தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கதைகளில் கவிதை நயத்தை புகுத்தியவர்

கதைகளில் கவிதை நயத்தை புகுத்தியவர்

கதைகளில் கவிதை நயத்தை புகுத்தியவர்


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முட்டி முட்டிப் பால்குடிக்கின்றன

நீளக்குழல் விளக்கில்

விட்டில் பூச்சிகள்'

விட்டில் பூச்சிகள் மின்சார விளக்கைச் சுற்றிச்சுற்றி வருவதை நகரத்து மக்கள் அனைவருமே பார்த்திருப்பர். ஆனால், இப்படி ஓர் அழகான கவிதை எழுத ஒருவரால் மட்டுமே முடிந்தது. அவர்தான் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரும் உண்டு.

பள்ளிக் கல்விவரையே பயின்றவரான அவர், தஞ்சை 'பழமனார்நேரி' என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். உழுனித் (Tractor- - டிராக்டர்) தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றியவர்.

ஆரம்பத்தில் கவிதைகள்தான் எழுதினார் பாலகுமாரன். இவரின் தொடக்கக்காலக் கவிதைகள் 'கணையாழி' இதழில் வெளிவந்தன. கணையாழி நடத்திய கவிதைக் கூட்டங்களில் பாலகுமாரன் தொடர்ந்து பங்கேற்றார். வாசகர்களிடம் அவரின் கவிதைகள் பெரும்பாராட்டைப் பெற்றன.

தாம் நினைத்தவற்றைக் கூறுவதற்கு உகந்த வடிவம் கவிதையல்ல என்று தொடக்கத்திலேயே உணர்ந்ததார் பாலகுமாரன். சிறுகதைகளை எழுதத் தொடங்கினார்.

பாலகுமாரனின் கதைமொழி எல்லோருக்கும் பிடித்துப் போயிற்று. நடைமுறை வாழ்க்கையை வெளிப்படையாகவும் நுட்பமாகவும் இலக்கியத்தரம் குறையாமலும் எழுதினார்.

அவருடைய சிறுகதைகளில் ஒன்றான 'மௌனமே காதலாக…' இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. 'சின்னச்சின்ன வட்டங்கள், ஏதோ ஒரு நதியில், மௌனமே காதலாக… 'ஆகிய மூன்று தொகுதிகளும் அவருக்கு முத்தாய்ப்பாய் அமைந்தன. தமிழ்ப் பத்திரிகையுலகில் பாலகுமாரனின் கதைகள் தவிர்க்க முடியாதவை ஆகின. பாலகுமாரன் தாம் பார்த்துக் கொண்டிருந்த பணியைக் கைவிட்டு, முழுநேர எழுத்தாளரானார்.

'மெர்க்குரிப் பூக்கள்' 'இரும்புக் குதிரைகள்', 'கரையோர முதலைகள்', 'பச்சைவயல் மனது', 'தாயுமானவன்' ஆகிய நெடுங்கதைகள் அன்றைய இளைய தமிழகத்தால் விரும்பிப் படிக்கப்பட்டன.

தமிழின் முதல்நிலை எழுத்தாளர்களில் ஒருவராக பாலகுமாரன் புகழ்பெற்றார். ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றிக் களஆய்வு செய்து, அதைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து பின்னர் கதை எழுதுவதில் பாலகுமாரன் வல்லவர்.

திரைத்துறையில் நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். சில படங்களை இயக்கவும் செய்தார். பிறகு பாலகுமாரனின் நாட்டம் ஆன்மிகம், வரலாறு ஆகியவற்றின்பால் திரும்பியது. 'உடையார்' என்னும் தலைப்பில் சோழப்பெருங்கதையை எழுதினார். இருநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதுமளவுக்கு ஆற்றல் பெற்றிருந்தார். அவரிடமிருந்த படைப்பாற்றல் கடைசிவரை வற்றவே இல்லை. அவரின் மீது அன்பு கொண்டவர்கள், அவரை 'எழுத்துச் சித்தர்' என்றே அழைத்தனர்.

பாலகுமாரன்

பிறப்பு: 1946, ஜூலை 5

மறைவு: 2018 மே 15.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us