PUBLISHED ON : மே 29, 2017

இனி தமிழகத்தில், பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், ரேங்கிங் சிஸ்டம் (தரவரிசைப் பட்டியல்) கிடையாது. கிரேட் முறைதான் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு சரியானதா? தாங்கள் விரும்புவது என்ன என்பது குறித்து, குன்றத்தூர், கோவூர், ஸ்ரீ கிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் விவாதிக்கிறார்கள்.
சௌபர்ணிகா: ரேங்கிங் சிஸ்டம்தான் சரி. கஷ்டப்பட்டு படித்து, முதல் மார்க் வாங்கறவங்க, ரேங்கில் தனிச்சு தெரிவாங்க. கஷ்டப்பட்டதுக்குப் பலன் கிடைச்ச மாதிரி இருக்கும். ஆனால் கிரேட் முறையில், யாரும் தனிச்சு தெரியமாட்டாங்க. இப்ப 'ஏ' கிரேடுலயே நூறு பேருக்கு மேல வருவாங்க.
மகா ஸ்ரீ: தனிச்சு தெரிஞ்சு என்னவாகப் போகுது? மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்காத முறை இது. 'ஏ' கிரேடு வரணும்னு படித்தால் போதும். இத்தனை மார்க் எடுத்து, முதல் மார்க் வாங்கணும்கிற தொல்லை இல்லை. அதோடு, பெற்றோருக்கும் பிரஷர் இருக்காது.
செல்ஜின்: ரேங்கிங் முறையில் முதல் மார்க், ரெண்டாவது மார்க் எடுக்கிறவங்களுக்கு, கல்லூரிகளில் தனி இடம் கிடைக்கும். முன்னுரிமை எல்லாம் உண்டு. ஆனால் கிரேடு சிஸ்டத்தில் அதெல்லாம் மிஸ்ஸாகும்.
ஸ்ரீராம்: ரேங்க் முறையில, முதல் ரெண்டு, மூணு பேருக்கு மட்டும் பேர், புகழ் எல்லாம் கிடைக்கும். அதேநேரம், கிரேடுல ஐஞ்சு இடம் வரை மதிப்பு கிடைக்கும். ஒவ்வொரு பிரிவுலயும் குறைஞ்சது பத்து பேராச்சும் இருப்பாங்க. பிரஷர் இதுல கிடையாது. ஒரு மார்க், ரெண்டு மார்க் விட்டவங்க எல்லாம் துவண்டு போகாமல் இருக்க கிரேடு முறைதான் நல்லது.
சௌமியா: ரெண்டுலையுமே பிரஷர் இருக்கும். என்ன முன்னாடி முதல் மார்க்குன்னு சொல்லிக்கொள்ள முடியும். இப்ப, 1180 மார்க் எடுத்தால் 'ஏ' கிரேடு. அதை எடுக்க, டியூஷன், விடாமல் படிக்கிறதுன்னு டென்ஷனாகத்தான் இருக்கும். இதுக்கு ரேங்க் சிஸ்டமாச்சும் முதல் மார்க் கிடைக்குமேன்னு உற்சாகத்தைக் கொடுக்கும். இதுல அதுவும் கிடையாது.
அன்புசெல்வி: பெல் அடிக்கிறதுக்கு முன்னாடி எவ்வளவு அவசர அவசரமா வர்றோமோ, அந்த பிரஷருக்கும்; ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது, பெல் அடிக்கக் காத்திருக்கோமே.. அந்த பிரஷருக்கும் வித்தியாசம் இருக்குல்ல? அது மாதிரித்தான் ரேங்க் சிஸ்டத்துக்கும், கிரேடு சிஸ்டத்துக்குமான பிரஷர் வித்தியாசம். உண்மையிலயே கிரேடு சிஸ்டத்துல பிரஷர் குறைவுதான்.
சௌபர்ணிகா: ரேங்கிங் சிஸ்டம் இருந்தால், தனிச்சு தெரிவோம்னு போட்டி ஆர்வத்துல நிறையபேர் நல்லா படிப்பாங்க.
லிங்கேசன்: தனிச்சு தெரிஞ்சு என்ன கிரீடமா சூட்டப்போறாங்க? மாணவர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் படிக்கணும். அது கிரேடுலதான் சாத்தியமாகும். இதிலும் மார்க்குகள் அடிப்படையிலதானே தரம் பிரிக்கப்படுது? இதுல என்ன குறை கண்டுபிடிச்சீங்க? 700 மார்க் எடுக்குறவங்களையோ, அதுக்குக் கீழே உள்ளவர்களையோ 'ஏ' கிரேடுன்னு சொல்லவில்லையே. 1185, 1180 மார்க் எடுக்கிறவங்களுக்கு, 'ஏ' கிரேடு கொடுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? ரெண்டு, மூணு மார்க் குறைஞ்சுட்டா... பின்னுக்குத் தள்ளிவிடணுமா என்ன? அவங்களையும் சேர்த்து கூட்டிக்கிட்டு போறதுதானே, நல்ல முறையாக இருக்கும்?
நாளைக்கு நாம காலேஜ் போறாம்னு வையுங்க. அங்கே என்ன கிரேடுன்னு கேட்க மாட்டாங்க. என்னப்பா மார்க்குன்னுதான் கேட்பாங்க. அதன் அடிப்படையிலதான் இடம் கிடைக்கும்.
சௌமியா: அப்புறம் எதுக்கு ரேங்கிங் சிஸ்டத்தை எடுத்தாங்களாம்?
லிங்கேசன்: மாணவர்களிடையே பாகுபாட்டை குறைக்கத்தான் இதைக் கொண்டு வந்திருக்காங்க. எல்லா மாணவர்களும் முதல் மார்க் எடுக்கணும்னு திட்டமிட்டுத்தான் படிப்பாங்க. மார்க் குறைஞ்சுடுச்சுன்னா... மனஅழுத்தம் அதிகமாகிடுது. நீங்க சொல்ற ரேங்கை வச்சு, உனக்கு முன்னாடி இத்தனை பேரு இருக்கானேன்னு கேட்பாங்க. இப்ப கிரேடு, பிரஷரை குறைக்குது. 'ஏ' கிரேடு எடுன்னு சொல்றதோட நிப்பாட்டிக்குவாங்க. இனி நம்மளை இவ்வளவு எடு, எடுன்னு பிடுங்கமாட்டாங்க. மார்க் எடுத்தவனுக்குக் கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைச்சே ஆகும். அதனால் நாம் இதனை வரவேற்பதே சரியானதாக இருக்கும்.
