PUBLISHED ON : டிச 31, 2018

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்று, புதிய சபதம் ஒன்றை ஏற்பது. ஒருவகையில் இப்படிச் சபதம் எடுப்பதென்பது, புதிய ஆண்டில் செய்யவேண்டிய பணிகளைத் திட்டமிட்டு முன்கூட்டியே வரையறுத்துக் கொள்வதுதான். மாணவ வாசகர்களிடம் உங்கள் புத்தாண்டுச் சபதம் என்ன? என்று கேட்டிருந்தோம். கோவைபுதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:
உ.விஷ்ணுசக்கரவர்த்தி (11ஆம் வகுப்பு)
பள்ளிப் பருவத்திலேயே, புகை மற்றும் குடிப்பழக்கத்திற்குச் சிலர் ஆட்படுகிறார்கள். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. திரையரங்குகளில் இதுபற்றி விழிப்புணர்வு விளம்பரங்கள் வந்தாலும், அதைக் கேலிக்கூத்தாக மட்டுமே பார்க்கின்றனர். அதுபோல, உரிய ஆவணங்கள் இல்லாமல், பைக் ஓட்டி விபத்துகளில் சிக்குகின்றனர். விபரீத விளையாட்டுகள், தேர்வில் தோல்வியடைந்தால் உயிரை விடுவது என, தற்போதைய காலகட்டத்தில் சகஜமாகிவிட்டது. எனவே, இதுபற்றிய விழிப்புணர்வை என் பள்ளியில் முடிந்த அளவு ஏற்படுத்தப் போகிறேன்.
சு.ஸ்ரீதிவ்யா (12ஆம் வகுப்பு)
பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவேண்டும். படிப்பில் சிலருக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. பொழுதுபோக்குகளை கொஞ்ச காலம் ஒதுக்கிவிட்டு, முழுவீச்சில் படிக்கப் போகிறேன்.
தி.க.பனம்பாரன் அரசு (12ஆம் வகுப்பு)
புது ஆண்டில் எங்கள் ஊரில் உள்ள நூலகத்தில் உறுப்பினராகச் சேரப்போகிறேன். பள்ளிப் படிப்போடு, பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்வேன். அதற்காக, நிறைய புத்தகங்களைப் பட்டியல்போடத் தொடங்கிவிட்டேன்.
ரா.கீர்த்தனா (11ஆம் வகுப்பு)
தப்பு செய்பவர்களைக் காட்டிலும், அது தெரிந்தும் தட்டிக்கேட்காமல் இருப்பவர்களைப் பார்ககும்போதுதான் பயம் வருகிறது என ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். மூளைக்கும் மனசுக்கும் போர் வந்தால், மனசு சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என விவேகானந்தர் கூறினார். எனவே, புத்தாண்டிலிருந்து, எனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கப் போகிறேன். நான் செய்தது தவறு என தெரிந்தால், அதை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டு, திருத்திக் கொள்வேன்.
ம.மனோஜ் (11ஆம் வகுப்பு)
புத்தாண்டு முதல், ஜங்க் புட்ஸ் எனப்படும் பீட்சா, பர்கர், சான்ட்விச், சிப்ஸ் போன்றவற்றை விடப்போகிறேன். இனி இயற்கையான உணவுகளையே எடுத்துக் கொள்வேன். ஆரோக்கியமான விளையாட்டுகள் மூலம் உடலை உறுதி செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.
ஜி.சரண்யா (12 ஆம் வகுப்பு)
இந்தப் புத்தாண்டு முதல், பெற்றோருக்குச் சிரமம் தராமல், வீட்டு வேலைகளில் பங்கெடுக்கப் போகிறேன். அதுபோல, என் தோழிகளோடு சேர்ந்து, வீட்டிலும் பள்ளியிலும் மரச்செடிகள் நடவுள்ளோம். முக்கியமாக, வீட்டுத்தோட்டம் அமைப்பது பற்றித் தெரிந்துகொண்டு, இயற்கை விவசாயம் கற்றுக் கொள்ளப்போகிறேன்.
சி.மதுபாலா (12 ஆம் வகுப்பு)
இன்றைய சூழலில், பெண் குழந்தைகள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடிவதில்லை. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள தற்காப்புக்கலை அவசியம் என்று தோன்றுகிறது. புதிய ஆண்டில் ஏதாவது ஒரு தற்காப்புக்கலையை முழுமையாக கற்றுக்கொள்ளப் போகிறேன். என் நண்பர்களிடமும் கற்றுக்கொள்ளச் சொல்லி இருக்கிறேன்.

