
வீரபாண்டிய கட்டபொம்மன்
3.1.1760 - 16.10.1799
பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி
வியாபாரம் செய்ய வந்து, நம்மை ஆள நினைத்த பிரிட்டிஷ்காரர்களை சுதந்திரப் போராட்டத்துக்குப் பல ஆண்டுகள் முன்பே எதிர்த்தார். அவர்களது ஆட்சித் தலைமையை ஏற்க மறுத்து, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போரிட்டார். இவ்வாறு தனது வாழ்க்கை மூலமாக, தமிழ் மண்ணில் வீரம் விதைத்த வீரராகத் திகழ்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன்.
இவரது வம்சாவளியினர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுக்கு வரி வசூலித்தல், படை வீரர்களைத் திரட்டிக் கொடுத்தல் போன்ற பணிகளில் இருந்தனர். அவர்களது ஆட்சி முடிவுக்கு வந்தபின், இவர்கள் தனி மன்னர் ஆனார்கள். அந்த வகையில் பாஞ்சாலங்குறிச்சி எனும் பாளையத்துக்கு மன்னரானார் கட்டபொம்மன்.
அப்போது பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட, பாளையக்கார மன்னர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. இதற்கு கட்டபொம்மன் சம்மதிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாமல் ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த அனைவரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டதால் போர் ஏற்பட்டது.
ஆலன் துரை எனும் ஆங்கிலேயர் பெரும்படையுடன் வந்து, கோட்டையைத் தகர்க்க முடியாமல் ஓடினார். நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை சந்திக்க அழைத்து, கைதுசெய்ய முயன்ற தந்திரத்தையும் கட்டபொம்மன் முறியடித்தார். அதன் பிறகு பானர்மேன் என்ற ஆங்கிலேயத் தளபதியுடன் கடுமையான போர் நடைபெற்றது. கோட்டையைக் காப்பாற்ற எண்ணி வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்து, சூழ்ச்சியால் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
இவரது வாழ்க்கை வரலாறு பல காவியக் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. தூக்கு மேடையிலும் தாய் மண்ணுக்காக முழங்கிய அவரது வீரம் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் மனத்தில் இன்றும் குடிகொண்டு இருக்கிறது.

