PUBLISHED ON : மே 21, 2018

ஒரு பாட்டிலில் பேக்கிங் சோடாவைப் போடுங்க, மேலே வினிகரைக் கொஞ்சம் விடுங்க. பாட்டிலை மூடி போட்டு மூடுங்க. என்ன நடக்கும்? பேக்கிங் சோடா, வினிகரோடு வினைபுரியும்போது, அழுத்தம் தாங்காம, பாட்டில் மூடி மேலே பறக்கும். இதுல என்ன இருக்கு? ஒரு மூடி பறந்தா ஆச்சரிமில்லை, 1000 முடிகள் பறந்தா? ஏதோ மேஜிக் ஷோவைப் பார்க்கிற ஆச்சரியம் ஏற்படும்.
அறிவியலைச் சுவாரசியமாக, நேரடியாகச் சொல்லித் தரும், 'பிக்--பாங்' என்ற மிகப்பெரும் நிகழ்ச்சியை நடத்துகிறார் லெட்ஸ் மேக் இஞ்சினியரிங் சிம்பிள் (Lets make engineering simple) யூடியூப் சேனலை நடத்தும் பிரேமானந்த் சேதுராஜன். இந்தியாவின் மாபெரும் அறிவியல் செயல்விளக்க முகாம் வரும் 26ஆம் தேதி சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதுபற்றி அவரிடம் கேட்டோம்:
“ஏற்கெனவே 'பிக்-பாங்' ஷோவை, கோவை, மதுரையில் முடிச்சுட்டோம். நாங்க ஆசைப்பட்ட மாதிரியே பலவிதமான மாணவர்கள் வந்தாங்க. அரசுப் பள்ளி மாணவன் தொடங்கி சி.பி.எஸ்.இ. வரைக்கும் எல்லோருமே ஒரே தளத்துல வந்து அறிவியல் விழாவுல கலந்துக்கிட்டாங்க. அடுத்து சென்னை, சேலம், திருச்சி பாக்கி இருக்கு.
அறிவியல்னு சொன்னாலே நிறைய பேருக்கு பிடிக்கறது இல்ல; ஒரு பயம். ஏன்னா, நாம அறிவியலை அந்த மாதிரி வகுப்பறையிலே நடத்தி முடிச்சுடறோம்.
ஆர்வமே இல்லாத, ஏற்படாத விஷயத்தை எப்படி சிறுவர்கள்கிட்ட கொண்டு போக முடியும்னு யோசிச்சேன். மேஜிக் ஷோ பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா, நிச்சயம் ஏதாச்சும் செய்ய நினைப்போம் இல்லையா? அதுதான் தேவை. அறிவியல் பரிசோதனைகள் மூலம், மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்ட முடியும்னு தோணுச்சு. இதன் மூலமாக, அவங்களோட படைப்பாற்றல் வளரும்னு நம்பறேன்.
இதையே கொஞ்சம் பெரிசா செய்யலாம்னு முடிவுபண்ணினோம். மக்களோட வரவேற்பு கிடைக்குமா என்று தயக்கம் இருந்தது. இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு எப்பவுமே நல்ல மவுசு உண்டு.
அதேமாதிரி அறிவியலுக்கும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க. ஆனா அவங்களுக்கான நிகழ்ச்சிகள்தான் எதுவுமே இல்ல. ஐரோப்பாவுல இசை, நடனம் மாதிரியே அறிவியலும் பெரிய அளவுல நிகழ்ச்சியா செய்வாங்க. அங்க இருக்கிற மாணவர்களுக்கு அதுதான் பெரிய ஊக்கம். அறிவியலை ஆராய்ச்சிக் கூடத்துல நடத்துணும்னு விதி இல்ல.
நம்ம சமூகம், அறிவியல் அறிவுசார்ந்த சமூகமா வளரணும்னா, இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் உதவும்னு தோணிச்சு. கோவை, மதுரை எங்களுக்கு பெரிய எனர்ஜியையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கு. இப்போ நாங்க சென்னையில நடத்தப்போறோம்.
சென்னையில இருக்கிற ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில மே மாதம் 26ஆம் தேதி நடக்கப்போகுது. இதற்கான அனுமதிக் கட்டணம் 199 ரூபாய். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும். வீட்டிலேயே அறிவியல் பரிசோதனை செய்ய ஒரு 'கிட்' கொடுக்கறோம்.
அறிவியல் மேல ஆர்வத்தை ஏற்படுத்தினா, அவங்க தொடர்ந்து புதிய விஷயங்களைச் செய்ய ஆர்வமா இருப்பாங்க. நாளைக்கு அவங்களே இந்தியாவின் பெரிய விஞ்ஞானியாகவும் வரலாம். அதற்கான விதைதான் இந்த நிகழ்ச்சி” என நம்பிக்கையோடு முடித்தார்.
இணையதளத்தில் பதிவுசெய்ய: www.lmes.in
முன்பதிவு செய்ய:எல்.எம்.ஈ.எஸ். அகாதெமி
டிக்கெட் விலை:ரூ.199
வயது: 8-17
தொடர்பு எண்: 98842 22601
