PUBLISHED ON : டிச 17, 2018

உலகப் பொதுமறை என போற்றப்படும் திருக்குறளில் உங்களுக்குப் பிடித்தது எது? ஏன்? எனக் கேட்டிருந்தோம். மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துகள். காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கத்தில் உள்ள, சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம். இனி அவர்களின் கருத்து:
எஸ்.ஸ்ரீவர்ஷா: (11ஆம் வகுப்பு)
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். (93)
இக்குறள் எனக்கு ஓர் அனுபவத்தைத் தந்தது. ஒரு போட்டியில் நான் தோற்றுப் போனபோது, கடிந்துகொள்ளாமல் முகமலர்ச்சியுடன், அடுத்த முறை வெல்வாய் என்று எல்லோரும் கூறினார்கள். அதுவே, அடுத்த முறை வெல்ல வைத்தது. அதனால் இக்குறள் பிடிக்கும்.
வே.கவிதா: (12ஆம் வகுப்பு)
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. (667)
உருவத்தை வைத்து கேலி, கிண்டல் செய்வது மாணவர்களிடையே இருக்கும் பழக்கம். உருவத்தைவிட அவர்களின் திறமையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தும் இக்குறள் எனக்குப் பிடித்தது.
லோ. ஜெயனி: (11ஆம் வகுப்பு)
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. (129)
யாருடனாவது சண்டைபோடும்போது கடுமையாகத் திட்டிவிடுவார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகள் நம்மை காயப்படுத்தி இருக்கும் என்பது அவர்களுக்கும் தெரியாது. வாழ்வில் இன்சொற்களையே பேச வேண்டும் என வலியுறுத்துவதால் இக்குறள் பிடிக்கும்.
ச. தேவதர்ஷினி (11ஆம் வகுப்பு)
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். (77)
அடுத்தவரிடம் அன்பு காட்டவேண்டும். சண்டையிட்டுக்கொண்டு எவரையும் காயப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் நம் மனசாட்சி நம்மை உறுத்தும் எனக் கூறும் இக்குறள் ரொம்பப் பிடிக்கும்.
தி.ரஞ்சனி: (11ஆம் வகுப்பு)
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின். (537)
பேரிடர் காலங்களில் விவசாயிகள், மீனவர்கள், ஏழை உழைப்பாளிகள் துன்பப்படும்போது உதவிக்கரம் நீட்டுகிறோமே, இதைத்தான் வள்ளுவரும், ஒருவர் செய்த நற்காரியத்தை மறக்காமல், அவரின் தேவைக்கு உதவ வேண்டுமென்கிறார். அதனால் இது எனக்குப் பிடித்த குறள்.
மு.அப்துல்ரஹ்மான்: (10ஆம் வகுப்பு)
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. (212)
எப்போதுமே என் வீட்டினர், அடுத்தவங்களுக்கு முடிந்தவரை உதவுன்னு சொல்லுவாங்க. வள்ளுவர் இதை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லி இருக்கிறார் என்பதால் இக்குறள் பிடிக்கும்.
அ. சுஹைல் ஹபீப்: (11ஆம் வகுப்பு)
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (34)
இன்று, மனத்திற்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாகப் பேசுபவர்களே அதிகம். அப்படி இல்லாமல் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சொல்லும் இக்குறள் பிடிக்கும்.
கு. அரவிந்த் பிரசாத்: (11ஆம் வகுப்பு)
இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (650)
நாங்க ஒரு கிரிக்கெட் போட்டிக்குப் போயிருந்தோம். எதிரணி பலம் வாய்ந்தது. ஆனாலும், நாங்கள் தான் போட்டியில் வென்றோம். எப்படின்னா... இந்தக் குறள் படி, எங்களுக்குத் தெரிந்த வித்தைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். வெற்றி நிச்சயம்னு களம் இறங்கி, கோப்பையை அடிச்சுட்டு வந்துட்டோம்.
