PUBLISHED ON : டிச 31, 2018

“உங்க புத்தாண்டு சபதம் என்ன மிஸ்?” உற்சாகமாக ஆரம்பித்தேன். உமா மிஸ் என்னைப் பார்த்து வெறுமனே புன்னகைத்தார். அதாவது அவர்களுக்கு அதில் நம்பிக்கையில்லை என்பதை அவரது முகம் காட்டிக்கொடுத்தது.
புத்தாண்டு பிறக்கும் உற்சாகம் கடந்த சில நாட்களாகவே என்னைத் தொற்றிக்கொண்டது. ஏதேனும் ஒன்றைப் புதிதாகச் செய்யவேண்டும் என்ற அவா. அதனால், விதவிதமாக யோசித்துக்கொண்டு இருந்தேன். எங்கே இருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை.
“ஏன் மிஸ் சிரிக்கறீங்க?”
“சபதம் எடுத்துட்டு, அதை அடுத்த ஒரே வாரத்துல மறந்துட்டுப் போயிடுவோம். அதுக்கு எதுக்கு சபதம்? இயல்பாக இருப்போமேன்னு நான் சபதமே எடுக்கறதில்ல. சொல்லப்போனால், இயல்பாக இருப்பேன்னு வேணும்னா சபதம் எடுத்துக்கலாம்.”
“ஏன் மிஸ் இப்படிச் சொல்றீங்க? என்னவெல்லாம் செய்யணும்னு திட்டமிடறது தப்பில்லையே?”
“தப்பில்லைதான். ஆனால், அந்தத் திட்டத்தைச் செயற்படுத்தாமல் போனால், அதுக்கு என்ன மரியாதை இருக்கு?”
உண்மைதான். பல சமயங்களில், சபதம் என்னவென்றே தெரியாமல் மறந்து போய்விடும். அல்லது சபதத்தை நிறைவேற்றவில்லை என்று நெஞ்சில் குற்ற உணர்ச்சி அரித்துக்கொண்டே இருக்கும். அதில் இருந்து மீள்வதே இன்னொரு பெரிய பிரச்னை.
“அப்ப சபதம் எடுக்கறதிலேயே அர்த்தமில்லைங்கறீங்களா மிஸ்?”
“அப்படிச் சொல்லல. இதுல ரெண்டு மூணு விஷயம் இருக்கு. செய்ய முடியாததை, அடைய முடியாததை, சபதமா எடுத்துக்கக் கூடாது. எதை எடுத்துக்கிட்டாலும், அதை ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்ள முடியக்கூடிய சபதமா எடுத்துக்கணும். எல்லாத்தையும்விட முக்கியமானது, அந்தச் சபதம் ஒரு சுமையா, அழுத்தமா, கழுத்தைச் சுத்தின பாம்பா ஆகிவிடக்கூடாது. இயல்பாக, சந்தோஷம் தரக்கூடிய ஒண்ணா இருந்துச்சுன்னா, ரொம்ப சுலபமா அதைக் கடைப்பிடிக்க முடியும். அதுவே இன்னும் பர்ப்பஸ்ஃபுல்லா இருந்தா, ரொம்ப நல்லது.”
“அதாவது, தேவையை ஒட்டியதா இருக்கணுமா மிஸ்?”
“கரெக்ட். உதாரணமா, நான் தினமும் அரைமணிநேரம் சிரிப்பேன்னு சபதம் எடுத்துக்கோ. இன்னிக்கு எத்தனை பேர் சிரிக்கிறோம்? அதை மறந்தே போயிட்டோம். புத்தகங்கள்ல ஜோக்ஸ் படிக்கலாம், டி.வி.யில காமெடி பார்க்கலாம், ஃப்ரெண்ட்ஸோட பேசிச் சிரிக்கலாம்…. சிரிச்சா மனசு எவ்வளவு லேசாகும் தெரியுமா? எல்லா கஷ்டமும் மறந்துபோயிடும்.
வாரத்துக்கு ஒருமுறை யாராவது உறவினர் வீட்டுக்குப் போவேன்னு சபதம் எடுத்துக்கோ. போகமுடியுதோ இல்லையோ, போன்லயாவது பேசு. நண்பர்களோட பேசுவோம். அரட்டையடிப்போம். ஆனால், உறவினர்களோட பேசவே மாட்டோம். எல்லோரும் ஒவ்வொரு இடத்துல இருப்பாங்க. பார்க்கக்கூட முடியாது. அது நல்லதில்ல. உறவுகள் ரொம்ப முக்கியம். இணைஞ்சு வாழ்றதுதான் இந்தச் சமூகத்தோட அடிப்படை. ஆனால், காலமாற்றத்துல, உறவினர்களோட பேசிக்கறதுகூட இல்ல.
டி.வி. பார்க்காமல், மொபைல் பார்க்காமல், எல்லோரும் ராத்திரியில ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம்னு சப்தம் எடுத்துக்கோ. பல வீடுகள்ல ஒண்ணா சாப்பிடற பழக்கமே அத்துப் போச்சு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு, வேற வேலைகள் நடுவுல சாப்பிடுறாங்க. அதை மாத்தி, ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாமே? அப்பா, மகன், அம்மா, மகள் என்று யாரும் மனம்விட்டுப் பேசிக்கொள்வதே இல்லை. அந்த மாதிரி பேசறதுக்காவது, இதை ஆரம்பிக்கலாம்.”
உமா மிஸ் சொல்லச் சொல்ல, ரொம்ப ஆர்வமாக இருந்தது. இதெல்லாம் மிகமிக எளிமையாகத் தோன்றின.
“உங்க வீட்டுல மொட்டைமாடி உண்டா?”
“உண்டு மிஸ்.”
“போயிருக்கியா?”
“இல்ல மிஸ். அங்க போறதுக்கு எந்த வேலையும் இல்லை…”
“சும்மா மாடிக்குப் போய் பார். அங்கே காலை வீசி நட. சும்மா, ஜிலுஜிலுன்னு காத்து முகத்துல அடிக்கும். அது போதும். மனசு சந்தோஷப்படும். எங்கோ பீச்சுக்குப் போறேன், பூங்காவுக்குப் போறேன்னு நினைச்சுக்கறதைவிட, மொட்டை மாடிக்குப் போய் பார். உங்க வீட்டுல செடி வெச்சிருக்கீங்களா?”
“இருக்கு மிஸ். துளசி, ரோஜா, மல்லி எல்லாம் இருக்கு.”
“அதுக்கு தினமும் தண்ணி விடு. ஒவ்வொரு நாளும் அது எப்படியெல்லாம் வளருதுன்னு தொடர்ந்து பாரு. இலைகள் சின்னதா துளிர் விடும். இளம்பச்சை நிறம், படிப்படியாக கரும்பச்சையாக மாறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வளர்ச்சி தெரியும். பார்க்கவே ஆசையாக இருக்கும். குழந்தை வளர்வது மாதிரி.
அதைப் பார்க்க பார்க்க, மனசுக்குள் பசுமை துளிர்விடும். மென்மை மலரும். எதையும் விரோதமில்லாமல் புரிந்துகொள்ளச் சொல்லிக்கொடுக்கும் அழகு. இயற்கையின் மகத்துவம் அது. அது உன்னோட மனசை என்னவோ செஞ்சுடும்.” என்றவரது முகம் அப்படியொரு ஒளியோடு பொலிவு பெற்றது.
“வீட்டுல பல்லாங்குழி இருக்கா?”
“பரண்ல இருக்கு மிஸ். லீவுல பாட்டியோட விளையாடுவேன்.”
“குட், குட். தாயம், பல்லாங்குழி, பரமபதம் எல்லாம் எடுத்து வெச்சுக்கோ. அதுல இருக்கிற கணக்கு எப்பேர்ப்பட்டது தெரியுமா? தாயக்கட்டையில் எவ்வளவு விழணும்னு கணக்கெல்லாம் போட்டு விளையாடினா, அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.”
நான் விளையாடிய ஞாபகம் வந்தது. பாட்டி, சொல்லிச் சொல்லி என் காய்களை வெட்டுவார். அவருக்கு இணையாக விளையாடவே முடியாது.
“எதையும் சப்தம்னு நினைச்சு செய்யாதே. எதெல்லாம் நாம வழக்கமாகச் செய்யறதுன்னு பாரு. அதை இப்போ கைவிட்டிருப்போம். அதுக்கு எந்தக் காரணமும் இருக்காது. அதையெல்லாம் மீண்டும் பழக்கத்துக்குக் கொண்டுவர முடியுமான்னு பாரு. கொஞ்ச நாள்ல இதெல்லாம் திருப்பியும் போர் அடிக்கும். அப்புறம், வேறொரு செட் விஷயங்களை எடுத்துக்கணும். குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதையும் செஞ்சு முடிச்சுடணும். அதுதான் முக்கியம். ஒரே ஒரு சபதம் வேணும்னா எடுத்துக்கலாம்.”
“அது என்ன மிஸ்?”
“என்னோட மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது, பறிக்கவும் விடமாட்டேன்னு சபதம் எடுத்துக்கோ. அது போதும்.”
உமா மிஸ் சொன்னதில் உள்ள அர்த்தம் என்னவென்று மெல்ல யோசிக்க ஆரம்பித்தேன்.

