PUBLISHED ON : ஜன 18, 2016

பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் ஓரளவு சமமாக இருக்க வேண்டும். இதான் இயற்கையின் நியதி. ஆனால், நம் நாட்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில்தான் குழந்தைகள் பிறக்கின்றன.
இதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிந்து, பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழித்து விடுவதுதான் அந்தக் காரணம்.
'பெண்களுக்கு நம் சமூகத்தில் பாதுகாப்பு கிடையாது. அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க நிறைய செலவாகும். அதனால் அவர்கள் தேவை இல்லை' என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. இந்தத் தவறான கருத்தின் விளைவாகத்தான் பெண் குழந்தைகளைக் கருவிலேயே அழிக்கிறார்கள்.
இதையும் கடந்து பிறக்கும் பெண்களின் நிலை, பிறகும் மோசமாகத் தான் இருக்கிறது. நான்கு வயதுக்குள் இறந்து போகும் குழந்தைகளில் நூற்றுக்க 61 குழந்தைகள் பெண் குழந்தைகள்தான். சரியான கவனிப்பு இல்லாததாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் இவ்வளவு குழந்தைகள் இறக்க நேர்கிறது.
சரி எப்படியோ பிழைத்து விட்டார்கள். ஆனாலும் ஆண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் பெண்களுக்குக் கிடைக்கிறதா என்றால், இல்லை. நூற்றுக்கு ஐம்பது பெண் குழந்தைகளால் பள்ளிக்குச் செல்ல முடிவதில்லை.
இந்நிலை மாற வேண்டும். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சமமானவர்கள்; ஆண்களுக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டும்.
இதை வலியுறுத்தவே ஜனவரி - 24ம் தேதியைப் பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம்.
