
வெயிலுக்கு பாட்டி மரத்தடியில் உட்கார்ந்து இருந்தாள். மரத்தின் இழைகள் (1) கீழே உதிர்ந்து கிடந்தன. வயதானால் நாமும் ஒரு நாள் இப்படித்தான் உதிர்ந்து போவோம் என்று நினைத்தாள் பாட்டி. அவள் தளை (2) யில் இருந்த சருகை தன் கரங்களால் தட்டி விட்டாள். அந்த வழியாகச் சென்ற மோர்க்காரியை அளை (3) த்தாள். வெயிலுக்கு தாகமாக இருக்கிறது, கொஞ்சம் மோர் கொடு என்றாள்.
மோர் குடித்த பாட்டி ''எவ்ளோ காசு?'' என்றாள்.
''பத்து ரூபாய் '' என்றாள் அவள்.
''கொல்லை(4) காசை புடுங்குறியே?'' புலம்பிக்கொண்டே காசை நீட்டினாள் பாட்டி.
''நான் என்னம்மா செய்யுறது, விளை(5)வாசி ஏறிப்போச்சு... பாழ்(6) விலை அதிகம் என்றவள், உங்களை மாதிரி இருக்கிறவங்க காசு கொடுத்தாதான், என் வீட்டு உழை(7) கொதிக்கும்... ''என்றபடியே அவள் காசை வாங்கிக்கொண்டு எழுந்துசென்றாள்.
சிறிது நேரத்தில், அந்த வழியாக, முருகன் என்பவன் வந்தான். அவன் வேப்பம் தலை(8)களை உடைத்துக்கொண்டு போனான்.
''எதுக்கு முருகா அது?'' என்றாள் பாட்டி.
''வீட்டில் பொண்ணுக்கு, அம்மை போட்டிருக்கு! அதான்...'' என்றான் முருகன்.
''கொஞ்சம் நிறைய உடைச்சிட்டு போ. வாசப்படியில் கொஞ்சம் சொருகி வச்சிட்டு, படுக்கையிலும் கொஞ்சம் போடு. உடல் சூட்டை தணிக்கும்...'' என்றாள்.
வெயில் வெம்மை குறைய, பாட்டி எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள். வலி(9)யில் அவள் வளர்க்கும் பூனை எலி வலை(10)யருகே உட்கார்ந்து இருந்தது. இவளைப் பார்த்தும் அது அசையாமல் இருக்க,
'இன்னிக்கு பூனைக்கு நல்ல வேட்டைதான்...' என்று நினைத்தபடியே, தன் வீட்டை அடைந்தாள் பாட்டி.
கதை படிச்சீங்களா? என்னடா தப்பு தப்பா இருக்கே என்று நினைச்சீங்களா? எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இடங்களில் எந்த
ல, ள,ழ வரும் என்று யோசிச்சீங்களா? கீழே சரியாகக் கொடுத்திருக்கிறோம். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
1. 'இலை' வரவேண்டும். இ'ழை' என்பது நூல் இழையைக் குறிக்கும்.
2. 'தலை' என்பது சரி. தளை என்பது கட்டுவதை குறிக்கும். (உம்: தளைகளை உடை)
3. 'அழைத்தாள்' என்று வரவேண்டும். அளை என்பது தயிரைக் குறிக்கும்.
4. 'கொள்ளை' காசு என்பது சரியான வார்த்தை. கொல்லை என்பது வயலைக் குறிக்கும்.
5. 'விலைவாசி' சரி. விளை என்பது விளைச்சலைக் குறிக்கும்.
6. பால் சரி. பாழ் என்பது கெட்டுவிட்டதைக் குறிக்கும்.
7 . 'உலை' சரி (அடுப்பில் நீர் கொதித்தல்). உழை என்பது வேலை செய்வதைக் குறிக்கும்.
8. 'தழை' மரத்தின் இலைகள். தலை உடம்பின் உறுப்பு, சிரசு.
9. வழி, பாதையைக் குறிக்கும். வலி உடல் நோயைக் குறிக்கும்.
10. வளை சரி. பூனை பொந்து அருகே உட்கார்ந்திருந்தது. வலை என்பது மீன் பிடிக்கும் வலையைக் குறிக்கும்.