உதாரணத்துக்கு, உடற்கூறியல் தொடர்பாக அருகிலுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்குப் போய் வரலாம்.
மா.பாலசுப்ரமணியன்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்,
வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

