PUBLISHED ON : ஜூலை 30, 2018

புரோக்கோலி (Broccoli)
தாவரவியல் பெயர்:'பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா' (Brassica oleracea italica)
தாவரவியல் குடும்பம்: 'பிரேசிகேசியே' (Brassicaceae)
'புரோக்கோலி' என்பது, உண்ணக்கூடிய மலர்க்கொத்துகளை உருவாக்கும் தாவரம். இத்தாலியைத் தாயகமாகக் கொண்டது. இது முட்டைக்கோசில் இருந்து உருவாக்கப்பட்டது. பழங்கால இத்தாலியைச் சேர்ந்த தோட்டக்கலை வல்லுநர் 'எட்ருஸ்கன்ஸ்' (Etruscans) என்பவர் இதை உருவாக்கினார். முட்டைக் கோசின் பூக்கும் பகுதியைக் குறிப்பிடும் இத்தாலியச் சொல்லான 'புரோக்கோலோ' (Broccolo) என்பதில் இருந்து இந்தப் பெயர் உருவாக்கப்பட்டது.
புரோக்கோலி, 13 முதல் 80 செ.மீ. வரை வளரும் பளபளப்பான தாவரம். ஆண்டுக்கு ஒருமுறை / இருமுறை பூத்துக் காய்க்கும். கிளைகள் இல்லாத ஆணி வேரும், மெழுகு போன்ற வழவழப்பான தண்டும் உடையது. கெட்டியான கரும்பச்சை நிறத்தில், எதிர் அடுக்கில் அமைந்த அகன்ற இலைகளைக் கொண்டது. பூக்கள் கூட்டல் குறி வடிவத்தில் இருக்கும். மே - ஆகஸ்ட் மாதத்தில் பூக்கும்.
மெல்லிய நீளமான கனிகளில் 20 முதல் 60 விதைகள் வரை இருக்கும். பூவின் மேற்பகுதி, பச்சை நிறத்தில் அடர்த்தியாக தடித்த தண்டில் இருந்து வளரும் சிறிய மரம் போன்ற தோற்றத்தில் இருக்கும். சீராக கிளை பரப்பிய குருத்துகளுடன், பெருந்திரளான இலைகளால் சூழப்பட்டிருக்கும்.
புரோக்கோலியை பச்சையாகவும், சமைத்தும் உண்ணலாம். பத்து நிமிடங்களுக்கு மேல் வேகவைத்தால் இதில் உள்ள சத்துகள் மூலமாகக் கிடைக்கும் நன்மைகள் குறைந்துவிடும்.
வட அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் முதன்மையாகவும், அடுத்தபடியாக சீனா, இந்தியாவில் அதிக அளவிலும் விளைவிக்கப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக, உலகின் மிகப் பிரபலமான, சத்துமிக்க காய்கறிகளில் ஒன்றாக புரோக்கோலி உள்ளது. இதில் வைட்டமின்கள் சி, கே, ஏ, டி, பி2, நார்ச்சத்துகள், டையின்டோலில்மீதேன் (Diindolylmethane), செலினியம் (Selenium) போன்ற புற்றுநோய்க்கு எதிரான ஆற்றல்மிக்க பல்வேறு ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.
- அ.லோகமாதேவி
