தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/"இன்னிக்கு என்ன பார்க்கலாம்?”

"இன்னிக்கு என்ன பார்க்கலாம்?”

"இன்னிக்கு என்ன பார்க்கலாம்?”


PUBLISHED ON : டிச 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீங்கள் பறவைப் ப்ரியரா? கேரள 'தட்டக்காடு பறவைகள் சரணாலயம்' செல்பவரா? அப்படியென்றால், உங்களுக்கு கிரிஷைத் தெரியாமல் இருக்க முடியாது.

வானில் பறப்பது என்ன பறவை? எந்த மரத்தில் என்ன பறவை தங்கும்? எந்தப் பறவையோடு வலசைப் பறவைகள் உணவு தேட அலையும்? ஆந்தைகள் ஒலியை வைத்து, காட்டில் திசையைக் கண்டுபிடிப்பது எப்படி? எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருப்பவர் பறவை ஆர்வலர் கிரிஷ். தட்டக்காட்டில் இவருடைய 'ஜங்கிள் பேர்டு' என்ற 'ஹோம் ஸ்டே' மிகவும் பிரபலம். அவரிடம் பேசினோம்:

இந்தத் துறைக்கு எப்படி வந்தீங்க?

“ஒருமுறை வெளிநாட்டுக்காரர் ஒருவர் இங்கு பறவைகளைப் பார்க்க வந்தார். அவரோட, காட்டுக்கு வழிகாட்டப் போனேன். ஒவ்வொரு பறவையைப் பார்க்கும்போது, அவர் காட்டிய உற்சாகம் என்னிடமும் ஒட்டிக்கொண்டது. வீட்டுக்குத் திரும்பும்போது, எனக்குக் காசு கொடுத்தார். என்னால் நல்ல வழிகாட்டியாக வரமுடியும் என்று நம்பிக்கை அளித்தார். அவர் போட்ட விதைதான் இது.”

பறவைகளை எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?

“ஜீரோ அறிவோட தொடங்கின என் வாழ்க்கை, படிப்படியாக உயர ஆரம்பித்தது. காட்டில் நிறைய சுத்தியிருக்கேன். பலரிடம் பேசி, புதிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அனுபவம்தான் இந்தத் துறைக்கு ரொம்ப முக்கியம். என்னை நம்பி பலரும் காட்டுக்கு பறவைகளைப் பார்க்க வருகிறார்கள். ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதைப் பற்றி எல்லாம் ஒரே இரவில் தெரிந்துகொள்ள முடியாது. பல ஆண்டுகளாகக் காட்டிற்குச் சென்று தெரிந்து கொண்டேன். இயற்கையில் எதுவுமே முழுமை கிடையாது. தினமும் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் கிடைக்கும்.”

உங்கள் குடும்பம் ஒத்துழைக்கிறதா?

“என் வளர்ச்சி குடும்பத்தாரின் அரவணைப்பில் கிடைத்தது. என்னோட ஆர்வத்தைப் பார்த்த அம்மாவுக்கும் இந்தத் துறையில் ஆர்வம் வந்தது. என்னைவிட தட்டக்காட்டில் அம்மாதான் பிரபலம். பறவையோட ஒலியை வைத்து என்ன பறவைன்னு சொல்லி, பறவை இருக்கும் இடத்துக்கே அழைத்துப் போய்விடுவார் அம்மா.”

எவ்வளவு நேரம் பறவைகளைப் பார்ப்பீங்க?

“காலையில் 11 மணி வரைக்கும் காட்டுக்குள் இருப்பேன். மாலை நேரத்துல, இரவுப் பறவைகளைப் பார்க்க விருந்தாளிகளுடன் போவேன். இவ்வளவு அலைச்சல் தேவையான்னு பல பேர் நினைக்கலாம். காட்டில் பறவைகளைப் பார்ப்பது, அதுவும் என்னை நம்பி வந்திருக்கும் விருந்தாளிகளுடன் செல்வது உற்சாகம்தான்; சோர்வே வராது. செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரைக்கும் விருந்தாளிகளின் வரவால் வீடே கலகலப்பாக இருக்கும். “கிரிஷ் இன்னிக்கு என்ன பார்க்கப் போலாம்” என்ற கேள்விதான் என்னோட எனர்ஜி டானிக்.”

உங்களை மாதிரி பறவை வழிகாட்டியாக மாறலாமா?

“தாராளமாக. அதுக்கு நிறைய பொறுமை வேண்டும். காட்டுக்குள் போனதும் பறவைகள் நம்மைத் தேடி வராது. நிறைய அலையணும்; சலிக்காமல் பறவைகளைத் தேடும் திறனை வளர்த்துக்கணும். அவற்றின் வாழ்விடத்தைப் பாதிக்காமல் விருந்தாளிகளுக்குப் பறவைகளைக் காண்பிக்கணும். புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே நோக்கமாக வைத்துக்கொள்ளக் கூடாது. பறவைகள் வாழுமிடத்துக்கே போய்ப் பார்ப்பதுதான் சரி. உங்கள் இடத்தில், பறவைகளை வளர்த்து, விருந்தாளிகளுக்குக் காண்பிப்பது, இயற்கைக்கு நாம் செய்யும் துரோகம்.”

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us