PUBLISHED ON : ஆக 22, 2016

கஸ்தூரிபாவின் ஆங்கிலம்: ஒரு முறை கஸ்தூரிபா காந்தி தமிழ்நாட்டில் இருக்கும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்திற்கு வந்தார். அங்கே, கைத்தறித் துணிகளுக்கு சாயம் போடும் வேலையை ஆசிரமத் தொண்டர்கள் செய்துகொண்டு இருந்தனர். ஒரு துணியை எடுத்துப் பார்த்த கஸ்தூரிபா, அருகில் இருந்த ராஜாஜியிடம் அந்தத் துணியைக் காட்டி, “திஸ் கலர் கோ? (This color go?)” என்று கேட்டார். அதாவது, “இந்தத் துணி சாயம் போகுமா?' என்பதைத்தான் தனக்குத் தெரிந்த கொச்சை ஆங்கிலத்தில் கேட்டார். அதைக் கேட்டு அங்கிருந்த சிலர் சிரித்தனர்.
ராஜாஜி சாதாரணமாக, “திஸ் கலர் நோ கோ” என்றார். மீண்டும் அங்கே சிரிப்பொலி.
கஸ்தூரிபா வெட்கத்துடன், “நான் பேசிய ஆங்கிலம் தவறோ?” என்று ராஜாஜியிடம் கேட்டார்.
அதற்கு ராஜாஜி, “இல்லை, நீங்கள் பேசியதுதான் எளிமையான ஆங்கிலம். அது குழந்தைகளுக்குக் கூடப் புரியும்” என்றார்.
அதைக் கேட்டு கஸ்தூரிபா மிகவும் மகிழ்ந்தார்.
சொந்த செலவில் சோபா செட்!: ஓமந்தூர் ராமசாமி சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தபோது தனது வரவேற்பு அறையில் பார்வையாளர்களுக்காக சோபா செட், மேஜை, நாற்காலி போன்றவற்றை ஸ்பென்சர் கம்பெனியில் இருந்து வாடகைக்கு எடுத்திருந்தார்
மாதம் ஒன்றுக்கு வாடகை 60 ரூபாய் என்ற வகையில் ஒவ்வொரு மாதமும் தன் சம்பளத் தொகையில் இருந்து கொடுத்தனுப்பினார். அது போலவே தனது காருக்கான பெட்ரோல் செலவு, ரிப்பேர் செலவு, டிரைவர் சம்பளம் ஆகியவற்றையும் தானே ஏற்றுக்கொண்டார்.
நேர்வழி: தமிழ்நாட்டுக்கு வந்த நேருஜி 1958-ல் ஊட்டி நகருக்கு வந்தார். 'லாலி இன்ஸ்டிடியூட்' என்ற இடத்தில் நேருஜிக்கு அன்று காலையில் வரவேற்பு அளித்தனர். சரியான நேரத்தில் ஒரு திறந்த காரில் நின்றபடி, வழக்கம் போல் சாலை ஓரம் நின்றிருந்த மக்களைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்துப் புன்முறுவல் பூத்தபடி நேரு வந்துகொண்டு இருந்தார்.
லாலி இன்ஸ்டிடியூட்டின் 'Out' என்று போட்டிருந்த வாசல், வரும் வழியில் முதலில் இருந்து! அதனால், முன்னால் வந்த பைலட் கார் அவ்வழியே நுழைந்தது. நேருஜி வந்த காரும் நுழையப்போன சமயம், “ஸ்டாப்” என்று மிகுந்த கோபத்துடன் குரல் கொடுத்தார் நேருஜி.
நின்ற காரில் இருந்து இறங்கி அருகில் இருந்த மாவட்ட போலீஸ் அதிகாரியைப் பார்த்து “எப்படி அவுட் கேட்டில் நுழையலாம்?” என்று கேட்டுவிட்டு, கோபமாக நடந்து அரை ஃபர்லாங் நீளச் சாலையைக் கடந்து வரவேற்பு விழா நடக்க இருந்த கட்டடத்துக்குச் சென்றார்.
- கார்த்திகேயன்
