தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பகிர்தலே படிப்பு!

பகிர்தலே படிப்பு!

பகிர்தலே படிப்பு!


PUBLISHED ON : மே 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“ஓவியாவுக்கு வேதியியல் புரியலையாம். நீ கொஞ்சம் உதவி செய்ய முடியுமா பாரேன்.” என்று உமா மிஸ் என்னிடம் தெரிவித்திருந்தார். ஓவியாவிடம் போய் பேசினேன். அவளுக்கு என்ன புரியவில்லை என்று கேட்டபோது, வரிசையாக பல விஷயங்களைச் சொன்னாள்.

குறிப்பாக, சோதனைகளுக்குப் பின்னே இருக்கும் உண்மைகள் புரியவில்லை. வேதியியலே சோதனை மூலம் புரிந்துகொள்ளும் ஒரு சப்ஜெக்ட். உடனே, வீட்டுக்கு வந்து ஓவியா கேட்ட சோதனைகளைப் பற்றி விரிவாகப் படித்தேன். அதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டேன். என்னென்ன கேள்விகள் எல்லாம் ஓவியா கேட்கக்கூடும் என்று மனத்தில் ஓட்டிப் பார்த்தேன்.

அதற்குப் பதில் சொல்வதற்கு தோதாக பல விஷயங்களை இணையத்தில் போய் படித்தேன். அதையும் குறித்துக்கொண்டேன். எல்லாவற்றையும் ஒரு துண்டுச் சீட்டில் எழுதியும் வைத்துக்கொண்டேன்.

பள்ளி வரும்போதே, மீண்டும் அந்தத் துண்டுச் சீட்டைப் பார்த்து, ஞாபகப்படுத்திக் கொண்டேன். தெளிவாக, சுருக்கமாக புரிகிறார் போல் சொல்லவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

பள்ளிக்கு வந்து ஓவியாவிடம் போய் பேசத் தொடங்கினேன். அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் என்னிடம் பதில் இருப்பது போல் தோன்றியது. ஒவ்வொன்றாக எடுத்து வைத்தபோது எனக்கே நானே பேசிக் கொள்வது போன்று தோன்றியது. நான் பேசும் வேதியியல் விஷயங்கள் எனக்கே இன்னும் துலக்கமாகத் தெரிந்தன.

ஒரே உற்சாகமாக இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில், ஓவியா முகத்தில் மலர்ச்சி தெரிந்தபோது எனக்குக் குதூகலம் உண்டாயிற்று. புரியவைத்துவிட்டேன் என்ற நிம்மதி.

“இதுக்குப் பேருதான் பீர் டீச்சிங் (Peer Teaching). அதாவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்துக்கொள்வது…” என்று உமா மிஸ் ஆரம்பித்தார்.

“நான் என் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கேனே மிஸ்.”

“கரெக்ட். நம்ம ஊர்ல இந்தப் பழக்கம் முன்னாடியே உண்டு. ஆனால், மேலை நாடுகள்ல இந்த முறைக்கு புதுக் கவனமும் கூடுதல் முக்கியத்துவமும் கிடைச்சிருக்கு. எல்லா மாணவர்களுக்கும் ஆசிரியரே சொல்லிக் கொடுக்க முடியாது. அவங்களோடு கத்துக்கற வேகம் வேறுபடும். இதைச் சமாளிக்க, பீர் டீச்சிங் முறையை இப்போ பயன்படுத்திக்கிட்டு வராங்க.” என்ற மிஸ், மேலும் பல விவரங்களைச் சொல்லத் தொடங்கினார்.

ஆறு முதல் எட்டு மாணவர்கள் வரை குழுகுழுவாகப் பிரித்து, அவர்களுக்குள் ஒருவரை டியூட்டர் மாதிரி, லீடர் மாதிரி நடந்துகொள்ள பயிற்சி கொடுக்கிறார்கள். அந்த மாணவனோ, மாணவியோ, அந்த சப்ஜெக்ட்டை குழுவில் உள்ள மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.

சொல்லிக் கொடுத்தல் என்பது இங்கே முற்றிலும் வேறு விதமாக அமையும். ஆசிரியர், மாணவர் போன்ற உறவு அல்ல இது. சகஜமாகப் பழகும் இரு மாணவர்களுக்கு இடையேயான பகிர்தல். எனக்குத் தெரிந்ததை, புரிந்ததை, நான் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். நீ உனக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொடு.

ஆமாம். ஒவ்வொரு மாணவரும் இதில் ஆசிரியர்.

“இதில் சப்ஜெக்ட் சம்பந்தமா எல்லாமே எனக்குத் தெரிஞ்சிருக்காதே மிஸ்…”

“உண்மைதான். ஆனால், ஓவியாவுக்குச் சொல்லிக் கொடுக்கறதுக்காக நீ கூடுதலா படிச்சியா, இல்லையா?”

“படிச்சேன்.”

“அதுதான் லாஜிக். நீ மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, கூடுதலா படிப்பே. தெரிஞ்சுப்பே. ஞாபகம் வெச்சுப்பே. என்னவெல்லாம் கேள்விகள் வரலாம்னு யோசிப்பே. நீ படிச்சதை, நீயே ரிவைஸ் செஞ்சுப்பே. மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கறதோட பலன், உனக்கே வந்து சேரும். மேலும், உன்னோட துணிச்சல் அதிகரிக்கும். மற்றவர்களை விட நல்லா படிக்கணும்னு முனைப்பு அதிகமாகும். தெரியலன்னா, அதைப் போய் ஆசிரியர்கள்கிட்ட கேட்டுக்கிட்டு தெளிவுபெறக்கூடிய உத்வேகம் அதிகமாகும். கரெக்ட்டா?”

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், பலன் எனக்குத்தான் என்பது புரிந்தது. பல விஷயங்களை சிரத்தையோடு தெரிந்துகொண்டது, ஞாபகம் வந்தது. பல சொற்களுக்கு அகராதியைப் பயன்படுத்தி அர்த்தமெல்லாம் தெரிந்துகொண்டேன்.

“நம்ம ஊர்ல குரூப் ஸ்டடி என்று ஒன்று சொல்வாங்க. அது பீர் லேர்னிங். குழுவா சேர்ந்து படிக்கறது. இது பீர் டீச்சிங். இன்னும் கூடுதல் பொறுப்பு உள்ள விஷயம்.”

“ஓ!”

“வழக்கம்போல இதையும் வெளிநாட்டு பள்ளிகள்ல மட்டும்தான் பார்க்க முடியுமானு கேக்கலியா?”

நான் கொஞ்சம் வெட்கப்பட்டேன். நம்ம நாட்டில் இதுபோன்ற புதுமைகள் இல்லையா என்ற கேள்வியை நான் வழக்கமாகக் கேட்பேன்.

“நீங்களே பதில்

சொல்லிடுங்க மிஸ்.”

“இருக்கு. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுக்காவில் இருக்கும் கடாசிகொப்பா அரசு பள்ளியில் இந்த முறையை அமல்படுத்தியிருக்காங்க. சிக்ஷானா பெளன்டேஷன் என்ற அமைப்பு ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆசிரியராக இருந்து வகுப்புகளை நடத்த முடியும்னு சோதனை செஞ்சுபார்த்து வெற்றியடைஞ்சு இருக்கு. பல பத்திரிகைகள்ல இந்தச் செய்தி வந்திருக்கு…”

“எப்படி இதை செஞ்சு இருக்காங்க மிஸ்?”

“மதிய சாப்பாட்டுக்குப் பின்னாடி, ஆறு பேர் கொண்ட குழுக்கள் உட்கார்ந்துகொள்ளும். 45 நிமிடங்கள் தான். ஒரு மாணவனே மற்றவர்களுக்கு அன்று நடத்திய பாடத்தில் உள்ள சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். இந்த மாணவருக்கு ஆசிரியர்கள் கூடுதல் பயிற்சி கொடுத்து இருக்காங்க. மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போகும்போது, அன்றைக்கு நடந்த பாடத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் போவாங்க. கேக்கவே நல்லா இருக்கு இல்லே.”

உமா மிஸ் முகத்தில் பொலிந்த மகிழ்ச்சி எனக்கும் தொற்றிக்கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us