PUBLISHED ON : டிச 17, 2018

'குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கவேண்டும் என்பதைவிட, தரமான கல்வி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்வதுதான் முக்கியம்” என்கிறார் நிக்கிதா பிம்பிள். 26 வயது நிரம்பிய நிக்கிதா, இந்தியாவின் இளம் 'கிரீன் டீச்சர்' என்ற விருதைப் பெற்றுள்ளார். இவருடைய பள்ளிக்கூடத்தில் இருக்கும் பாடத்திட்டம்தான் இந்த விருதுக்கு முக்கிய காரணம்.
மும்பையிலுள்ள கோரேகான் நகரில், 'ரிஷி வால்மிகி ஈகோ ஸ்கூல்' என்ற பள்ளிக்கூடத்தை உருவாக்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இந்தப் பள்ளியின் நோக்கம்.
பல மாணவர்களுக்கு இப்பள்ளி கனவு உலகம். செயல்வழிக் கல்வி என்பதால், மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள். பாடங்களைக் கதை வடிவில் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது.
மாற்றத்திற்கான கல்வியில் நிக்கிதா பலருக்கும் முன்மாதிரி. பல பள்ளிக்கூடங்களில் இருக்கும் நெருக்கடிகள் இங்கே கிடையாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், ஏதாவது ஓர் ஊரில் உள்ள பறவைகள், விலங்குகளைப் பார்க்க மாணவர்களை அழைத்துக்கொண்டு போகிறார். பள்ளியில் இயங்கிவரும் சுற்றுச்சூழல் கிளப் மூலம் ஏதாவது புதிய நிகழ்ச்சிகள், செயல்கள் நடைபெறும்.
பாடத்தைத் தாண்டி வெளி உலகத்தைக் காட்ட விரும்பும் நிக்கிதா, இயற்கையை நேசிப்பவர். தன்னைப் போலவே மற்றவர்களுக்கும், குறிப்பாக வசதி இல்லாத குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கும், புதிய உலகத்தை அறிமுகம் செய்து வருகிறார்.
வனவிலங்குகளுக்கான பாடத்திட்டத்தை முதன்முறையாக உருவாக்கியுள்ளார். இதுதான் இந்தப் பள்ளியின் சிறப்பம்சம். “மாணவர்களுக்கு இந்தக் கல்வி முறை மிகவும் உதவுகிறது. மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல், விலங்குகள், பறவைகளை நேரில் காட்டுவதன் மூலம் மற்ற உயிரினங்களோடு ஒருங்கிணைந்து வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள முடியும். கல்வியையும், இயற்கையையும் நேசிக்கும் மாணவர் படையை உருவாக்குவதே என் குறிக்கோள்” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் நிக்கிதா.
