
'கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்' அது என்ன? என்ற விடுகதைக்கு விடையாக அத்தி மரத்தைச் சொல்வார்கள். அத்திமரத்தின் பூ நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் காய்கள் மட்டுமே தெரியும். தமிழ் இலக்கியம் இத்தகைய மரங்களை, 'பூவாது காய்க்கும் மரம்' என்று குறிப்பிடுகிறது. அப்படிப் பூக்காமல் (நம் கண்ணுக்குத் தெரியாமல்) அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரங்கள் உள்ளன.
'பூவாது காய்க்கு மரமுள நன்றறிவார்
மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
விதையாமை நாறுவ வித்துள மேதைக்
குரையாமை செல்லு முணர்வு'
பூக்காமலே காய்க்கும் மரங்கள் உள்ளன. உழவர் விதைக்காமலே தானே முளைக்கும் விதைகளும் உள்ளன. அது போல் வயதில் இளையவராக இருந்தாலும், சிலர் அறிவில் மூத்தவராக இருப்பர் என்கிறது, இந்த 'சிறுபஞ்சமூலம்' பாடல்.
பூக்காமல் காய்க்கும் மரங்களை 'கோளி' என்றும் குறிப்பிடுகிறார்கள். எடுத்துக்காட்டு 'கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து' (மலைபடுகடாம்- - 268). அத்தி மரத்துக்கு 'அதவம்' என்ற பெயரும் உண்டு.

