PUBLISHED ON : அக் 28, 2019
தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர், வெள்ளக்கால் ப. சுப்பிரமணியர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கம்பராமாயணம், நன்னூல், இலக்கணக் கொத்து என இலக்கிய, இலக்கணங்களில் தேர்ந்த அறிவு பெற்றவர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். அக்காலத்தில் மேற்படிப்பு அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது. இதனால் தமிழகத்தில் நிறைய பேர் உயர் கல்விக்குச் செல்லாமல் பாதியிலேயே நிற்கும் நிலை இருந்தது. இதைப் போக்க எண்ணிய சுப்பிரமணியர், பல பாட நூல்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
லிட் கால் ஜேம்ஸ் மில்ஸ் எழுதிய இந்தியன் ஸ்டாக் ஓனர்ஸ் மானுவல் (Indian Stock Owner's manual) என்னும் நூலை 'இந்து தேசத்து கால்நடைக்காரர்' என்ற பெயரில் 1885இல் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இதுதான் தமிழில் வெளிவந்த முதல் கால்நடை மருத்துவ நூல்.
பின்னர், கால்நடை மருத்துவம் பயின்று, தமிழகத்தில் கால்நடை மருத்துவத்தின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் கல்விச் சிறப்புக்காக, 'கில்லத்' என்ற பட்டமும், சமூகத் தொண்டிற்காக, 'ராவ் சாகிப்' என்ற பட்டமும் கொடுத்தது பிரிட்டிஷ் அரசு.
இவர் எழுதிய நூல்களில், 'கம்பராமாயண சாரம், கோம்பி விருத்தம், அகலிகை வெண்பா' போன்றவை முக்கியமானவை. அண்ணாமலை ரெட்டியார், மீனாட்சிசுந்தரம், அழகிய சொக்கநாதப் பிள்ளை போன்ற முக்கிய ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.
- ராஜசியாமளா
