PUBLISHED ON : அக் 28, 2019

சீவகசிந்தாமணியை எழுதிய திருத்தக்கதேவர், 'நரி விருத்தம்' என்ற நூலொன்றையும் எழுதியிருக்கிறார். நரியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூலைப்போலவே, கோம்பியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இன்னொரு நூல், 'கோம்பி விருத்தம்'.
'கோம்பி'யா? அதென்ன?
பச்சோந்தி எனப்படும் கேமலியான் (Chameleon) தான் கோம்பி. தான் இருக்கும் இடத்துக்கேற்பத் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும். இந்த விலங்கை மையமாகக் கொண்டு மெர்ரிக் (Merrick) என்ற ஆங்கிலப்புலவரால் எழுதப்பட்ட ஒரு சுவையான ஆங்கிலப் பாடலின் மையக்கதையைப் பின்பற்றிக் 'கோம்பி விருத்தம்' எழுதியவர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணியர்.
இரண்டு பயணிகள், ஒரு பாலைவனத்தில் நடந்துசெல்கிறார்கள். வெம்மை அதிகமானதால் களைத்துப்போகிறார்கள். அவர்களுக்கு மிகவும் தாகமெடுக்கிறது, ஆனால், அக்கம்பக்கத்தில் எங்கும் தண்ணீரில்லை.
இந்நிலையில், அவர்கள் ஒரு சோலையைக் காண்கிறார்கள். மகிழ்ச்சியுடன் அதனுள் நுழைகிறார்கள். அங்கிருந்த நீர்நிலையில் நீர் அருந்துகிறார்கள்.
அப்போது, நீலவானத்தின் நிழல் நீரில் தெரிகிறது. அவர்களில் ஒருவர் சொல்கிறார், ''அடடா, கோம்பியைப்போல் இந்த வானமும் நீல நிறத்தில் உள்ளது''
மற்றவர் இதை மறுக்கிறார், ''கோம்பியின் நிறம் பச்சையானது'' என்கிறார். இருவரும் மாறிமாறிச் சண்டையிடுகிறார்கள்.
அப்போது, அங்கு இன்னொருவர் வருகிறார். இவர்களுடைய வாதங்களைக் கேட்டுச் சிரிக்கிறார் ''நீங்கள் இருவர் சொல்வதும் தவறு. கோம்பியின் நிறம் கருப்பு'' என்கிறார். ''சற்றுமுன்புதான் நான் ஒரு கோம்பியைப் பிடித்தேன், அது கருப்பு நிறமாகத்தான் இருந்தது. இதோ, நீங்களே பாருங்கள்'' என்றபடி தன் மடியிலிருந்த கோம்பியை விடுவிக்கிறார். ஆனால், அந்தக் கோம்பி கருப்பாக இல்லை. வெண்மையாக இருந்தது. மூவரும் திகைத்தனர்.
ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு நிறத்துடன் இருக்கும் இயல்பைக்கொண்டது கோம்பி. இது தெரியாமல் மூவரும் தாங்கள் கண்ட நிறம்தான் கோம்பியின் இயற்கையான நிறம் என்று நினைத்துச் சண்டையிட்டுக் கொண்டார்கள். ஆராயாமல் தாங்கள் எண்ணியதே உண்மை என்று நம்பிவிட்டார்கள்.
யார் எதைச் சொன்னாலும் உடனே நம்பிவிடக்கூடாது, அது உண்மையா என்று அறிவதுதான் மெய்யான அறிவு. இல்லாவிட்டால் கோம்பியின் நிறம் நீலமா, பச்சையா, கருப்பா என்று ஒவ்வொருவரும் சண்டையிட்டுத் தோற்றுப்போக வேண்டியதுதான் என்கிறது கோம்பி விருத்தம்.
இந்தக் கதை ஆங்கிலக் கவிஞருடையதாக இருக்கலாம்; ஆனால், அதன் சாரமாக வெள்ளக்கால் ப.சுப்பிரமணியர் சுட்டும் பகுதி நம்முடைய திருக்குறளில் உள்ளது:
'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு'
- நாகா
