
ஜனவரி 1, 1894 - சத்யேந்திர நாத் போஸ் பிறந்த நாள்
கோல்கட்டாவில் பிறந்த இந்தியாவின் பெருமைமிகு இயற்பியலாளர். குவான்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் துறை உருவாகக் காரணமானவர். 'ஹிக்ஸ்போஸான்' பெயரின் பாதிக்குச் சொந்தக்காரர். 1954ஆம் ஆண்டு இந்திய அரசின் 'பத்ம விபூஷண்' விருது பெற்ற இயற்பியல் ஆளுமை.
ஜனவரி 2, 1920 - ஐசக் அசிமோவ் பிறந்த நாள்
ரஷ்யாவில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியல் புனைக்கதை எழுத்தாளர். 'இயந்திர மனித இயல்' என்ற சொல்லை முதன்முதலில் அறிவியல் புனைக்கதையில் பயன்படுத்தி எழுதிப் பிரமிக்க வைத்தார். வானவியல், உயிரியல், கணிதம், மதம், இலக்கியம் போன்ற துறைகளிலும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஜனவரி 3, 1969 - மைக்கேல் ஷூமாக்கர் பிறந்த நாள்
ஜெர்மனியைச் சேர்ந்த ஃபார்முலா 1 (மெர்சிடிஸ்) கார் பந்தய வீரர். ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். தொடர் வெற்றிகளால் 'உலகின் மிகச் சிறந்த ஓட்டுநர்' என்ற சாதனையைப் படைத்தவர். 91 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் வென்ற மின்னல் வீரர்.
ஜனவரி 4, 1809 - லூயிஸ் பிரெய்லி பிறந்த நாள்
பார்வையற்ற வர்களுக்கான பிரெய்லி எழுத்துகளை உருவாக்கி வழிகாட்டிய பிரெஞ்சு கல்வியாளர். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்லி முறையில் உருவான முதல் புத்தகத்தை 1829ஆம் ஆண்டு வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகளின் கல்விக்கு உதவிய லூயி பிரெய்லியை உலக நாடுகள் அங்கீகரித்து பெருமைப்படுத்தியுள்ளன.
ஜனவரி 6, 1883 - கலீல் ஜிப்ரான் பிறந்த நாள்
லெபனான் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது படைப்புகள் தனிமனித எண்ணங்களின் சுதந்திரத்தைப் பேசின. 'ஒட்டுமொத்த உலகமும் என் தாய்நாடு; அனைவரும் என் சக குடிமகன்கள்' என்பது ஜிப்ரானின் முத்திரை வாக்கியம்.
ஜனவரி 6, 1959 - கபில்தேவ் பிறந்த நாள்
பஞ்சாபின் சண்டிகரில் பிறந்து, இந்தியா கிரிக்கெட் அணியை உலகத் தரத்திற்கு உயர்த்திய கிரிக்கெட் வீரர். 1983ஆம் ஆண்டு இந்திய அணி, உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்த ஊக்கசக்தி கேப்டன். 'ஹரியாணா புயல்' என்ற பட்டம் ஆல்ரவுண்டரான கபிலின் புகழ்சொல்லும். இங்கிலாந்து அரசின் 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றவர்.

