PUBLISHED ON : மே 21, 2018
92 வயதில் மஹாதிர் முஹம்மத், மீண்டும் பிரதமராகி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்திருக்கும் நாடு, மலேசியா. நமக்கும் மலேசியாவுக்கும் பல ஆண்டுகளாக வர்த்தகத் தொடர்பு உண்டு. அந்த நாட்டில் பேசப்படும் மொழி, பாஷா மலாய்.
சென்னையில் மலாய் மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறதா எனத் தேடினோம். சென்னை அரும்பாக்கத்திலுள்ள பிரைட் டிரெய்னிங் சென்டர் மலாய் சொல்லித் தருகிறது. அதன் தலைவர் முனைவர் இஷ்ரத் நஸ் அராவைச் (Dr. Ishrath Naz Ara) சந்தித்தோம்.
மலாய் மொழியை நீங்க ஏன் கத்துக்கிட்டீங்க?
மொழிகள் மேலே எனக்குச் சின்ன வயசிலிருந்தே ஆர்வம். நிறைய மொழிகள் கத்துக்க ஆரம்பிச்சேன். சென்னையில மலாய் மொழி கத்துக்கொடுக்க யாருமே இல்லங்கிறதை நான் எனக்காகத் தேடும்போது உணர்ந்தேன். என் நண்பர் 25 ஆண்டுகளா மலேசியாவுல இருந்தார். அவர்கிட்ட இருந்து நான் மலாய் கத்துக்கிட்டேன். மற்ற மொழிகளைவிட மலாய் மொழியை எளிதாகக் கத்துக்க முடிஞ்சது. அப்பறம், தைரியமா, மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்க ஆரம்பிச்சேன்.
எளிதா, ஆச்சரியமா இருக்கே?
கண்டிப்பா. இதை ரொம்பச் சுலபமா கத்துக்க முடியும். நீங்க எல்லா விஷயங்களையும் விரைவா புரிஞ்சுக்கறவர்னா, குறைந்தபட்சம் மூணு மாசத்துல மலாய் கத்துக்க முடியும். கொஞ்சம் கூடுதலா நேரம் எடுத்துத்தான் தெரிஞ்சுக்கறவர்னா, ஆறு மாசத்துல கத்துக்கலாம்.
எதுக்காக மலாய் கத்துக்கறாங்க?
மலாய் கத்துக்க வர்றவங்களில் பல பேர் சொந்த வணிகம் செய்றவங்க. மலேசியாவுக்கு வேலைக்குப் போகணும்னு நினைக்கறவங்களும் வருவாங்க. குறிப்பா, நர்ஸிங் வேலைக்குப் போறவங்க. அவங்களுக்கு மலாய் கண்டிப்பா தெரிஞ்சு இருக்கணும். அவங்களுக்கு மருத்துவச் சொற்களும் தெரியணும். அதையும் நாங்க கத்துக் கொடுக்கிறோம். மருத்துவர்கள் அங்க போகணும்னா, மலாய் மொழியில உறுப்புகளுக்கு என்ன பெயர், மருந்துகளுக்கு என்ன பெயர்னு சில அடிப்படைகளைச் சொல்லிக் கொடுப்போம்.
அடிப்படைகள் தெரிஞ்சா போதுமா?
மலேசிய மக்கள் ரொம்ப அன்பானவங்க. அவங்க நாட்டுல போய் அவங்க மொழியை நீங்க பேச முயற்சி பண்ணும்போது, உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டா, அவங்களே உதவி செய்வாங்க.
மலாய் மொழியைப் பேசவும், எழுதவும் சொல்லிக் கொடுப்பீங்களா?
மலாயைப் பேசக் கத்துக்கிட்டு, அதைத் தொடர்ந்து பயன்படுத்தினா எப்போதும் நினைவில் இருக்கும். ஆனா, எழுதத் தெரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். எழுதிஎழுதிப் பழகினா, எப்போதும் மலாய் மறக்காது. நாங்க எழுதவும் கத்துக் கொடுக்கிறோம்.
பிரெஞ்சு மொழியில உச்சரிப்பு வேறு; எழுத்து வேறு; மலாய் எப்படி?
மலாய் கத்துக்கறது ரொம்ப சுலபம்னு சொன்னேன். ஏன்னா, தமிழ், இந்திச் சொற்கள் நிறைய புழக்கத்துல இருக்கு. நமக்கு நல்லா அறிமுகமான பல சொற்கள் அதுல இருக்கு. எழுத்து, உச்சரிப்பு இரண்டும் ஒண்ணுதான். அதனால நீங்க எழுத்தைக் கூட்டினாலே மலாய் மொழியில வாசிக்க ஆரம்பிச்சுடுவீங்க.
தொடர்புக்கு :முனைவர் இஷ்ரத் நஸ் அரா
எண். 5, கல்கி நகர், அரும்பாக்கம்,
சென்னை - 600 106
அலைபேசி: 98410-40855
www.brighttrainingcentre.com
